`ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சிக்குள் இடமில்லை!' - மறைமுகமாக உணர்த்திய எடப்பாடி பழ...
திருமணமானவருடன் 13ஆண்டுகள் உறவு: `மோசடி அல்ல' -பெண் தொடர்ந்த வழக்கில் ஆண் நண்பரை விடுவித்த கோர்ட்
பெண்கள் சில நேரங்களில் பணி செய்யும் இடங்களில் திருமணமான ஆண்களுடன் உறவு வைத்துக்கொள்வார்கள். சம்பந்தப்பட்ட ஆண்களுக்கு திருமணமாகிவிட்டது என்று தெரிந்தே அவர்கள் அவர்களுடன் உறவில் இருப்பார்கள். அந்த ஆண்கள் “உன்னை திருமணம் செய்துகொள்கிறேன்” என்று சொல்வதையும் பெண்கள் நம்புவார்கள். திருமணம் என்று வரும் போது, ஆண்கள் எதாவது காரணத்தை சொல்லி தட்டிக்கழிக்கும்போதுதான் பெண்கள் தவறை உணருவார்கள்.
அது போன்ற ஒரு சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. மும்பை மாட்டுங்கா பகுதியைச் சேர்ந்த 30 பெண்ணிற்கு அலுவலகத்தில் பணியாற்றியபோது, அதே அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றிய நபருடன் தொடர்பு ஏற்பட்டது. இது காதலாக மாறி, பாலியல் உறவு வைத்துக்கொள்ளும் அளவுக்கு சென்றது.

2000 முதல் 2013ம் ஆண்டு வரை அவர்களது உறவு நீடித்தது. 2014ம் ஆண்டு, அப்பெண் தன்னை தனது ஆண் நண்பர் திருமணம் செய்வதாக கூறி உறவு வைத்து ஏமாற்றிவிட்டார் என்று கூறி மாட்டுங்கா போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
3 முறை கருக்கலைப்பு
இவ்வழக்கு மும்பை செஷன்ஸ் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இவ்விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கூறினார், "சம்பந்தப்பட்ட கம்பெனியில் மனுதாரர் நிர்வாக பிரிவிலும், குற்றம் சாட்டப்பட்டவர் மேலாளராகவும் இருந்தனர். 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம், தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி மனுதாரரை குற்றம் சாட்டப்பட்டவர் தனது வீட்டிற்கு வரவைத்தார். அங்கு மனுதாரரின் விருப்பத்திற்கு மாறாக, அவர் அவருடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டார்.
ஆனால் அதன் பிறகு மனுதாரரை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி, தொடர்ந்து பாலியல் உறவு வைத்துக்கொண்டார். இதனால் மனுதாரர் 2001, 2010, 2012ம் ஆண்டுகளில் கர்ப்பமானார். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் சொன்னதால், மூன்று முறையும் கருவை கலைத்தார்."
திருமணம் செய்யுமாறு மனுதாரர் கேட்டுக்கொண்டபோது, தனக்கு திருமணமாகி மனைவி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்து, திருமணம் செய்ய மறுத்துள்ளார். 2013ம் ஆண்டு, “நீ எப்படி வேறு ஒருவரை திருமணம் செய்கிறாய் என்று பார்க்கிறேன்” என்று மிரட்டலும் விடுத்துள்ளார் என்று வழக்கறிஞர் வாதிட்டார். இரு தரப்புப் பாகங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர் குற்றச்சாட்டை நிரூபிக்க தவறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண் 2001-02ம் ஆண்டுகளில் குற்றம் சாட்டப்பட்டவரின் மனைவியை சந்தித்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். இதன் மூலம், முதல் முறை பாலியல் உறவு வைத்துக்கொள்வதற்கு முன்பே குற்றம் சாட்டப்பட்டவருக்கு திருமணமாகி விட்டது என்று மனுதாரருக்கு தெரிந்திருக்கிறது. அதோடு, அத்தோடு நிறுத்தாமல் மனுதாரர் உறவை தொடர்ந்து வைத்துள்ளார். மேலும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு குழந்தை பிறந்தபோது அலுவலகத்தில் மனுதாரர் அனைவருக்கும் மிட்டாய் கொடுத்து இருக்கிறார். அவர்களுக்குள் உறவு தொடங்கும்போது மனுதாரருக்கு 30 வயது, நன்கு படித்தவர்.

`விருப்பத்தோடு செய்ததால் மோசடியாகாது'
அவர் செய்யும் செயலால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து நன்கு புரிந்து கொள்ளும் மன நிலையில் இருந்தார். எனவே, மனுதாரரை குற்றம் சாட்டப்பட்டவர் ஏமாற்றிவிட்டார் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற கோபத்தில் புகார் கொடுத்ததாக மனுதாரரே ஒப்புக்கொண்டுள்ளார். எனவே, இவ்விவகாரத்தில் ஆசைவார்த்தை கூறி மோசடி செய்தார் என்று கூற முடியாது. சுப்ரீம் கோர்ட்டும் இதே கருத்தைத்தான் சொல்லி இருக்கிறது.
பாதிக்கப்பட்ட பெண் விருப்பப்பட்டுதான் இக்காரியத்தை செய்து இருக்கிறார். எனவே, இது மோசடியாகாது என்று கூறி, குற்றம் சாட்டப்பட்ட நபரை இவ்வழக்கில் இருந்து நீதிபதி எஸ். எஸ். அட்கர் விடுவித்து உத்தரவிட்டார்.



















