``தம்பி, நீ சினிமாவுக்கு கிடைச்ச சொத்து!" - 'யூத்' கென் கருணாஸை பாராட்டிய ரிஷப் ...
திறப்பு விழா நேரத்தில் விபரீதம்: ராஜஸ்தான் பெட்ரோகெமிக்கல் வளாகத்தில் தீ - பிரதமர் மோடி வருகை ரத்து!
ராஜஸ்தான் மாநிலம், பலோத்ராவில் உள்ள பச் பத்ரா (Pachpadra) சுத்திகரிப்பு நிலையத்தை பிரதமர் மோடி நாளை (செவ்வாய்க்கிழமை) திறந்து வைக்கவிருந்த நிலையில், இன்று அங்கு ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாகத் திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) மற்றும் ராஜஸ்தான் அரசு இணைந்து ஒருங்கிணைந்த பச் பத்ரா சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் வளாகத்தை உருவாக்கின. இது இந்தியாவின் முதல் 'கிரீன்ஃபீல்ட்' ஒருங்கிணைந்த திட்டமாகும். 2013 அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் சோனியா காந்தியால் ரூ.37,230 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டப்பட்டது. 2018-ல் நடந்த ஆட்சி மாற்றத்திற்குப் பின், பிரதமர் மோடி இத்திட்டத்தை ரூ.43,129 கோடி மதிப்பீட்டில் மறுதொடக்கம் செய்து வைத்தார்.
BREAKING: Massive fire erupts at HPCL's ₹80,000 crore Pachpadra Refinery in Balotra, Rajasthan — just one day before PM Narendra Modi's scheduled inauguration.
— Megh Updates ™ (@MeghUpdates) April 20, 2026
The 9 MMTPA greenfield refinery-cum-petrochemical complex, dubbed the "Gem of the Desert," was set for commercial… pic.twitter.com/ZsNx9powL2
இந்த ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையம் வெறும் எரிபொருள் உற்பத்தியோடு மட்டுமல்லாமல், பாலிப்ரோப்பிலீன், பாலிஎத்திலீன், பென்சீன் மற்றும் புடாடீன் போன்ற முக்கியமான பெட்ரோகெமிக்கல் மூலப்பொருட்களும் இங்கு உற்பத்தி செய்யப்படும் அளவில் உருவாக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், பிளாஸ்டிக் தளபாடங்கள், விவசாய குழாய்கள், வாகன உதிரிபாகங்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் செயற்கை இழைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு முதுகெலும்பாக அமையும் எனக் கருதப்பட்டது.
இந்த சுத்திகரிப்பு நிலையம் முழுமையாகச் செயல்பாட்டிற்கு வரும்போது, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் அளவைக் குறைத்து, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதோடு, ராஜஸ்தான் மாநிலத்தைத் தேசிய மற்றும் உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட இந்த சுத்திகரிப்பு நிலையத்தை நாளை பிரதமர் மோடி திறந்துவைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பரபரப்பாக நடந்து வந்தன. இந்த நிலையில், சுத்திகரிப்பு நிலையத்தின் ஒரு பகுதியில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் கரும்புகை பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வானில் எழுந்தது.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புத் துறையினர் சுமார் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பகுதி முழுவதும் காலி செய்யப்பட்டு, ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். நல்வாய்ப்பாக, இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று மத்திய எண்ணெய் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவலின்படி, சுத்திகரிப்பு நிலையத்தின் பிரதான பகுதியான CDU-VDU (கச்சா எண்ணெய் காய்ச்சி வடித்தல் பிரிவு) பகுதியில் உள்ள எக்ஸ்சேஞ்சர் வெடித்ததில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, பிரதமர் மோடி திறந்து வைக்கவிருந்த அதே பிரிவு இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த எதிர்பாராத தீ விபத்து காரணமாக பிரதமர் மோடியின் வருகை மற்றும் திறப்பு விழா நிகழ்ச்சி தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது அந்தப் பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சுத்திகரிப்பு நிலைய ஊழியர்கள், பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நிலைமை முழுமையாகச் சீரடைந்த பின்னரே சேத மதிப்பீடு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.














