”கோவை, மதுரை மெட்ரோ திட்ட விவகாரம்; யார் சொல்வதை நம்புவது என்றே தெரியவில்லை!”- அ...
தாமிரபரணி ஆறு: ”தண்ணீர் எடுக்கும் நிறுவனங்களிடம் லிட்டருக்கு ஒரு பைசாதான் வசூலா?” - ஐகோர்ட் கேள்வி
தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்கும் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து தற்போது வரை ஒரு லிட்டருக்கு ஒரு பைசாதான் வசூலிக்கப்பட்டு வருகிறதா? என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான காமராஜ், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “நான் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் பெறப்பட்ட பதிலில், தாமிரபரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள பல நிறுவனங்கள், நீர் வரி பாக்கியைத் தராமல் சுமார் ரூ.2.50 கோடிக்கு மேல் அரசுக்கு வருவாய் இழப்பினை ஏற்படுத்தியுள்ளன.
தனியார் சிமெண்ட் ஆலை மற்றும் சில நிறுவனங்கள் நீர் வரி பாக்கியைச் செலுத்தாமல் தொடர்ந்து நீரை எடுத்து பயன்படுத்தி வருகின்றன.

இதனால், அரசுக்கு தொடர் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதுடன் சுற்றுச்சூழலும் கடுமையாகப் பாதிக்கிறது. தாமிரபரணி ஆற்றிலிருந்து நீர் எடுத்துவரும் அனைத்து நிறுவனங்களிடமும் நீர் வரி பாக்கியை வசூலித்து அந்த நிதியை மாசுபட்டு வரும் தாமிரபரணி ஆற்றின் பாதுகாப்பு மற்றும் புனரமைப்பிற்குப் பயன்படுத்த வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோர் விசாரித்தனர். பொதுப்பணித்துறை தரப்பில், “அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு லிட்டர் ஒரு பைசா வீதம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், “ஒரு லிட்டர் தண்ணீர் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், அவர்களிடம் லிட்டர் ஒன்றுக்கு ஒரு பைசாதான் இன்று வரை வசூலித்து வருகிறீர்களா? எத்தனை நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்கின்றன.

நாள் ஒன்றுக்கு எத்தனை அளவு தண்ணீர் எடுக்கப்படுகிறது? இதுவரை எடுக்கப்பட்ட லிட்டர் அளவு என்ன? இதற்காக நிர்ணயித்த தொகை எவ்வளவு என மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” எனக் கூறி உத்தரவிட்டுள்ளனர்.


















