செய்திகள் :

தார் பாலைவனத்தின் அபாயகரமான மாற்றம்: பசுமையை சுமக்கும் மணலின் சாபக் கதை!

post image

பாலைவனம் என்றாலே சுட்டெரிக்கும் சூரியன், திசையெங்கும் மணல், தகிக்கும் தாகம், அவ்வப்போது வந்து செல்லும் மணற்புயல், பயணிக்க ஒட்டகம் இப்படித்தான் நம் கண்களில் காட்சி விரியும். ஆனால், கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள்... திடீரென பாலைவனம் சோலைவனமாக மாறிவிட்டால்... திரும்பும் திசையில் ஆடம்பர ஹோட்டல்கள், பசுமை நிலங்கள், வெயிலை முதுகுக்குப் பின்னால் வீசி எறியும் குளிர்ந்த நீர் நிலைகள் என இருந்தால் எப்படி இருக்கும்?

ஒருவேளை பாலைவனம் இப்படி மாறினால் பாலைவனம் இருக்குமா என்பதைக் கடந்து, இயல்பாக இருக்கும் ஒரு நிலப்பகுதி அதன் இயல்புக்கு நேர் எதிர் திசையில் அதை உருமாற்றினால் ஏற்படும் சிக்கல்களை அலசி ஆராய வேண்டிய கட்டாயம், இந்த உலகில் மனிதராக வாழும் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டிருக்கிறது.

ராஜஸ்தான்
ராஜஸ்தான்

இந்த சிக்கலுக்கு உதாரணமாக ராஜஸ்தானின் சாம் பாலைவனம் குறித்து குஜராத் மாநிலம் காந்திநகர் ஐஐடி பேராசிரியர்கள் விமல் மிஸ்ரா, ஹிரேன் சோலங்கி, ராமகிருஷ்ணா நேமானி ஆகியோர் எழுதிய 'Greening of the Thar Desert driven by climate change and human interaction' என்ற கட்டுரை 'பாலைவனச் சோலையின் சிக்கல்' குறித்து விரிவாக ஆராய்கிறது.

உலகின் பழமையான மடிப்பு மலைகளில் ஒன்றான ஆரவல்லி மலைத்தொடர், தென்மேற்கு திசையில் டெல்லி அருகே தொடங்கி, தெற்கு ஹரியானா மற்றும் ராஜஸ்தான் வழியாகச் சென்று தோராயமாக 670 கிமீ தூரம் கடந்து குஜராத்தில் முடிகிறது. மலையின் உயரமான சிகரங்கள் மழைக்காற்றைத் தடுத்து நிறுத்தி மழைப்பொழிவைத் தடுக்கின்றன. அதனால் ஏற்படும் வறண்ட காற்றால் உருவாகுவதுதான் பாலைவனம். இந்தியாவின் தார் பாலைவனம் ஆரவல்லி மலைக்குன்றுகள் தந்த பரிசுகளில் ஒன்று என்றால் அது மிகையல்ல.

ஆரவல்லி மலை
ஆரவல்லி மலை

பாலைவனங்கள் உருவாக மலைகள் மட்டும்தான் காரணமா என்றால் இல்லை. கடலை ஒட்டிச் செல்லும் கடல் நீரோட்டங்களும் இதற்குரிய பொறுப்பை பங்கு போட்டுக் கொள்கின்றன. கடலில் வெப்ப நீரோட்டம், குளிர் நீரோட்டம் என்று இருவகை நீரோட்டங்கள் பாய்கின்றன. வெப்ப நீரோட்டங்கள் செல்லும் பகுதிகளின் மீது நீர்த்திவலைகள் அதிகமாகக் காணப்படும். இந்த நீர்த்திவலைகளைக் காற்று சுமந்து சென்று மழையைப் பொழியச் செய்கிறது. அதாவது வெப்ப நீரோட்டம் செழுமையையும், குளிர்ந்த நீரோட்டம் காற்று வறட்சியையும் ஏற்படுத்துகிறது. எனவே, இதுபோன்ற காரணங்களாலும் பாலைவனம் உருவாகின்றன.

