RCB vs MI: "விராட் பாயும், சால்ட்டும் தொடங்கிய விதம் தான் எங்களை.."- வெற்றி குற...
திருச்சி மாவட்டம், ராட்சாண்டார் திருமலை விரையாச்சிலைநாதர் கோயில்: அநாவசிய செலவுகள் அகற்றும் ஈசன்!
ஈசன் சுயம்புவாகக் கோயில்கொண்ட தலங்கள் அனைத்துமே மகத்துவம் வாய்ந்தவை. அப்படி ஒருதலம்தான் ராட்சாண்டார் திருமலை. திருச்சியில் இருந்து 19 கி.மீ தொலைவில் உள்ளது இந்தத் தலம்.
குளித்தலையில் இருந்து தென்கிழக்கு திசையில் பயணித்தால் 45 வது கி.மீ தொலைவில் ராட்சாண்டார் திருமலையை அடையலாம். இங்கு இறைவன் சுமார் 30 அடி உயரம் உள்ள மலைக்குன்றில் ஸ்ரீபெரியநாயகி சமேத விரையாச்சிலைநாதர் என்கிற திருநாமத்தோடு அருள்பாலிக்கிறார்.
சோழ மன்னன் ஒருவன், இந்த மலைப்பகுதிக்கு வரும்போதெல்லாம் பொன் உடும்பு ஒன்றைப் பார்ப்பான். ஆனால் அவனால் பிடிக்க முடியாது. ஒருநாள் அவன் கனவில் அதே உடும்பு வந்தது. மறுநாள் விடிந்ததும் அந்த உடும்பைப் பிடித்தே தீருவேன் என்று தீர்மானம் கொண்டு மலைக்குப் படையோடு வந்தான்.
வழக்கம்போல் பொன் உடும்பு வந்தது. படைவீரர்கள் பிடிக்கப் பாய்ந்தனர். அது ஒரு புற்றில் புகுந்துகொண்டது. வீரர்கள் அதை ஈட்டியால் குத்த ரத்தம் பீறிட்டது. அதன் துளிகள் மன்னன் கண்களிலும் பட மன்னரின் பார்வை பறிபோனது. வைத்தியர்கள் சகல மருத்துவங்களும் செய்தும் பார்வை திரும்பவில்லை. மன்னர் இறைவனை மனத்தில் எண்ணி முறையிட்டார். அப்போது ஓர் அசரீரி கேட்டது.

"மன்னா, அந்த மலையில் சுயம்பு மூர்த்தியாக யாம் எழுந்தருளி உள்ளோம். அங்கே சென்று எம்மைக் கண்டுபிடித்துக் கோயில் எழுப்பு. உன் துன்பம் தீரும்" என்றது அந்த அசரீரி.
மன்னன் மனம் மகிழ்ந்து படையோடு அந்தக் குன்றுக்குச் சென்றதும் அவர் கண் பார்வை திரும்பியது. அங்கே ஈசனின் லிங்கத் திருமேனியைக் கண்டடைந்து அங்கே ஓர் ஆலயம் எழுப்பினான் மன்னன். இந்த அதிசயம் நாடெங்கும் பரவ மக்கள் பலரும் வந்து ஈசனை வழிபட்டுச் சென்றனர்.
ஒருநாள், கேரளாவிலிருந்து வந்த ஞானி, ஈசனின் திருமேனியில் ஒரு பகுதியில் சிதைந்திருப்பதைக் கண்டார். 'ஆகமவிதிப்படி சிதைந்திருக்கும் திருமேனிகளை வழிபடல் ஆகாது. மேலும் குறைவுள்ள மூர்த்தியைப் பூஜித்தால் விரயம் ஏற்படுமே' என்று வருந்தினார். உடனே, 'புதிய மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள். இந்த ஈசன் சகல நலன்களையும் உங்களுக்கு அருள்வார்' என்று சொல்லிச் சென்றார்.
இதைக் கேள்விப்பட்ட மன்னன் உடனடியாகப் புதிய லிங்கத் திருமேனியைப் பிரதிஷ்டை செய்ய விரும்பினான். ஆனால் முதலில் கிடைத்த லிங்கம்போல் சுயம்புவாக இருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணி ஈசன் சந்நிதியில் மனமுருகி வேண்டினான்.

