தென்காசி: ஸ்டாப்பில் நிற்காமல் சென்ற அரசு பேருந்து; வாதம் செய்த பயணியை காலணியால்...
தென்காசி: ஸ்டாப்பில் நிற்காமல் சென்ற அரசு பேருந்து; வாதம் செய்த பயணியை காலணியால் தாக்கிய நடத்துனர்!
தென்காசி, கடையநல்லூர் அருகே நயினாரகரத்தைச் சேர்ந்தவர் சுப்பையா (50). இவர் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் நயினாரகரம் செல்வதற்கு தென்காசியில் இருந்து மதுரை செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். பின்னர் நயினாரகரத்திற்கு ரூ.10 கொடுத்து டிக்கெட் எடுத்துள்ளார். ஆனால் பஸ் நயினாரகரத்தில் நிற்காமல் அடுத்த ஸ்டாப்பான இடைகாலில் நின்றது. இது குறித்து சுப்பையா, கண்டக்டர் நாகேந்திரனிடம் கேட்டிருக்கிறார்.

கண்டக்டர் ஆத்திரத்தில் அவரை இடைகால் ஸ்டாப்பில் பஸ்ஸிலிருந்து கீழே தள்ளி பேருந்தில் இருந்த கம்பியால் அவரை முதுகில் சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. காயமுற்ற சுப்பையா பேருந்து முன்பாக உட்கார்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். மேலும் ஆத்திரமுற்ற கண்டக்டர் அங்கு காலணியை எடுத்து சுப்பையாவை கன்னத்தில் தாக்கிவிட்டு அங்கிருந்து கிளப்பிச் சென்றனர். சுப்பையா தாக்கப்பட்ட சம்பவம் குறித்து சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை கொடுத்து புகார் செய்தார். இதனையடுத்து இலத்துார் போலீஸார் கண்டக்டர் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.



