அப்படி உருவான பாலைவனங்களில் ஒன்று ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சால்மர் நகரில் இருந்து தென்மேற்கே சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள சாம் பாலைவனம் (சாம் மணல் திட்டுகள் - Sam Sand Dunes - தார் பாலைவனத்தின் ஒரு பகுதி). மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமாக அறியப்படும் இந்தப் பகுதியைப் பிரிக்கும் சாலையின் ஒரு பக்கத்தில், பாலைவனத்தைப் பசுமைத் தளமாக மாற்றும் முயற்சியிலும், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையிலும் ஏற்படுத்தப்பட்ட கட்டிடங்கள் அமைந்திருக்கின்றன. சாலையின் அந்தப் பக்கம், அலங்கரிக்கப்பட்ட, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் ஒட்டகங்கள். அவற்றை இயக்க பாரம்பரிய உடையில் வாழ்வாதாரத்துக்காகக் காத்திருக்கும் மக்கள் என இப்படியாக மாறியிருக்கிறது அந்த சாம்.

'யாருக்கும் பயனற்ற பாலைவனத்தில் அரசு சுற்றுலாவை மேம்படுத்தி வருமானம் ஈட்டுவதும், நீராதாரங்களை அதிகப்படுத்துவதும் நல்ல விஷயங்கள்தானே' என இந்த விவகாரத்தை எளிதாகக் கடந்துவிட முடியும். ஆனால், காஷ்மீர் மழைக்காடாக மாறினால் எப்படி இருக்கும்? கேரளா பாலைவனமாக மாறினால் எப்படி இருக்கும்? அந்த அளவுக்கு அதிர்ச்சியான மாற்றம்தான் தார் பாலைவனம் சோலையாக மாறுவதும்...

பல நூற்றாண்டுகளாகக் குறைந்த மழையிலும், கடுமையான சூழலிலும் வாழ்ந்த மக்கள், தாவரங்கள், விலங்குகள் அனைத்தும் இப்போது அபாயத்தில் உள்ளன. ஏனெனில் பாலைவனத்தின் தன்மையே மாறிக்கொண்டிருக்கிறது என ஐஐடி பேராசிரியர்கள் எழுதிய அந்த ஆய்வுக் கட்டுரை தெளிவுபடுத்துகிறது.

இந்தியாவின் தார் பாலைவனம் ராஜஸ்தானின் 13 மாவட்டங்கள், வடமேற்கு குஜராத், பஞ்சாப், ஹரியானாவின் சில பகுதிகள், பாகிஸ்தானின் தென்கிழக்கு பகுதிகள் என பரந்து விரிந்து கிடக்கிறது. தார் பாலைவனத்தின் அம்சங்களாக மணல் குன்றுகள், பாறைப் பாதைகள், பருவகால புல்வெளிகள், உப்பு சமவெளிகள் ஆகியவையே பிரதானமாகும்.

தார் பாலைவனம் | சாம் மணல் திட்டுகள்

ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவின் தார் பாலைவனம் 38 சதவிகிதம் பாலைவனப் பசுமையாக்கத் திட்டத்தில் முற்றிலுமாக மாறியிருக்கிறது. அதன் காரணமாக 2001 - 2023 க்கு இடையில் 64% மழைப்பொழிவு அதிகரித்துள்ளது. பாலைவனப் பகுதியில் நிலத்தடி நீர் உயர்வதும், கூடுதல் மழைப்பொழிவும் பாலைவனப் பசுமையாக்கத் திட்டத்தில் முன்னிலை வகிக்கின்றன.

