"விசாரணைக் குழு விசாரிக்க வரவில்லை" - தவெக சி.டி.ஆர். நிர்மல்குமார் பேட்டி!
தண்ணீரை முறைப்படி காய்ச்சிக் குடிப்பது எப்படி?
மூச்சிரைக்க விளையாடிவிட்டு, வரும் வழியில் கிணற்றிலோ, தெருக்குழாயிலோ தண்ணீர் குடித்த காலம் இன்று இல்லை.
இன்று நாம் குடிக்கும் தண்ணீரில் இருந்து உண்ணும் உணவு வரை அனைத்துமே ரசாயனக் கலப்பாகிவிட்டது. வீட்டில் காய்ச்சி ஆறிய தண்ணீரைக் குடித்துவிட்டு வேறு இடங்களுக்கோ, விசேஷங்களுக்கோ செல்லும்போது அங்குள்ள தண்ணீரைக் குடித்தால், அடுத்த நாளே சளிபிடித்துவிடுகிறது.

மினரல் வாட்டர் என்று பாட்டில்களில், கேன்களில் கிடைக்கும் தண்ணீரைக் குடித்துப் பழகிவிட்டோம். உண்மையில் அதில் ஊட்டச்சத்துக்கள் உள்ளனவா, சுத்தப்படுத்துகிறோம் என்ற பெயரில் தண்ணீரில் உள்ள சத்துக்கள் நீக்கப்பட்டு வெறும் சக்கையான நீரைத்தான் பருகுகிறோமா என்று பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. நீரின் தன்மை பற்றி சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் எழிலனிடம் கேட்டோம்.
'நம் உடலில் 50 முதல் 60 சதவிகிதம் வரை நீர்தான். ஒரு மனிதனுக்கு சராசரியாகத் தேவைப்படும் தண்ணீரின் அளவு என்பது அவனுடைய உடல், வாழும் இடத்தின் சுற்றுச்சூழல், வேலை ஆகியவற்றைப் பொறுத்து வேறுபடும்.
ஒருவருடைய உடல் எடையை வைத்து, அவருக்குத் தேவைப்படும் தண்ணீரின் அளவைக் கணக்கிடலாம். அந்தக் காலத்தில் இயற்கையிலேயே மூலிகைகள் கலந்த, சூரிய ஒளிபட்ட, கிருமிகளை மீன் தின்று சுத்தம் செய்த நீரைத்தான் குடித்து வந்தோம்.
அப்படிப்பட்ட சுத்தமான தண்ணீர், இன்று மனிதர்களால் மாசுபட்டுள்ளது. நம் நாட்டில், சுத்தமான குடிநீர் என்பது வெறும் 33 சதவிகிதம் மட்டுமே. இதனால்தான் கிருமியால் ஏற்படும் இறப்பு விகிதம் அதிகரித்திருக்கிறது.
தண்ணீரைக் கொதிக்க வைக்கும்போது, 99.9 சதவிகிதம் பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் அழிகின்றன. ஆனால், பலருக்கு முறையான கொதிக்கவைத்தல்’ பற்றிச் சரியான புரிதலோ வழிகாட்டுதலோ இல்லை.
தண்ணீரை அடுப்பில் வைத்து, லேசாகச் சூடு வந்ததுமே அடுப்பை அணைத்துவிடுகின்றனர். நீரை நன்றாகக் கொதிக்கவைத்து, குமிழ்கள் வரும்போது, அந்தக் கொதிநிலையிலேயே 10 நிமிடங்கள் இருக்கவேண்டும்.
இந்த நீரை ஆறவைத்து, வடிகட்டி அன்றே குடித்துவிட வேண்டும். முதல் நாள் காய்ச்சிய நீரை மறுநாள் பருகுவதால், எந்த நன்மையும் இல்லை.
மேலும், பானையில் வைத்திருக்கும் நீராக இருந்து, ஒவ்வொரு முறையும் கையை விட்டு்த் தண்ணீரை எடுக்கும்போது, நம் கை மூலம் சில கிருமிகளை உள்ளே விடுகிறோம். எனவே, தண்ணீரை முகந்து குடிக்காமல், ஊற்றிக் குடிப்பதுதான் நல்லது' என்கிறார் டாக்டர் எழிலன்.



















