Nooru Saami: "'பிச்சைக்காரன்' வெற்றியால்தான் சொந்த வீடே வாங்கினேன்!" - இயக்குநர்...
தூத்துக்குடி – கொழும்பு இடையே நேரடி கப்பல் கண்டெய்னர் சேவை தொடக்கம்! வாரம் 4 முறை இயக்கம்!
இந்தியத் துறைமுகங்களில் வேகமான வளர்ச்சியைப் பெற்று வரும் துறைமுகங்களில் ஒன்றான தூத்துக்குடி, வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில், தூத்துக்குடி மற்றும் இலங்கை கொழும்பு துறைமுகங்களுக்கு இடையே புதிய நேரடிக் கொள்கலன் கப்பல் இணைப்புச் சேவை தொடங்கி வைக்கப்பட்டது.
ஜே.எம். பக்ஷி குழுமத்தால் இயக்கப்படும் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் தூத்துக்குடி சர்வதேசச் சரக்குப்பெட்டக முனையத்தில் நடைபெற்ற விழாவில், வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் துணைத் தலைவர் ராஜேஷ் சௌந்தரராஜன் இந்தப் புதிய கப்பல் சேவையை தொடங்கி வைத்தார். ’பனாமா’ நாட்டின் கொடியுடன் இயங்கும் 'எம்.வி. செரின் இங்க்ரிட்' என்ற இந்தக் கொள்கலன் கப்பல், 669 டி.இ.யு. கொள்ளளவைக் கொண்டது. மேலும், இதில் 60 குளிர்சாதனச் சரக்குப்பெட்டகங்களுக்கான மின் இணைப்பு வசதிகளும் அமையப் பெற்றுள்ளன.

தனது முதல் பயணமாக, இக்கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கொழும்பு துறைமுகத்திற்கு 169 டி.இ.யு. கொள்ளளவு கொண்ட சரக்குப்பெட்டகங்களை ஏற்றிச் சென்றது. புளூ அட்லாஸ் லைன்ஸ் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இச்சேவைக்கு, யுனைடெட் லைனர் ஷிப்பிங் சர்வீசஸ் எல்.எல்.பி மற்றும் ஜே.எம். பக்ஷி குழும நிறுவனம் கப்பல் முகவர் நிறுவனங்களாகச் செயல்படுகின்றன. தூத்துக்குடி மற்றும் கொழும்பு துறைமுகங்களுக்கு இடையே இயக்கப்படும் இக்கப்பல் சேவை, வாரம் இருமுறை தூத்துக்குடி துறைமுகத்தை வந்தடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியிலிருந்து செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கப்பல் கொழும்பு நோக்கிப் புறப்படும். மறுமார்க்கமாக கொழும்பிலிருந்து புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் கப்பல் தூத்துக்குடி நோக்கிப் புறப்படும். தொடர்ச்சியான மற்றும் நம்பகமான இந்த விநியோக இணைப்பு, இப்பகுதியைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்குக் கூடுதல் வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கும். மேலும், இச்சேவை ஆபத்தான மற்றும் சவாலான சரக்குகளையும் ஏற்றுக்கொள்வதால், தொழில் துறையினருக்குப் பெரும் வர்த்தகச் சாதகத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வ.உ.சிதம்பரனார் துறைமுகம் நடப்பு நிதியாண்டில் 2026 மே மாதம் வரை 1.45 லட்சம் டி.இ.யு. சரக்குப்பெட்டகங்களைக் கையாண்டுள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் கையாளப்பட்ட 1.37 லட்சம் டி.இ.யு-உடன் ஒப்பிடுகையில் 6.1 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மேலும், கடந்த 2025-26 நிதியாண்டில் இத்துறைமுகம் ஒட்டுமொத்தமாக 8.67 லட்சம் டி.இ.யு-களைக் கையாண்டு, 8.93 சதவீத அசுர வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது 370 மீட்டர் நீளக் கப்பல் தளமும், 14.2 மீட்டர் ஆழமும் கொண்டு, ஆண்டுக்கு 6 லட்சம் டி.இ.யு-களைக் கையாளும் திறன் கொண்ட தூத்துக்குடி சர்வதேசச் சரக்குப்பெட்டக முனையம், தென்னிந்தியாவைத் தென்கிழக்காசியா, மத்திய கிழக்கு நாடுகள், மாலத்தீவு, இலங்கை மற்றும் இந்தியாவின் முக்கியத் துறைமுகங்களுடன் இணைக்கும் சர்வதேசச் சேவையை வழங்கி வருகிறது.
இது குறித்து வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர் சுஷாந்த் குமார் புரோஹித் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், "அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தப் புதிய கன்டெய்னர் கப்பல் இணைப்புச் சேவையானது, சரக்குப்போக்குவரத்து இணைப்பை விரிவுபடுத்தவும், வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் சேவைகளை வழங்கவும் உதவும். இது வ.உ.சி துறைமுகம் வழியாக நடைபெறும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தக வளர்ச்சிக்குத் துறைமுக ஆணையம் தொடர்ந்து மேற்கொண்டு வரும் முயற்சிகளின் பிரதிபலிப்பாகும்.

மேலும், துறைமுகத்தின் கப்பல் தளம் 7-ல் அமைக்கப்படவுள்ள மூன்றாவது சரக்குப்பெட்டக முனையம் முழுமையாகச் செயல்பாட்டிற்கு வந்த பிறகு, துறைமுகத்தின் மொத்தக் கையாளுதல் திறன் 1.8 மில்லியன் டி.இ.யு-களாக உயரும். அதனைத் தொடர்ந்து, 5.2 மில்லியன் டி.இ.யு. திறன் கொண்ட வெளித்துறைமுகத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் கொள்கலன்களைக் கையாள்வதற்கான முதன்மை மையமாக நமது வ.உ.சி துறைமுகம் மேலும் வலுப்பெறும்" எனத் தெரிவித்துள்ளார்.