பாலைவனம் என்றாலே தண்ணீர் பிரச்சனை என்பது எழுதப்படாத விதி. பெண்கள் நீண்ட தூரம் நடந்து மண் பானைகளைத் தலையிலும், இடுப்பிலும் சுமந்து தண்ணீர் எடுத்து வந்தனர். அந்தக் களைப்பைப் போக்க அவர்கள் பாடிய பாடல்கள் எல்லாம் 'பனிஹாரி' என்ற நாட்டுப்புறக் கலைகளாக உருவாகியது. பாலைவனப் பிரதேசத்தில் மழை மற்றும் தண்ணீர் வரப்பிரசாதமாகக் கருதப்பட்டது. ஆனால் இன்று அந்த வரம் சாபமாக மாறியிருக்கிறது.

ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தின் பாலைவனக் கிராமமான போலியில் வசிக்கும் விவசாயி, "எதிர்பாராத மழையால் எங்கள் விவசாய நிலம் மூழ்கிவிட்டது. மழை விவசாயத்துக்கு நல்லதுதான். ஆனால் அது தவறான நேரத்தில் வரும்போது சாபமாகவல்லவா மாறிவிடுகிறது" என்றார்.

பாலைவன நீர்நிலை
பாலைவன நீர்நிலை

குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியைச் சேர்ந்த சுஜாபாய் பத்துபாய் ராஜ்புட் (53), "இடைவிடாத மழையால் வயல் உப்பு படிமத்துடன் நீரில் மூழ்கிவிட்டது. இப்போது எங்கள் வயலே உப்பால் அழிந்துவிட்டது. இந்த நிலம் மீண்டும் விவசாயத்துக்குத் தயாராக சில மாதங்கள் ஆகும். என் வாழ்நாளில் இரண்டு வறட்சிகளைக் கடந்து வந்திருக்கிறேன். ஆனால், இந்த சூழலை சமாளிக்கவே முடியவில்லை. இதுவரை நான் பார்த்திடாத சூழல் இது" என்றார்.

மற்றொரு விவசாயி, "என் நிலத்தில் சோளம், மக்காச்சோளம், வேர்க்கடலை, சீரகம், கடுகு என விவசாயம் செய்துவந்தேன். ஆனால், அபரிமிதமான திடீர் மழையால் வயல் நீரில் மூழ்கிவிட்டது. என் வீட்டில் இருந்த 10 பசுக்களை இழந்திருக்கிறேன். இப்போது என் குடும்பம் குறைந்தது 5 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றிருக்கிறது" என்றார்.

பாலைவனப் பசுமையாக்கத் திட்டத்தால் ஏற்பட்ட காலநிலை மாற்றமும், அபரிமிதமான மழையும்தான் விவசாயிகளின் இத்தனை துயரத்துக்கும் காரணம்.

விவசாயம்
விவசாயம்

பலைவனப் பிரதேசத்தில் வசிக்கும் மக்களுக்கு வரப்பிரசாதமான மழை பேராபத்தாக மாறி நிற்கிறது. 2024-ம் ஆண்டு குஜராத்தின் பாலைவனப் பகுதியில் 473.7 மி.மீ மழை பதிவாகியிருக்கிறது. இது இயல்பை விட 32% அதிகம். ராஜஸ்தான் மாநிலத்தில் 452.2 மி.மீ மழை பெய்திருக்கிறது. இது இயல்பைவிட 52% அதிகம். குறிப்பாக மேற்கு ராஜஸ்தானின் தார் பகுதியில் இருக்கும் 10-ல் 6 மாவட்டங்களில் 60% மேல் மழை பதிவாகியிருக்கிறது.

2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மத்தியில் இந்தியாவின் 7வது வறண்ட மாவட்டமாக இருந்த ஜெய்சால்மர், திடீரென்று நாட்டின் 8வது மழைப்பொழிவு மாவட்டமாக மாறியிருக்கிறது. இது தவிர, ராஜஸ்தானின் பாரம்பரிய அடையாளங்களான பிகானரில் இருக்கும் ஜுனாகர் கோட்டை, யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்ட ஜெய்சால்மரின் சோனார் கோட்டை ஆகியவையும் அதிக மழையால் சேதமடைந்திருக்கிறது.

