செய்திகள் :

தனி தீர்மானம்: `வாழ்வாதாரத்தை வேரறுக்கும் முடிவு; மகாத்மா பெயரிலேயே திட்டம் தொடர வேண்டும்' ஸ்டாலின்

post image

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்பான மாநில அரசின் தனித் தீர்மானத்தை, முதலமைச்சர் ஸ்டாலின் முன்மொழிந்தார். அதைத் தொடர்ந்து உரையாற்றிய அவர், ``மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் உள்ள கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை, மாநிலங்களின் நிதி கட்டமைப்பை, உள்ளாட்சி அமைப்புகளின் சுய சார்புத் தன்மையை, கிராமப்புற மகளிருக்கான வேலைவாய்ப்பைக் குலைக்கும் வண்ணம் ஒன்றிய அரசு அண்மையில் நிறைவேற்றியுள்ள மகாத்மா காந்தி ஊரக உறுதித் திட்டத்திற்கு மாற்றாக கொண்டுவந்துள்ள புதிய திட்டம் குறித்து இந்தப் பேரவையில் தங்கள் அனுமதியோடு சில முக்கிய விவரங்களை தெரிவிக்க விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாட்டில், உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் திட்டமாக இருந்தாலும், நலிவுற்ற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டமாக இருந்தாலும், அனைத்து திட்டங்களும் இது மாநில அரசின் திட்டம், ஒன்றிய அரசின் திட்டம் என்ற பாகுபாடு இல்லாமல் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் பல முன்னோடித் திட்டங்களில் இந்திய அளவில், தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் முதன்மையாக இருப்பதோடு, பல்வேறு ஒன்றிய அமைச்சகங்களின் பாராட்டுக்களையும் தொடர்ந்து பெற்றுவருகின்றது. இருப்பினும், ஒன்றிய அரசு, தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே கொள்கையாகக் கொண்டுள்ளது என்பதை நாம் தொடர்ச்சியாகக் கண்டு வருகிறோம்.

100 நாள் வேலைத்திட்டம்
100 நாள் வேலைத்திட்டம்

எந்தவொரு ஒன்றிய அரசின் திட்டமானாலும், பணி முன்னேற்றத்திற்கு ஏற்ப நிதி விடுவிப்பதை செய்யாமல் உடனடியாக நிதி விடுவிப்பதை வேண்டுமென்றே தவிர்த்து, காலதாமதத்தை ஏற்படுத்தி, தமிழ்நாட்டின் வளர்ச்சியில் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு ஒன்றிய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திலும், கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில், 2025-2026 ஆம் ஆண்டில் தொழிலாளர் மதிப்பீடு மற்றும் நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவாகவே வழங்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ.1,026 கோடி ஊதியத்திற்கான தொகையும், ரூ.1,087 கோடி பொருட்கூறுக்கான தொகையும் இன்றுவரை விடுவிக்கப்படாமலேயே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இதே நிலைதான். வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் உயிர் நீர்த் திட்டத்திலும் இதுவரை ரூ.3,112 கோடி நிதி விடுவிக்கப்படாமல் பல மாதங்களாக நிலுவையில் உள்ளது. பிரதம மந்திரி கிராமச் சாலை திட்டத்தில் ரூ.516 கோடி இன்னும் நிதி விடுவிக்கப்படாமல் உள்ளது.

இப்படி இவர்கள் தாமதிப்பதால் பாதிக்கப்படுவது யார்? தமிழ்நாட்டின் கிராமப் பகுதிகளில் வாழக்கூடிய எளிய மக்கள் மற்றும் விவசாயிகள்தான். நம் மாநிலத்தின் மீது ஏன் இந்த ஓரவஞ்சனை என்றுதான் நாம் கேட்கிறோம். இந்த வஞ்சனையை எல்லாம் விஞ்சக்கூடிய அளவிற்கு, தற்போது ஒன்றிய அரசு, கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு வேரறுக்கக்கூடிய வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தினை மாற்றி, அதற்குப் பதிலாக “வளர்ச்சியடைந்த இந்தியா – ஊரக வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம்” என்று தமிழில் பொருள்படும் VB-G RAM G என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தி உள்ளது.