அப்போது ஈசன் மீண்டும் அசரீரியாக, "நான் விரையம் உள்ளவனாக இருப்பதாக நீ கருதுவதால், உன் வார்த்தைக்கு இணங்கி நான் மீண்டும் காட்சித் தருகிறேன்" என்று உரைத்தார் ஈசன். அப்போது சந்நிதிக்கு அருகே இருந்த பாறைகள் நகர்ந்தன.
பாறைக்குள் இருந்து சிவலிங்கம் ஒன்று வெளிப்பட்டது. ஈசன் தோன்றிய இடத்தில் புதிய ஆலயம் ஒன்றை அமைத்தார். பழைய மூர்த்தியையும் அப்படியே விட மனம் இல்லாமல் அருகிலேயே எழுந்தருளச் செய்து வழிபட்டான்.
அது முதல் இந்த ஈசனுக்கு, விரையாச்சிலைநாதர் என்கிற திருநாமம் ஏற்பட்டது. மேலும் இங்கு வந்து வழிபட்ட அனைவருக்கும் ஏற்படும் விரையச் செலவுகள் அனைத்தும் நீங்கி செல்வ வளம் சேரத் தொடங்கியது.
இது கருடன் வழிபட்ட தலம். இங்குள்ள தீர்த்தம் கருட தீர்த்தம். இங்கு எழுந்தருளியிருக்கும் அம்பிகை பெரியநாயகி மிகவும் சக்தி வாய்ந்தவள். இந்த மலையில் உள்ள சுனை அன்னையின் திருக்கரத்தில் இடம் பிடித்த சங்கின் மகிமையால் தோன்றியது என்கிறார்கள்.
இத்தலத்துக்கு காஞ்சி மகாபெரியவர் எழுந்தருளியபோது அம்பிகையின் சாந்நித்தியத்தைக் கண்டு சிலிர்த்தார். தான் பூஜை செய்யும் ஸ்ரீசக்கரம் ஒன்றினை அம்பிகையின் அருளால் தோன்றிய சுனையில் பிரதிஷ்டை செய்தார் என்கிறார்கள் பக்தர்கள்.
இந்த ஆலயத்தில் பைரவர் தெற்கு முகமாக அருள்பாலிக்கிறார் என்பது விசேஷம். இவரை வணங்கினால் மன பயங்கள் விலகும் என்கிறார்கள். கோயிலின் அக்னி மூலையில் தெப்பக்குளம் உள்ளது. அங்கு எழுந்தருளியிக்கும் பிரமாண்டமான விநாயகரை வணங்கினால், மக்களுக்கு ஏற்பட்டுள்ள சகல பிரச்னைகளும் நீங்கும்.
அதேபோன்று, இங்குள்ள முருகப்பெருமானின் சந்நிதியும் சிறப்பு வாய்ந்தது. இங்கு நடைபெறும் கந்த சஷ்டிப் பெருவிழாவில் கலந்துகொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்தால் சகல நலன் களும் சூழும். எதிரிகளின் தொல்லைகள் விலகும்.

அம்பிகை பெரிய நாயகி ஆண்டுக்கு இருமுறை அர்த்தநாரியாக அற்புதக்காட்சி அருள்வாள். இந்த ஆலயத்தில் அன்னை மகாலட்சுமிக்குத் தனிச் சந்நிதி அமைந்துள்ளது. தாயாரை வெள்ளிக்கிழமைகளில் வழிபட்டால் செல்வ வளம் பெருகும்.
இங்குள்ள துர்கை அம்மன் எட்டுக் கைகளுடன் கம்பீரமாகக் காட்சி அருள்கிறாள். இந்த அம்மனை வழிபாடு செய்து வேண்டிக்கொண்டால் தீய சக்திகளின் தொல்லைகள் முற்றிலும் விலகும். மறைமுக எதிர்ப்புகள் விலகும் என்றார்கள் பக்தர்கள்.



