இந்தப் பிரச்சனைகள் குறித்துப் பேசிய பிகானரின் பாலைவன வள மைய தலைவர் அன்ஷுல் ஓஜா, "ஒழுங்கற்ற மழை. சில இடங்களில் கனமழை, பல இடங்களில் அரிதாக மழை. பாலைவனத்தில் தண்ணீர் பற்றாக்குறைக்குப் பதிலாக, இப்போது அதிக தண்ணீர் இருப்பது பிரச்சனையாகிவிட்டது! அதிக தண்ணீர் கிடைக்கும் இடங்களில் கோதுமையும், சில இடங்களில் ஆப்பிளும் கூட விளைவிக்கிறார்கள். இந்தப் பகுதி விவசாயம் மூன்று மாத பருவமழை சுழற்சிக்கு மட்டும் நடக்கும். இப்போது அப்படியல்ல.

இந்திராகாந்தி கால்வாய்
இந்திராகாந்தி கால்வாய்

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட பாலைவனம் தார் பாலைவனம். இங்கு 1980-களில் செயல்படுத்தப்பட்ட இந்திராகாந்தி கால்வாய் மூலம் பல நன்மைகள் ஏற்பட்டிருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ராஜஸ்தான் தன் அடையாளத்தை இழந்து நிற்கிறது. கால்வாய் நீர் பாசனப் பகுதிகளைப் பார்வையிட்டால் அது பஞ்சாபைப் போல காட்சியளிக்கும். திடீர் வளர்ச்சிப் போல தோற்றமளிக்கும் இந்த மாற்றங்களால், பாரம்பரிய உணவு பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. குற்றங்கள், போதைப் பொருள் பயன்பாடு அதிகரிக்கத்தொடங்கிவிட்டது. அவ்வளவு ஏன் மக்களின் இலட்சியங்களுக்கு இடையேயான வித்தியாசத்தையே நீங்கள் காண்பீர்கள்" என்றார்.

ஐஐடி ஆய்வாளர்கள் இந்தப் பிரச்சனையின் மற்றொரு சிக்கலின் மீதும் வெளிச்சம் பாய்ச்சுகின்றனர். அது தார் பாலைவனப் பகுதிகளில் உருவாகும் புதிய நோய்கள். குறிப்பாகக் கடுமையான வறண்ட பூமியான பாலைவனத்தில், ஈரப்பதத்துக்கான இருப்பு குறைவு. அதனால், கொசுக்கள் மற்றும் மலேரியா போன்ற தொல்லைகள் இருந்ததில்லை. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மலேரியாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

இது தொடர்பாகப் பிகானீர் துங்கர் கல்லூரியின் விலங்கியல் துறை தலைவர் டாக்டர் பிரதாப் சிங் கட்டாரியா, "பாலைவனத்தில் மலேரியா முன்பு இருந்ததில்லை. இந்திரா காந்தி நஹர் திட்டம் புதிய நீர்நிலைகளை உருவாக்கியது, அவை கொசுக்களின் இனப்பெருக்க இடங்களாக மாறின. இன்று, நோய்க்கிருமிகளால் பரவும் நோய்கள் இப்பகுதியில் ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளன.

ராஜஸ்தான்
ராஜஸ்தான்

இந்திரா காந்தி கால்வாயின் முதல் கட்டப் பணிகள் நிறைவடைந்த 7 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 1990 களில் தார் பாலைவனத்தில் திடீரெனப் பரவிய மலேரியாவுக்கு 48 பேர் பலியாயினார்கள். 1994-ல் மலேரியாவால் 96 பேர் உயிரிழந்தனர். 2003-ம் ஆண்டு மழைபெய்யாதபோதும் மலேரியா பரவியது.

