'வில் அம்பு' பட இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் காலமானார் - இறுதிச்சடங்கு நாளை கோவைய...
திருவள்ளூர்: `ஒரு காலத்துல நல்ல வருமானம் தந்த தொழில்; ஆனா இன்னைக்கு...' - வாடும் நெசவு தொழிலாளர்கள்!
ஒரு காலத்தில் பல குடும்பங்களின் வாழ்வாதரமாக நெசவுத் தொழில் இருந்தது. இந்த நவீன இயந்திர உலகத்தின் தாக்கத்தால் முன்னைவிட இப்போது குறைந்திருக்கிறது. இருப்பினும், சில மனிதர்கள் தங்களுடைய மரபார்ந்த தொழிலை விடாமல் செய்து கொண்டிருக்கிறார்கள். அவ்வாறான மனிதர்களைச் சந்திக்கச் சென்றோம். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அம்மையார் குப்பம் பகுதியில் விசைத்தறி நெசவு தொழில் முக்கியமான தொழிலாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக கைலி தயாரிப்பு, பல தலைமுறைகளாக தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. அந்த ஊரின் அடையாளமாக விளங்கும் தொழிலை அப்பகுதி மக்கள் கைவிடாமல் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

அந்தப் பகுதியின் நெசவாளரான ஜானகிராமன் இதுபற்றி பேசும்போது,
“ஒன்று அல்லது இரண்டு தறிகளை மட்டும் வைத்து நெசவு தொழிலை முழுமையாக நடத்துவது ரொம்ப கஷ்டம். குறைந்தது நான்கு விசைத்தறிகள் இருந்தால்தான் வருமானமும் வரும் வேலையும் சீராக இருக்கும். எங்களோட வேலை ஆலைகள்ல இருந்து பாவுகளை வாங்கிட்டு வந்து தறியில பொருத்தி ஓட்டணும். அதுக்கப்புறம் ‘பண்ணைப் போடுதல்’ன்னு சொல்ற அச்சுகளை கொண்டு நூல்களை வச்சி கைலியாக மாத்தணும். இடையில வேலை நின்னுடாம இருக்க ‘ப்ளேடு போடுதல்’ வச்சா நிக்காம வேலை ஓடும். இவ்வாறு பல கட்டங்களைத் தாண்டி தான் உங்க கையில ஒரு கைலி வந்து சேரும்.

ஒரு நாளைக்கு சுமார் பதினெட்டு மணி நேரம் வரை தறிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். தறிச்சத்தம் நின்னுட்டா எங்களோட வருமானமும் நின்னுடும். அதுனால எங்களுக்கு பெருசா ஓய்வுங்கிறதே கிடையாது. இங்கு தயாராகுற கைலிகளை மண்ணடிக்கு கொண்டு போய் சீர் செஞ்சிட்டு கடைசியா கடைகளுக்கு விநியோகம் செய்வோம். இவ்வளவு சேர உழைப்பும் உடல் சோர்வும் இருந்தாலும் கடைசியா எங்களுக்கு வெறும் முப்பத்தி ஆறு ருபாய் தான் கிடைக்கும். நாள் முழுக்க நாங்க நின்னப்படியே வேலை செய்றதுனால மூட்டுவலி, கல்லீரல் தொடர்பான உடல் பிரச்னைகளும் ஏற்படுது.

எங்க பிள்ளைகள் விரும்புற படிப்பை படிக்க வைக்கணும்ன்னு ஆசை இருந்தாலும் கிடைக்கிற கொஞ்ச வருமானத்தை வச்சி என்ன பண்றது. ஒரு காலத்துல நெசவுத்தொழில் நல்ல வருமானம் தந்த வாழ்வாதாரமா இருந்துச்சு. ஆனா இன்னைக்கு அதுவே சுமையாகவும் மாறிட்டு வருது. காலங்காலமா பண்ணின இந்தத் தொழிலை எங்களால விடவும் முடியாது. நாங்க அனுபவிக்கிற கஷ்டத்தை எங்க பிள்ளைகள் அனுபவிக்கக் கூடாதுன்னு தான் நினைக்கிறோம்" என்கிறார் வேதனையோடு.
- தர்ஷினி.சி

