ஏற்கெனவே இருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு, ஊரகப் பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 100 நாட்கள் வேலையை உறுதி செய்தும், சராசரியாக, ஒவ்வொரு ஆண்டும் 65 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 74 லட்சம் தொழிலாளர்கள் தங்கள் உடலுழைப்பைத் தந்து பயன்பெற்று வந்தனர். இதில் 85 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இந்நிலையில், புதிதாக அறிமுகப்படுத்தப்படும் VB-G RAM G திட்டத்தை, அறிமுக நிலையிலேயே நமது நடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள். அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றாகக் குரல் எழுப்பியிருக்கிறது. எனினும் மக்கள் குரலை மதிக்காத ஒன்றிய அரசு, அந்தத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிவிட்டது. இந்தப் புதிய திட்டமானது, மக்களின் தேவையின் அடிப்படையிலே அமைக்கப்படவில்லை. இதுகுறித்து நான் ஏற்கெனவே மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு கடந்த 18.12.2025 அன்று கடிதம் எழுதியிருக்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த புதிய வளர்ச்சியடைந்த இந்தியா – ஊரக வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்புக்கான உரிமை என்ற அடிப்படையில் இல்லாமல், ஒன்றிய அரசால் நிர்ணயிக்கப்படவுள்ள உத்தேச ஒதுக்கீட்டின் படி வேலை வழங்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தங்கள் அனுமதியோடு இப்பேரவையில் பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றித் தருமாறு கேட்டு நான் முன்மொழிகிறேன்.

அரசினர் தனித் தீர்மானம்

"மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம், 2005-ன்படி, கிராமப்புற மக்களின் வேலைக்கான உரிமை (Right to Work) நிலைநாட்டப்பட வேண்டுமென்றும், மக்களின் வேலைக்கான தேவைக்கேற்பவும் (Demand for Employment) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மாநில செயல்திறன் அடிப்படையிலும் தொடர்ந்து நிதியொதுக்கீடு செய்வது உறுதி செய்யப்பட வேண்டுமென்றும்;

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் பெரும்பான்மையாக பலனடைந்து வந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதுகாக்கப்பட, சமூகப் பாதுகாப்பினை உறுதி செய்திட முந்தைய ஆண்டுகளின் ஒதுக்கீட்டிற்குக் குறையாமல் ஒதுக்கீடு செய்யப்படுவது உறுதி செய்யப்பட வேண்டுமென்றும்;

‘ஊரக வேலை உறுதித் திட்டம்’ -

உத்தேச மதிப்பீட்டின் அடிப்படையில் தன்னிச்சையாக ஒன்றிய அரசு நிதியொதுக்கீடு செய்யும் எனவுள்ள தற்போதைய புதிய நடைமுறையைக் கைவிட்டு, ஏற்கெனவே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் பின்பற்றப்பட்ட வேலைக்கான தேவைக்கேற்ப நிதியொதுக்கீடு செய்யும் நடைமுறையைத் தொடர வேண்டுமென்றும், மேலும், கூட்டாட்சி தத்துவத்திற்கு மதிப்பளித்து, மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டினை, வேலைக்கான தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கும் வழிமுறையை மாநில அரசே வகுத்துக்கொள்ள அனுமதியளிக்க வேண்டுமென்றும்;

இப்புதிய திட்டத்தில் மாநில அரசின் நிதிப்பங்களிப்பு 40 சதவிகிதமாக உயர்த்தப்படுகையில் மாநில அரசின் நிதிச்சுமையை கணிசமாக அதிகரிப்பதாக உள்ளது. எனவே, புதிய திட்டத்திற்கான நிதிப்பங்களிப்பு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான நிதிப்பங்களிப்பினைப் போலவே திருத்தி அமைக்கப்பட வேண்டுமென்றும்;