அதுமட்டுமில்லாமல் ஆடுகள், பசுக்கள், ஒட்டகங்கள் புதிதாக உருவாக்கப்பட்ட நீர் நிலைகளில் தண்ணீர் குடிக்கின்றன. அந்த விலங்குகளுக்குத் திடீரென தோல் நோய்கள் பரவத் தொடங்கியது. புதிய வைரஸ் அச்சுறுத்தல் - LSD (Lumpy Skin Disease) ஏற்பட்டது. இதனால் ஏராளமான கால்நடைகள் உயிரிழந்தன. குறிப்பாகக் குஜராத் ரான் ஆஃப் கட்ச் பகுதியில் மட்டும் 6000 மாடுகள் வரை இறந்திருக்கின்றன.

ஆரம்பத்தில் விவசாயத்தின் பசுமையாக்கலும், விரிவாக்கமும் நன்மைபயக்கும் என்றுத் தோன்றினாலும், நீண்ட காலத்துக்குப் பிறகு கிராமவாசிகளும், ஏழைகளும் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. விவசாயிகள் பயிர் செய்முறையைப் கற்றுக்கொள்ளவும், இதனால் ஏற்படும் சிக்கல்களைப் புரிந்துகொள்ளவும் நீண்ட வருடங்கள் ஆகும்" என்றார்.

இந்த சூழலுக்குக் காரணம் என்ன என்பதைக் குரு கோபிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக் கழக இணைப் பேராசிரியரும், விலங்கு, சூழலியல் மற்றும் வனவிலங்கு உயிரியல் நிபுணருமான டாக்டர் சுமித் துக்கியா, "பாலைவனம் என்பது ஈரப்பதம் குறைந்தப் பகுதி. குறைந்த மழைப்பொழிவு அந்த சூழலுக்கு ஏற்ற தகவமைப்புடன் உருவாகும் உயிரினங்கள், கடுமையான சூழலையும் எதிர்கொள்ளும் ஆற்றலுடன் இருக்கும் விலங்குகள் வாழும் பகுதி பாலைவனம். அங்கு திடீரென அதிகரிக்கும் ஈரப்பதமும், அதிக மழையும் சிக்கலை ஏற்படுத்துகிறது. அதன் காரணமாக வைரஸ் தொற்று ஏற்பட்டு, நிலைமையைச் சீர்குலைக்கிறது" என்றார்.

'முன்பு விவசாயத்துக்காகக் கரிம உரத்தை நம்பியிருந்தோம். இப்போது நீர் பாசன வசதி கிடைத்ததும் அதிக மகசூலுக்காக யூரியா போன்ற ரசாயணங்களைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறோம். முன்பைவிட அதிக மகசூல் வேண்டுமென்றால், இன்று அதிக யூரியாவைப் பயன்படுத்த வேண்டும். அதனால் பூமி அதிக வெப்பமாகிறது. அது தண்ணீரின் தேவையை இன்னும் கூடுதலாக்குகிறது.

அதே நேரம், இந்திரா காந்தி கால்வாய் திட்டம் நேரடியாக எங்களை வந்துச் சேராது. அது குஜராத் வழியேதான் ராஜஸ்தானுக்கு வரும். குஜராத்தில் நீர் பிடித்தம் போக மீதி இருந்தால்தான் இங்கு தண்ணீர் கிடைக்கும் என்பதால், சில வேளைகளில் பிரச்சனை தீவிரமாகிவிடுகிறது' என்கிறார் புதிய வாழ்க்கை மாற்றத்தால் தவிக்கும் விவசாயி ஒருவர்.

