செய்திகள் :

தொடரும் விலகல், தத்தளிக்கும் நிர்வாகிகள் : மம்தாவின் கைகளை விட்டு நழுவுகிறதா திரிணாமுல் காங்கிரஸ்?

post image

ஒரு அரசியல் கட்சிக்கு இரங்கற்பா எழுதுவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. கட்சிகள் என்பவை ஜெரிக்கோவின் ரோஜாக்கள் போன்றவை என்பார்கள். (ஜெரிகோவின் ரோஜா (Rose of Jericho) என்பது பாலைவனச் சூழலிலும் பல ஆண்டுகள் காய்ந்து போகாமல் உயிர்வாழும் ஒரு அதிசயத் தாவரமாகும்.)

பாதகமான சூழலில் பல ஆண்டுகள் காய்ந்த பந்து போல இருந்தாலும், சிறிதளவு ஈரப்பதம் கிடைத்ததும் மலர்ந்துவிடும். அந்த வகையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் (TMC) சின்னமான 'ஜோரா காஸ் ஃபூல்' (இரட்டைப் புல் பூக்கள்), தற்போது சந்தித்துவரும் மிக மோசமான நெருக்கடியிலிருந்து தப்பிப் பிழைக்குமா?

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

இந்தக் கேள்வி இன்று மேற்கு வங்கம் முழுவதும் எதிரொலிக்கிறது. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், வரவிருக்கும் 2029 மக்களவைத் தேர்தல் மற்றும் 2031 சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவை எதிர்கொள்ளும் அளவுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகள் தாக்குப்பிடிக்குமா? கிழக்கு மாநிலமான மேற்கு வங்கத்தில் பாஜக ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது, இனி அதன் பலம் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், திரிணாமுல் காங்கிரஸோ உள்ளுக்குள் சிதையத் தொடங்கியுள்ளது.

மம்தா பானர்ஜி மற்றும் அவரது மருமகனும், கட்சியின் தேசிய பொதுச் செயலாளருமான அபிஷேக் பானர்ஜியின் நிலைப்பாட்டிற்கு எதிராக, அதிருப்தி திரிணாமுல் தலைவர்கள் சந்தித்துப் பேசியதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, எம்.எல்.ஏ-க்களான சந்திபன் சஹா மற்றும் ரிதப்ரதா பானர்ஜி ஆகிய இருவரை கட்சி தலைமை திங்கள்கிழமை இடைநீக்கம் செய்தது.

கட்சியின் மூத்த தலைவரும் எம்.எல்.ஏ-வுமான குணால் கோஷ், "தவறாக வழிநடத்தப்பட்டு" கட்சித் தலைமைக்கு எதிராகச் செல்லும் எம்.எல்.ஏ-க்களிடம் "கைகூப்பிக் கேட்டுக்கொள்கிறேன்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மம்தாவே திங்களன்று தனது ஃபேஸ்புக் லைவ் மூலம், திரிணாமுல் காங்கிரஸை உடைக்க சதி நடப்பதாக ஒப்புக்கொண்டார்.

இது மம்தா பானர்ஜியின் அரசியல் வாழ்க்கையில் மிகவும் கடினமான காலகட்டங்களில் ஒன்று. 1998-ல் அவர் திரிணாமுல் காங்கிரஸைத் தொடங்கியபோது, அவருக்கு 40 வயது. இப்போது 71 வயதில், மூன்று தசாப்தங்களுக்கு முன்பு, தான் உருவாக்கிய கட்சியை தக்கவைத்துக்கொள்ளவும், தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் போராட வேண்டிய சவாலை எதிர்கொள்கிறார். இந்த 30 ஆண்டுகளில், 15 ஆண்டுகள் திரிணாமுல் ஆட்சியில் இருந்தது, அது அவரது உழைப்புக்கு கிடைத்த ரிசல்ட்.!

