"இந்தப் பயணத்தில் நிறைய கஷ்டங்கள், தோல்விகள் இருக்கும், ஆனால்..!"- சினிமா குறித்...
`திருமணமானவருடனான காதலை கைவிட கெஞ்சினேன்' - சேலம் மருத்துவ மாணவி கொலை வழக்கில் தந்தை கைது
சேலத்தை அடுத்த சித்தர்கோயில் அருகில் தனியார் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் பாரதி நகரைச் சேர்ந்த வரதராஜன் என்பவரின் மகள் வர்ஷினி (22) இறுதியாண்டு படித்துவந்தார். இவர், கல்லூரி அருகே உள்ள நல்லாம்பட்டிநாயக்கன்பட்டியில் லட்சுமணன் என்பவரின் அடுக்குமாடி வீட்டில் சக மாணவிகளுடன் அறை எடுத்து தங்கியிருந்தார்.
இந்நிலையில், ஜனவரி 7-ஆம் தேதி வர்ஷினி தங்கியிருந்த அறையில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் அவரது அறை வெளிப்புறமாக தாழிடப்பட்டிருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும், வர்ஷினியின் தந்தை வரதராஜன், அவரைப் பார்க்க வந்து சென்றதும், அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததும் போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து வர்ஷினியின் தாய் உஷாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சேலம் வந்த அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல்கள் போலீஸாருக்கு தெரியவந்தது. உஷாவுக்கும் வேறொருவருக்கும் நடைபெற்ற திருமணத்தில் வர்ஷினி பிறந்துள்ளார். அவர் பிறந்த சில ஆண்டுகளில் உஷாவின் கணவர் அவரை விட்டு பிறிந்த நிலையில், வரதராஜுவை உஷா இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். நெசவுத் தொழிலாளியான வரதராஜன், உஷாவை திருமணம் செய்துகொண்டபின் வர்ஷினியை தனது குழந்தையாகவே வளர்த்து வந்துள்ளார்.
வர்ஷினி மீதான பாசம் காரணமாக உஷாவும் வரதாஜனும் வேறு குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக வர்ஷினி, ஆண் ஒருவருடன் பழகி வந்தது பெற்றோருக்கு தெரியவந்தது. அண்மையில் ஆண் ஒருவருடன் வர்ஷினி ஒன்றாக இருக்கும் புகைப்படம் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. அது வரதராஜனுக்கு தெரியவரவே, அந்த நபர் யார்? என விசாரித்தபோது, அவர் திருநெல்வேலி வி.கே.புரத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
மேலும், அவருக்குத் திருமணாகி 2 குழந்தைகள் உள்ளதும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வரதராஜன் வர்ஷினியிடம் அந்த ஆண் நண்பருடனான பழக்கத்தை கைவிடுமாறு கூறியுள்ளார். படிப்பில் கவனம் செலுத்துமாறு அறிவுரை கூறியுள்ளார். ஆனால், அதனை வர்ஷினி ஏற்றுக் கொள்ளவில்லை எனத் தெரிகிறது. அந்த ஆண் நண்பரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக்கு திருநெல்வேலிக்கு சென்ற வர்ஷினி வீட்டுக்குச் செல்லாமல் மீண்டும் அந்த ஆண் நண்பருடன் வெளியே சென்றுள்ளார். இதையறிந்த வரதராஜன் சேலத்துக்கு வந்துள்ளார். மகள் தங்கியிருந்த அறைக்குச் சென்ற அவர், திருமணமானவரை திருமணம் செய்தால் வாழ்க்கை வீணாகிப்போய்விடும் என அறிவுரை கூறியுள்ளார்.
ஆனால், வர்ஷினி விடாப்பிடியாக அவரைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என கூறியுள்ளார். இதனால், கோபம் அடைந்த வரதராஜன் மகளை கொலை செய்துவிட்டு அவரிடம் இருந்த செல்போனை எடுத்துக்கொண்டு, கதவை வெளிப்புறமாக தாழிட்டுவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, வரதராஜனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, தேடப்பட்டு வந்தது. அதில், சேலத்தில் பதுங்கியிருந்த வரதராஜனை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், "எனது மகள் வர்ஷினி நெல்லையில் பிளஸ்2 படிக்கும்போது அந்தப் பள்ளிக்கு பயிற்சி அளிக்க வந்த டேக்வாண்டோ பயிற்சியாளருடன் பழக்கமானதால், அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. பயிற்சியாளருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். மகள் திருமணமானவரை காதலிக்கிறாள் என்ற தகவல் தெரிந்து அவளை கண்டித்தேன். காதலை கைவிடுமாறு பலமுறை கெஞ்சி பார்த்தேன்.

ஆனால், டேக்வாண்டோ பயிற்சியாளருடனான காதலை கைவிட மறுத்து விட்டாள். பின்னர் பிளஸ்2 முடித்ததும், சேலத்தில் உள்ள ஒரு மருத்துவக்கல்லூரியில் சேர்த்தேன். அதன்பிறகும் காதலை கைவிடவில்லை. கல்லூரி விடுமுறையில் ஊருக்கு வந்த மகள் வீட்டிற்கு வராமல், டேக்வாண்டோ பயிற்சியாளரை பார்த்துவிட்டு சேலம் வந்தது தெரிந்தது. இறுதியாக மகளை சந்தித்து காதலை கைவிடுமாறு கேட்கலாம் என்று சம்பவம் நடந்த அன்று சேலம் வந்து மகள் கையை பிடித்து காதலை கைவிடுமாறு கெஞ்சினேன்.
அவள் மறுத்து விட்டாள். ஆத்திரத்தில் அடித்தபோது கீழே விழுந்த வர்ஷினி முகத்தில் தலையணையால் அமுக்கி கொலை செய்தேன். பின்னர் செல்போனை எடுத்துக்கொண்டு சென்னை சென்று வடபழனி முருகன் கோவிலில் மொட்டை அடித்தேன். பின்னர் அங்கிருந்து திருப்பதிக்கும், திருவண்ணாமலைக்கும் 2 முறை சென்றேன். என்னை போலீசார் தேடுவது தெரிந்ததால் கோர்ட்டில் சரண் அடையலாம் என்று நினைத்து சேலம் வந்தபோது போலீஸார் என்னை கைது செய்தனர்" என்று தெரிவித்துள்ளார்.



