தண்ணீர் இறைக்கும் பெண்கள்
தண்ணீர் இறைக்கும் பெண்கள்

இந்த சிக்கல்களின் அடுத்த கட்டமாக தாவரங்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. ராஜஸ்தானின் மாநில மரமான கெஜ்ரி, கல்பவ்ரிக்ஷா மக்களின் வாழ்க்கை மரம் என அழைக்கப்படுகிறது. இது காய்கறிகள் கிடைக்காத, கடும் வறட்சியான நிலையிலும், கடும் வெப்பத்தைத் தாங்கும் மரம். இந்த மரத்திலிருந்துதான் பாரம்பரிய பாலைவன உணவான சங்ரி எனப்படும் பீன்ஸ் போன்ற காய்கள் கிடைக்கின்றன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், கெர்-சங்ரி உணவுக்குப் புவிசார் குறியீடும் வழங்கப்பட்டது. மக்களுக்கான உணவாக மட்டுமில்லாமல் கெஜ்ரி மரம் கால்நடைகளுக்குத் தீவனத்தையும் வழங்குகிறது. ஆனால், சமீபத்திய ஆண்டுகளில், கெஜ்ரி, கல்பவ்ரிக்ஷா மரத்தில் பூச்சிகள் உருவாகிக் காய்கள் அழுகுகின்றன. அதனால் சங்ரி உற்பத்தியும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.

பாலைவனக் கப்பல் எனக் குறிப்பிடப்படும் ஒட்டகம் பாலைவனத்துக்கான தகவமைப்புடன் வாழும் உயிரினம். ஆனால், எருமை அப்படியல்ல. ராஜஸ்தானில் 2012 முதல் 2019 வரை எருமைகளின் எண்ணிக்கை 5.53 சதவீதம் உயர்ந்துள்ளது. மாநில விலங்கான ஒட்டகங்களின் எண்ணிக்கை 34.69 சதவீதம் குறைந்து 3,25,713 லிருந்து 2,12,739 ஆகக் குறைந்துள்ளது.

பிகானரில் உள்ள ICAR-தேசிய ஒட்டக ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் அனில் புனியா, "ஒரு ஒட்டகம் மருத்துவத் தாவரங்களை உள்ளடக்கிய 40–45 தாவர இனங்களை உண்டு, அவற்றைப் பாலாக மாற்றுகிறது. அதனால்தான் ஒட்டகப்பால் மிகவும் சத்தானது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் மற்றும் மனஇறுக்கம் கொண்ட நபர்களுக்கு அவசியமானது. தொடர்ந்து காலநிலை மாற்றத்தால் குறையும் ஒட்டகங்களின் எண்ணிக்கை வருத்தமளிக்கிறது" என்கிறார்.

பாலைவனம் என்றாலே தரிசு நிலம். அங்கு எதுவும் உற்பத்தி ஆகாது என்ற சிந்தனை மற்றப் பகுதி மக்களிடம் அழுத்தமாக இருக்கிறது. ஆனால், உண்மையில் பாலைவனம் என்ற சொல் சூழலியல் சார்ந்ததுதானே தவிர அது வெறுமையைக் குறிக்கும் சொல அல்ல. இந்த பாலைவன சுற்றுச்சூழல் அமைப்புதான் பல நூற்றாண்டுகளாக நாம் தப்பிப்பிழைத்துவர உதவி வருகிறது.

குறிப்பாகப் பாலைவனத்தில் எதுவும் வளராது எனக் கருதப்படுகிறது. அது தவறு... பெரும்பாலான பால் தார் பகுதியில் இருந்துதான் வருகிறது. நிலம் தரிசாக இருந்தால் அது எப்படி சாத்தியமாகும்? கடுகு, எள் போன்ற அத்தியாவசிய எண்ணெய்களைப் பாலைவனப் பகுதியில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது.

பாலைவனம் என்பது முழுமையாகச் சாத்தியமான, செழிப்பான ஒரு சுற்றுச்சூழல் அமைப்பு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இங்கு விலங்குகளும், தாவரங்களும் கடுமையான சூழ்நிலைகளில் வாழக்கூடிய வகையில் தகவமைத்துக் கொண்டுள்ளன. பாலைவனப் பசுமையாக்கத்தின் காரணமாக, பூர்வீக உயிரினங்களின் வாழ்க்கை கேள்விக்குள்ளாகும் என்கிறது அந்த ஆய்வுக் கட்டுரை.

