ஆற்காடு: "அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்திக் கொடுங்க" - தவெக அமைச்சர்களைச் சந்...
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் 'குழந்தைத் திருமணம்' - அப்போ, ஹெல்ப் லைன், கடுமையான சட்டங்களின் பயன்?
இந்தியாவில் பெண் 18 வயதிற்கு உட்பட்டவராகவும், ஆண் 21 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்கும்பட்சத்தில் அவர்களுக்குத் திருமணம் நடந்தால், அது 'குழந்தைத் திருமணம்' என்று அழைக்கப்படுகிறது.
குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதற்கு 1098, 181 போன்ற உதவி எண்களையும் மக்களுக்காக அரசு உருவாக்கியுள்ளது. ஆனால், இந்த எண்களையெல்லாம் மக்கள் விழிப்புணர்வோடு பயன்படுத்துகிறார்களா? குழந்தைத் திருமணம் குறைந்து விட்டதா? இப்படி கேள்விகள் பல...

கோயம்புத்தூரில் 2020-ம் ஆண்டு மட்டும் 50 குழந்தைத் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை 2021-ல் 146, 2022-ல் 109, 2023-ல் 63, 2025-ல் 174 என அதிகரித்துள்ளன.
66 குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டு இருப்பதாக தரவுகள் கூறுகின்றன. மாநில குழந்தைகள் உதவி எண்கள் 170 முதல் 200 குற்றங்களை ஒரு மாதத்தில் மட்டுமே பதிவு செய்கின்றன.
சமீபத்தில் நெல்லையிலும் மகாலட்சுமி என்கிற பெண் பிரசவத்திற்குப் பிறகு பத்தாம் நாளில் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் இறந்துள்ளார்.
இவ்வாறு இளம்வயது திருமணம் மற்றும் இளம்வயதில் கர்ப்பம் என நடக்கும் இன்றைய நிகழ்வுகள் நம்மை கவலைப்படச் செய்கிறது.
இப்படி நிகழும் குழந்தைத் திருமணங்கள் மற்றும் இளம்வயது கர்ப்பம் பற்றி மக்கள் கல்வி மற்றும் தகவல் அலுவலர் அ.ச. ரமேஷிடம் பேசினோம்.
"ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை 'National Population Health Survey' மத்திய அரசினால் நடத்தப்படுகிறது. இதில் 2014-ம் ஆண்டின் அறிக்கையின்படி, 5.0% என்றும், 2024-ம் ஆண்டு அறிக்கையின்படி, இளம் வயது திருமணம் 6.4% ஆக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 'இந்து' ஆங்கிலப் பத்திரிக்கையில், மூன்று ஆண்டுகளுக்குள் வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரைகளின்படி, இந்தியாவில் 118 மாவட்டங்களில் அதிகமான இளம்வயது திருமணங்கள் நடந்துள்ளன என்று கூறுகிறது.
ஆனால் 118-ல் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டம்கூட இடம்பெறவில்லை.

இதனால் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் இளம்வயது திருமணங்கள் நடக்கவில்லையா? 38 மாவட்டங்களிலும் நிகழ்ந்த குழந்தைத் திருமணங்கள் அரசு இணையதளத்தில் பதிவாகியுள்ளது.
குறிப்பாக திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் தற்போது கோயம்புத்தூரில் அதிகமான இளம்வயது திருமணங்கள் நடந்துள்ளன என்பது கவலைக்குரிய விஷயம்.
தமிழ்நாட்டில் மிகவும் படிப்பறிவில் சிறந்து விளங்கும் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலியிலும் இளம்வயது திருமணங்கள் நடந்தால் என்னவென்று சொல்வது...? மிகவும் ஆபத்தான பாதையில் நம் சமூகம் சென்று கொண்டிருக்கிறது."
இளம்வயது திருமணங்கள் நடைபெற காரணம்?
"முதல் காரணம் வறுமை. ஏழ்மையான குடும்பங்களில் மகளைப் பராமரிப்பது சுமையாகப் பார்க்கப்படுகிறது. இரண்டாவது கல்வியறிவின்மை. மக்களுக்கு குழந்தைத் திருமணம் பற்றியும் போதிய விழிப்புணர்வு இல்லை.
மூன்றாவது சமூகப் பழக்கவழக்கங்கள். நான்காவது பாலின சமத்துவமின்மை. ஐந்தாவது இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகும் மோசமான வீடியோக்கள், உறவுகள் இவற்றால் ஏற்படும் தாக்கத்தால் குழந்தைத் திருமணங்கள் நடைபெறுகின்றன."
18 வயதிற்குப் பிறகு பெண்கள் திருமணம் செய்து கொள்வது சரியா?
21 வயதில்தான் ஒரு பெண் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தாய்மை அடைந்து ஆரோக்கியமான குழந்தையைப் பாதுகாப்பாக பெற முடியும். 21 வயதில்தான் பெண்ணின் கருப்பை வளமை பெறுகிறது.

இளம்வயது திருமணங்களால் ஏற்படும் விளைவுகள்?
1. ஊட்டச்சத்துக் குறைபாடு, பிரசவ காலச் சிக்கல்கள் போன்றவை தாய்க்கும், சேய்க்கும் ஆபத்தான விளைவை ஏற்படுத்தும்.
2. கல்வி தடைபடுதலால் எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் பொருளாதார சிக்கல்கள்.
3. வீட்டு வன்முறை, பாலியல் கொடுமை, மன உளைச்சலுக்கு ஆளாகும் அபாயம் உண்டு
4. கல்வி, வேலை வாய்ப்பு, போதிய வருமானம் இல்லாததால் வறுமைக்கு ஆளாகுதல்.
5. காதல் திருமணங்களால் தாய் தந்தையை இழப்பது.
போன்றவை இளம் வயது திருமணங்களால் ஏற்படுகின்ற விளைவுகள்."
POCSO சட்டத்தில் பெண்ணின் கர்ப்பத்திற்கு மற்றும் இளம்வயது திருமணத்திற்கு காரணமான ஆண் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் அனைவருக்கும் அபராதம் மற்றும் சிறைத் தண்டனை உண்டு.
1098 என்ற தொலைபேசி எண்ணில் அழைத்துக் கூறினால் இளம் வயது திருமணங்கள் அதிகாரிகளின் மூலமாகத் தடுக்கப்படும்.
இது குறித்து பள்ளிகள், கல்லூரிகளில் குடும்பநலத் துறை, சமூகநலத்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகள் இணைந்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன" என்று நெல்லை மக்கள் கல்வி & தகவல் அலுவலர் தெரிவித்தார்.



















