அவனியாபுரம் பாரம்பர்ய ஜல்லிக்கட்டு: சீறிப் பாய்ந்த காளைகள், சாகசம் காட்டிய வீரர்...
தலைவர் தம்பி தலைமையில் விமர்சனம்: இரு வீட்டுச் சண்டையில் மாட்டிக்கொள்ளும் ஊர்த் தலைவர்!
ஊர் பஞ்சாயத்துத் தலைவராக இருக்கும் ஜீவரத்தினம் (ஜீவா), அடுத்த தேர்தல் நெருங்குவதால் ஓட்டுகளைப் பெறும் நோக்கத்திலேயே இருக்கிறார். அப்படியான வேளையில், அந்த ஊரில் வசிக்கும் இளவரசுவின் (இளவரசு) மகளான செளமியாவுக்கு (பிரார்த்தனா நாதன்) திருமணம் நடைபெறவிருக்கிறது. திருமண ஏற்பாடுகளை முன்னின்று செய்தால், ஓட்டுகளைப் பெற்றுவிடலாம் என்ற எண்ணத்தில் திருமண வேலைகளைத் தடபுடலாகக் கவனிக்கிறார் ஜீவரத்தினம். இளவரசுக்குப் பக்கத்து வீட்டில் வசிக்கும் மணி (தம்பி ராமையா), இளவரசு மீது தீராத பகை கொண்டிருக்கிறார். பொழுது விடிந்தால் இளவரசுவின் மகளுக்குத் திருமணம் நடைபெறவிருக்கும் சூழலில், உடல்நலம் சரியில்லாமல் இருக்கும் மணியின் தந்தை காலமாகிவிடுகிறார்.
முகூர்த்தம் நடைபெறவிருக்கும் அதே நேரத்தில், மணி தன்னுடைய தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் எனப் பிடிவாதமாக இருக்கிறார். ஊர்த் தலைவர் தலைமையில் திருமணம் திட்டமிட்டபடி நடைபெற்றதா, மணியின் தந்தைக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றதா என்பதை காமெடி டிரீட்மென்ட்டில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் நித்திஷ் சகதேவ்.
ஊர்த் தலைவராகப் பந்தா காட்டும் முகம், ஓட்டு பெறும் நோக்கத்தில் நைச்சியமாகப் பேசும் விதம், நான்கு திசைகளிலும் பிரச்னைகள் வலுக்க, பரபர டென்ஷனோடு ஓடும் முகம், பலத்த சிரிப்போடு மெசேஜ் உணர்த்தும் பக்கம் என நடிப்பில் பன்முகம் காட்டி வாகை சூடுகிறார் ஜீவா. வெல்டன் தலைவர் தம்பி! ஆனால், ஊர் பக்கம் நிகழும் கதைக்களத்தில் ஆங்காங்கே எட்டிப் பார்க்கும் சென்னை வட்டார வழக்கைத் தடுத்து நிறுத்தியிருக்கலாமே?! திருமணம் நின்றுவிடுமோ, மணி நினைத்ததைச் சாதித்துவிடுவாரோ எனப் பயத்தில் பதைபதைப்புடன் சுற்றும் இளவரசு அவருக்கென தைக்கப்பட்ட அளவு சட்டையில் சரியாகப் பொருந்திப் போயிருக்கிறார்.
பக்கத்து வீட்டுக்காரரிடம் பகைக் கொண்டு ரகளைகள் செய்யுமிடம், நாக்கை துருத்திக் கொண்டு சாமியாடும் இடம் என வழக்கமான தம்பி ராமையா தென்பட்டாலும், தன் அனுபவ நடிப்பால் கதாபாத்திரத்தைச் சுவாரஸ்யமாக்கி இருக்கிறார். அப்பாவின் உடல் முன் அவருடனான நினைவுகளைப் புரட்டி அப்பாவித்தனத்துடன் இவர் அடிக்கும் ஒன்லைனர்கள் அடிப்பொலி காமெடி எபிசோடு!

சுற்றியிருக்கும் ஆண்கள் கொடுக்கும் அழுத்தத்தினால் பாதிக்கப்படும் பெண்ணாக பிரார்த்தனா நாதன் நடிப்பில் நல்லதொரு பங்களிப்பைத் தந்திருக்கிறார். 'எனக்குக் கல்யாணம் நடக்கிறது உங்களுக்கு முக்கியமில்ல. இங்க உங்களுக்குப் பகைதான் முக்கியம்' என வசனம் பேசுமிடத்தில் படம் பேசும் மையக்கருவை உணர்த்தி சிந்திக்கவும் வைக்கிறார். இவர்களைத் தாண்டி பதவி ஆசையுடன் சுற்றும் ஜென்சன் திவாகர், கன்னியாகுமரி வட்டார வழக்கில் பேசும் சர்ஜின் குமார், மாப்பிள்ளையாக சுபாஷ் கண்ணன், ராஜேஷ் பாண்டியன் ஆகியோர் படத்தின் 'ஹா ஹா' பக்கங்களை வெற்றிகரமாகக் கரை சேர்க்கும் துடுப்புகளாக மிளிர்கிறார்கள்.