ராஜஸ்தான்
ராஜஸ்தான்

பாலைவனப் பசுமைத் திட்டம் மூலம் நிலத்தின் உண்மையான வடிவத்தை மீட்டெடுப்பதுதான் நோக்கம் என்றால், அந்த நிலம் தானாகவே தன்னை மீட்டெடுத்துக்கொள்ளும். அதாவது ஒரு இனம் அழிந்து, மற்றொரு இனம் அதன் இடத்தைப் பிடிக்கும் இயற்கை நிகழ்வுகள் காலங்காலமாக நடந்து வருகிறது. ஆனால் இது மனிதனால் செயற்கையாகச் செயல்படுத்தக்கூடாது. மனித தலையீட்டால், அழிவு விகிதம் பல மடங்கு அதிகரித்திருக்கிறது என்பதுதான் கடந்தகாலங்கள் நமக்கு உணர்த்தியிருக்கும் பாடம்.

இறுதியாக இந்தக் கட்டுரையைப் பிகானரின் பாலைவன வள மைய தலைவர் அன்ஷுல் ஓஜா சொன்ன வார்த்தைகளை வைத்து முடிக்கலாம்...

"நாங்கள் நீச்சல் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது அவசியமல்ல. எங்களுக்கு ஒட்டகச் சவாரி செய்யத் தெரியும். அதுவே எங்களுக்குப் போதுமானதை விட அதிகம்."

ஊட்டி: உறைபனியைக் காண குவியும் சுற்றுலாப் பயணிகள் | Photo Album

போக்குவரத்து நெரிசல்உறை பனி உறை பனிஉறை பனி உறை பனி சுற்றுலா பயணிகள் உறை பனி சுற்றுலா பயணிகள் உறை பனி உறை பனி உறை பனி உறை பனி உறை பனி உறை பனி சுற்றுலா பயணிகள் உறை பனி சுற்றுலா பயணிகள் உறை பனி உறை பனி உ... மேலும் பார்க்க

ஊட்டி: யானை - மனித எதிர்கொள்ளல்களைத் தடுக்க AI; "புதிய மைல்கல்" - வனத்துறை நம்பிக்கை

இந்திய அளவில் யானை - மனித எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் பகுதிகளில் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் முக்கிய இடத்தில் இருப்பது வேதனையான உண்மை.பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின்போது பெரும்பாலான மழைக்காடுகள் அ... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்றத்தின் வரையறையால் ஆரவல்லி மலைத்தொடருக்கு ஆபத்தா? மத்திய அரசு என்ன சொல்கிறது?

இந்தியாவின் 'பச்சைக் கவசம்' என்று அழைக்கப்படுகிற ஆரவல்லி மலைத்தொடருக்கு ஆபத்து என்று சூழலியல் ஆர்வலர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். என்ன பிரச்னை? 'குறிப்பிட்ட பகுதியில் 100 மீட்டர் மற்றும் அதற்குள் மே... மேலும் பார்க்க

வட இந்தியாவை காக்கும் ஆரவல்லி மலைத்தொடர்; உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து சூழலியல் ஆர்வலர்கள் கவலை!

உலகின் மிகப் பழமையான மலைத் தொடர்களில் ஒன்றான ஆரவல்லி, குஜராத் முதல் ராஜஸ்தான், ஹரியானா மற்றும் டெல்லி வரை பரவி, நிலத்தடி நீர் சேமிப்பு, காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தல், பாலைவனமாக்கலைத் தடுத்தல் மற... மேலும் பார்க்க

ஈரான்: மழையால் ரத்த நிறமான கடல்; வியக்க வைக்கும் ஹோர்முஸ் தீவின் அறிவியல் அதிசயம்!

ஈரானின் பெர்சிய வளைகுடாவில் அமைந்துள்ள ஹோர்முஸ் தீவு (Hormuz Island), அதன் தனித்துவமான நிலப்பரப்பால் உலகப் புகழ்பெற்றது. பொதுவாக இந்தத் தீவு பல வண்ண மண்ணைக் கொண்டிருப்பதால் 'வானவில் தீவு' என்று அழைக்க... மேலும் பார்க்க