மம்தா பானர்ஜி - மேற்கு வங்கம்
மம்தா பானர்ஜி - மேற்கு வங்கம்

மேற்கு வங்கத்தில் கடந்த 50 ஆண்டுகளில் ஆட்சியை விட்டு வெளியேற்றப்பட்ட எந்தக் கட்சியும் மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 1977-ல் இடதுசாரிகளால் வெளியேற்றப்படுவதற்கு முன்பு காங்கிரஸ் மட்டுமே அந்த அரிய சாதனையைச் செய்தது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீதான கொள்கை ரீதியான அர்ப்பணிப்பும் கேள்வியாகியுள்ளது. நடிப்பு மற்றும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களில் ஒரு பெரிய பகுதியாக உள்ளனர். அவர்கள் வாக்காளர்களை ஈர்ப்பார்கள் என்பதாலும், சாதகமான கள நிலவரத்தாலும் அவர்களுக்கு சீட்டுகள் வழங்கப்பட்டன, அவர்களும் வெற்றி பெற்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இப்போது திரிணாமுல் காங்கிரஸுடன் தொடர்ந்து இருப்பார்களா என்பது சந்தேகமே, அதன் அறிகுறிகளை நாம் ஏற்கெனவே காணத் தொடங்கிவிட்டோம் என்கிறார்கள் தேசிய அரசியல் பார்வையாளர்கள்.

திரிணாமுல் காங்கிரஸ் திடீரென இவ்வளவு பலவீனமாகத் தெரிவது ஏன்?

திரிணாமுல் காங்கிரஸின் நெருக்கடி கடந்த ஞாயிறு அன்று வெளிச்சத்திற்கு வந்தது. மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெறவிருந்த கூட்டத்திற்கு, 80 திரிணாமுல் எம்.எல்.ஏ-க்களில் சுமார் 60 பேர் வரவில்லை என பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால், எம்.எல்.ஏ-க்கள் வராததற்கு திரிணாமுல் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ், அபிஷேக் பானர்ஜி மீதான தாக்குதலைத் தொடர்ந்து அவர்கள் போராட்டங்களில் பிஸியாக இருந்ததாகக் கூறி சமாளித்தார். இருப்பினும், 20 எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்திற்கு வந்திருந்தனர், அவர்களுடன் மம்தா ஒரு முறைசாரா கலந்துரையாடலை நடத்தினார். தன் எம்.எல்.ஏ-க்களை ஒன்றாக வைத்திருக்க மம்தா போராடுகிறார் என்பதே தற்போதைய தீவிரமான பேச்சாக உள்ளது.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

திரிணாமுல் ஆட்சி மீதான ஊழல், அடக்குமுறை மற்றும் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்த மக்களின் கோபம் ஒருபுறம் இருக்க, அபிஷேக் பானர்ஜியின் கீழ் பழைய தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டது மற்றொரு பெரிய காரணியாகப் பார்க்கப்படுகிறது. அரசியல் ஆலோசனை நிறுவனமான ஐ-பேக் (I-PAC)-ஐ கொண்டு வந்து அதிகாரம் அளித்ததற்காக அபிஷேக் பானர்ஜியை பல திரிணாமுல் தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தேர்தல் தோல்விக்கு மட்டுமல்லாமல், தொண்டர்களையும், நடுத்தர நிலை தலைவர்களையும் கட்சித் தலைமையிடமிருந்து அந்நியப்படுத்தியதற்கும் ஐ-பேக் தான் காரணம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

மிக முக்கியமாக, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்கள், திரிணாமுல் கட்சியின் பலத்தில் நம்பிக்கை இழந்து, வலுவான கப்பலான பாஜக-வை நோக்கிச் செல்லக்கூடும். தேர்தலில் வெற்றி பெற்று ஐந்து ஆண்டுகள் எதிர்க்கட்சியில் அமர பலரும் விரும்புவதில்லை.

திரிணாமுல் தலைவர்கள் வெளியேறத் தயாராகிவிட்டனரா?

கவுன்சிலர்கள் முதல் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி.க்கள் வரை பல திரிணாமுல் தலைவர்கள் கட்சி தாவத் தயாராக இருப்பதற்கான அறிகுறிகளைக் காட்டியுள்ளனர்.