தமிழ்நாடு சட்டமன்றம்

தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பெயரை நீக்கி, பல்வேறு உள்நோக்கங்களைக் கொண்டு இத்திட்டத்திற்கு 'வளர்ச்சியடைந்த இந்தியா - ஊரக வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார இயக்கம் - ஊரகம் (VB-G-RAM-G)' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி அவர்கள் இந்த தேசத்திற்கு வகுத்துத் தந்த கொள்கைகளையும், வழிகாட்டிய பாதையையும் எப்போதும் நினைவுகூரும் வகையில் இத்திட்டம் மகாத்மா காந்தி பெயரிலேயே தொடர வேண்டுமென்றும் ஒன்றிய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்திய நாட்டின் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் 2005-இன் விதிமுறைகளின்படியே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்ற வகையில் மேற்படி தீர்மானத்தை இந்தச் சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றித் தரவேண்டும் என்று அனைத்து உறுப்பினர்களையும் தங்கள் வாயிலாக கேட்டு அமைகிறேன்" என்றார்.

வருமான வரித் தாக்கலில் இனி உங்களுக்கு Form 16 'இல்லை' சம்பளதாரர்களே! மாற்று என்ன?

வருகிற ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து புதிய வருமான வரிச் சட்டம் அமலாக உள்ளது. இதனால், வருமான வரிப் படிவத்தில் இருந்து வருமான வரிக் கணக்குத் தாக்கல் வரை... இனி பல புதுப்புது மாற்றங்களைச் சந்திக்க உள்ளோம்... மேலும் பார்க்க

டிமாண்டி சாலை இனி எம்.எஸ்.விஸ்வநாதன் சாலை! - இசை மேதைகளின் பெயரில் சென்னை சாலைகள்!

தமிழகத்தின் திரை மற்றும் இசைத் துறைக்கு ஈடு இணையற்ற பங்காற்றிய பழம்பெரும் கலைஞர்களான எம்.எஸ்.விஸ்வநாதன், சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன் ஆகியோரைக் கௌரவிக்கும் வகையில், அவர்கள் வாழ்ந்த மற்றும்... மேலும் பார்க்க

மைக்கேல்பட்டி பள்ளி மாணவி தற்கொலை வழக்கு: `மதமாற்றம் காரணமல்ல' - விரிவான அறிக்கை தாக்கல் செய்த சிபிஐ

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த லாவண்யா என்ற மாணவி, கடந்த 2022-ம் ஆண்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.சித்தி கொடுமை, பள்ளியில் கொடுத்த கூடுதல் பணி ... மேலும் பார்க்க

`இரவினில் ஆட்டம்; பகலில் தூக்கம்; இதுதான் துணை முதல்வர் உலகம்" - எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அதில், எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசுகையில், "முதல்வர் ஸ்டாலின் அதிமுக, பாஜக-வுக்கு ... மேலும் பார்க்க

``இமய மலையாய் நிமிர வேண்டியவன், அதிமுக-வால் பாதாளத்துக்குச் சென்றேன்" - மனம் வெதும்பி பேசிய வைகோ

ஈரோட்டில் மதிமுக தேர்தல் நிதியளிப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசினார். அப்போது அவர், "கடந்த காலத்தில் நான் சில பிழைகளைச் செய... மேலும் பார்க்க

பாஜக-வை எதிர்க்காத விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணியா? - குழப்பத்தில் கதர்கள்!

2024 நாடாளுமன்றத் தேர்தலில் விலகிச் சென்ற அ.தி.மு.க-வை, என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டுவந்த டெல்லி பா.ஜ.க., 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியை வீழ்த்த பல்வேறு அஸ்திரங்களை கையிலெடுத்திருக்... மேலும் பார்க்க