கார்த்திகையில் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்; ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஒலித்த சரண...
திருப்பூர்: கர்நாடக `நந்தினி’ நிறுவனம் பெயரில் கலப்பட நெய் - ஒரு வருடமாக இயங்கி வந்த போலி ஆலை
கர்நாடக மாநில கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பினரால் தயாரிக்கப்படும் நெய், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருட்கள் `நந்தினி’ என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பெயரில் கலப்பட நெய் உள்ளிட்ட பால் பொருள்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக கர்நாடக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு சாம்ராஜ்பேட்டை, அக்ரஹாரா பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் அந்த மாநில காவல் துறை மற்றும் உணவுப் பொருள் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
அதில், அந்தக் கிடங்கில் இருந்து நந்தினி என்ற பெயரில் கலப்பட நெய் பதுக்கி வைக்கப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக கிடங்கின் உரிமையாளர் மகேந்திரா, அவரது மகன் தீபக், கலப்பட நெய்யை கடைகளுக்கு விற்பனை செய்த முனிராஜ், வேன் ஓட்டுநர் அபியர்ஸ் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1.26 கோடி பணமும், 8 ஆயிரம் லிட்டர் கலப்பட நெய், டால்டா, பாமாயில், தேங்காய் எண்ணெய் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்களிடம் பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீஸார் விசாரித்ததில், இந்த கலப்பட நெய் தமிழகத்தில் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக, கர்நாடக போலீஸார் தமிழ்நாட்டு போலீஸுடன் இணைந்து பொள்ளாச்சி, திருப்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விசாரணை நடத்தினர். அதில், அவிநாசி, நம்பியாம்பாளையம், ஆலங்காட்டுப்பாளையத்தில் ஒரு தோட்டத்து கிடங்கில் கலப்பட நெய் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, பெங்களூர் தனிப்படை போலீஸார், அவிநாசி வட்டாட்சியர் சந்திரசேகர் ஆகியோர் தலைமையில் கிடங்கில் சோதனை செய்தனர். அதில், சிவகுமார் என்பவர் அந்த கிடங்கை வாடகைக்கு எடுத்து அங்கு நந்தினி பெயரில் கலப்பட நெய் தயாரித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான ஸ்டிக்கர்கள் பொள்ளாச்சியில் அச்சிடப்பட்டு, பேக்கிங் செய்து விநியோகம் செய்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அந்த கிடங்கில் இருந்த கலப்பட நெய் கைப்பற்றப்பட்டதுடன், அந்த கிடங்குக்கும் சீல் வைக்கப்பட்டது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், 'சிவகுமார் மற்றும் மேலாளர் ரம்யா ஆகியோர் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவிநாசியில் கிடங்கு அமைத்து அங்கு வைத்து கலப்பட நெய் தயாரித்து வந்துள்ளனர். நெய்யில் தேங்காய் எண்ணெய், பாமாயில், டால்டா என, தேவைக்கு ஏற்ப கலப்படம் செய்து, அதை பேக்கிங் செய்து புழக்கத்தில் விட்டுள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள சிவகுமார் மற்றும் மேலாளர் ரம்யாவைத் தேடி வருகிறோம்” எனக் கூறினர். திருப்பூரில் பிரபல நிறுவனம் பெயரில் கலப்பட நெய் தயாரித்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.