ஒற்றுமையை உணர்த்தும் வானம், வெள்ளை நிறத்தில் ஜொலிக்கும் ஆடைகளுக்கு இடையே தொங்கும் கரை படிந்த சட்டை எனச் சட்டகத்தில் கதை சொல்கிறார் ஒளிப்பதிவாளர் பப்லு அஜு. அதிலும் களைகட்டும் கலர்ஃபுல் லைட்டிங், இரவு நேரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் லைட்டிங் என எங்கும் கச்சிதமான பணியைச் செய்து கவனம் பெறுகிறார். முதல் பாதி முழுவதும் கலகல காமெடி, இரண்டாம் பாதியில் கலகலப்புடனேயே சொல்லப்படும் மெசேஜ் எனச் சுறுசுறுப்பாகப் படத்தை நகர்த்தியிருக்கிறார் படத்தொகுப்பாளர் அர்ஜுனே பாபு.
இசையமைப்பாளர் விஷ்ணு விஜய், பாடல்களில் கொடுத்திருக்கும் டிரீட்மென்ட் மைக்செட் கிழியும் அதிரடி! நாதஸ்வரம் உதவிக்கொண்டு காமெடி காட்சிகள் இடையிடையே இவர் அமைத்திருக்கும் பின்னணி இசையும் படத்தைச் சோர்வடைய வைக்காமல் ஃபுல் எனர்ஜியுடன் நகர்த்தியிருக்கிறது. வெல்கம் டு கோலிவுட் சேட்டா!

ஒரு பக்கம் திருமண வீடு, மற்றொரு பக்கம் சாவு வீடு, இதற்கிடையே பகை என்கிற நீண்ட பள்ளத்தில் சிக்கித் திண்டாடும் ஊர்த் தலைவர் என ஒரே இரவில் நடக்கும் கதையை, சுவாரஸ்ய சினிமாவாக பரிமாறியிருக்கிறார் இயக்குநர் நித்திஷ் சகதேவ். எங்கும் சுவாரஸ்யம் குறையாமல் ஒரே அலைவரிசையில் நம்மை வைத்துக் கொள்ளும்படியான கதாபாத்திர வடிவமைப்புகள், திரைக்கதை ஓடும் வேகத்திற்குத் தடுமாறி விழுந்துவிடாமல் அடுத்தடுத்து எதிர்பார்ப்புடன் நகர வைக்கும் பரபர உணர்வு ஆகியவற்றை மிகக் கச்சிதமாகக் கட்டமைத்திருக்கிறார்கள் திரைக்கதையாசிரியர்கள் சஞ்சோ ஜோசஃப், நித்திஷ் சகாதேவ், அனுராஜ்.
பெண்கள் பேசுவதைத் துளியும் செவியில் வாங்கிக் கொள்ளாமல், தான் நினைத்ததே சரி என நம்பும் ஆண்களின் மனநிலை, அவர்கள் கொடுக்கும் அழுத்தத்தினால் பாதிப்படையும் பெண் என்பதையும் திரைக்கதையில் அழுத்தம் மிகுந்த வகையில் பதிவுசெய்தமைக்குப் பாராட்டுகள். 'ஆம்பளைங்களுக்கு கொம்புதான் இல்ல' என்பது போன்ற வசனங்களும் அடிப்பொலி மெட்டீரியல்! அதிலும், யார் தேடியும் கிடைக்காத மணப்பெண்ணைக் கண்டுபிடிக்கும் நாய்க்கு வைக்கப்பட்டிருக்கும் அர்னால்டு என்கிற பெயர், பகை கொண்டு அடித்துக் கொண்டிருக்கும் இரு வீட்டாருக்கும் க்ளாஸ் எடுத்துவிட்டுத் திரும்பும்போதும், ஊர்த் தலைவரின் 'தொலைநோக்கி' சின்னத்தைப் பதிவு செய்தது ஆகியவை அழகிய ஹைக்கூக்கள்!
ஒருமைப்பாடு என்ற மெசேஜ் உணர்த்தும் இப்படைப்பில் மலையாள சினிமாவின் நறுமணம் ஹெவியாகவே அடிக்கிறது. கலகலவென கதை சொல்லிக் கொண்டிருக்கும்போது திடீரென இரண்டாம் பாதியில் அதீதமாக கருத்தூசி போடும் வழக்கமான மெசேஜ் படைப்புகளின் வழித்தடத்தில் ஓட்டம் பிடித்து பள்ளத்தில் சிக்கிக் கொள்வது ஏனோ! மனநலம் பாதிக்கப்பட்டவரைத் தொடக்கக் காட்சியில் கேலி செய்துவிட்டு இறுதியில் அதனை நியாயம் செய்வதாகக் காட்சிகள் அமைத்திருந்தாலும், அது தவறான போக்கே! குக்கூங் கிளாஸ் காமெடி வசனத்தையும் தவிர்த்திருக்கலாம்.
பிரமாண்ட தண்ணி டேங்க் இடிந்து விழுந்து, வீட்டுக்குள் தண்ணீர் ஓடும் ஷாட்களில் கிராபிக்ஸுக்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். என்னதான் சுவாரஸ்யம் என்றாலும் இரண்டே வீடுகள், ஒரு லாட்ஜ், சில வண்டிகள் என இதற்குள் மட்டும் வட்டமடிக்கும் கேமரா, ஒரு கட்டத்தில் அயர்ச்சியைக் கொண்டு வந்துவிடுகிறது.
தலைவாழை இலையில் காமெடி விருந்து வைத்து, அதன் ஓரமாக மெசேஜ் பரிமாறியிருக்கும் இப்படைப்பு நல்லதொரு பொங்கல் ட்ரீட்!



