பராசத் தொகுதி திரிணாமுல் எம்.பி. ககோலி கோஷ் தஸ்திதர், கடந்த வாரம் அனைத்து கட்சிப் பதவிகளிலிருந்தும் விலகினார். 1998-ல் மம்தாவுடன் நின்று கட்சியை நிறுவியவர்களில் ஒருவரான இவர், வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ஒரு நிர்வாகக் கூட்டத்தில் கலந்து கொண்டார். நாடியா, வடக்கு 24 பர்கானாக்கள் மற்றும் ஹூக்ளி ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த ஆறு திரிணாமுல் எம்.எல்.ஏ-க்களும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

திரிணாமுல் காங்கிரஸுக்கு 29 மக்களவை எம்.பி.க்கள் இருந்தனர். ஆனால் பசீர்ஹாட் எம்.பி. ஹாஜி நூருல் இஸ்லாமின் மரணத்திற்குப் பிறகு இந்த எண்ணிக்கை 28 ஆகக் குறைந்துள்ளது. அவர்களிடையே அதிருப்தி நிலவுவதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். 2029 மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸின் எதிர்காலம் பிரகாசமாக இல்லை என்று அவர்கள் நினைப்பதே இதற்குக் காரணமாக இருக்கலாம்.

மம்தா பானர்ஜி

மூத்த பத்திரிகையாளர் பிரசுன் ஆச்சார்யா இந்தியா டுடே ஊடகத்திடம் பேசுகையில், "இன்று, அதிருப்தி வெளிப்படையாகத் தெரிகிறது. ககோலி கோஷ் தஸ்திதர் பொதுவெளியில் பேசுகிறார். ரச்சனா பானர்ஜி, ஜூன் மாலியா மற்றும் சதாப்தி ராய் போன்ற பல பிரபல எம்.பி.க்களைக் காணவில்லை. கூச்பெஹாரின் ஜகதீஷ் பசுனியா, கொல்கத்தா பிராந்தியத்தைச் சேர்ந்த பார்த்தா பௌமிக் மற்றும் இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனான ஹவுராவின் பிரசுன் பானர்ஜி உள்ளிட்ட பல எம்.பி.க்களுக்கும் இது பொருந்தும்," என்றார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான், பஹராம்பூர் எம்.பி. பதவியை ராஜினாமா செய்யக்கூடும் என்றும் செய்திகள் வருவதாக அவர் மேலும் கூறினார்.

"மம்தா பானர்ஜி வேட்பாளர்களை அவர்களின் வெற்றி பெறும் திறனை அடிப்படையாகக் கொண்டே தேர்ந்தெடுத்தார். இவர்களில் பலர் ஒருபோதும் திரிணாமுல் காங்கிரஸுடன் கொள்கை ரீதியாக ஆழமாக இணைந்திருக்கவில்லை," என்கிறார் ஆச்சார்யா.

திரிணாமுல் அதிருப்தியாளர்களை பாஜக விரும்புகிறதா?

இருப்பினும், திரிணாமுல் அதிருப்தியாளர்களைச் சேர்ப்பதில் பாஜக எச்சரிக்கையாக இருப்பதாகவே தெரிகிறது. திரிணாமுல் எம்.எல்.ஏ-க்களைச் சேர்ப்பது அக்கட்சிக்கு பெரிய அளவில் உதவாது என்றாலும், எம்.பி.க்கள் மக்களவையில் அதன் பலத்தை அதிகரிக்கக்கூடும். ஆனால், திரிணாமுல்லின் 'பழைய தலைவர்கள் vs புதிய தலைவர்கள்' என்ற போரை தங்கள் கட்சிக்குள் இறக்குமதி செய்ய பாஜக விரும்பவில்லை. 2021 தேர்தலில், திரிணாமுல் கட்சி தாவியவர்களுக்கு வாய்ப்பளித்தது பாஜகவின் வெற்றி வாய்ப்புகளை பாதித்ததாகக் கூறப்பட்டது. வாக்காளர்கள் இவர்களை திரிணாமுல் ஊழலின் தொடர்ச்சியாகவே பார்த்ததும் ஒரு காரணம்.

திரிணாமுல் காங்கிரசுக்குள் நிலவும் கருத்து வேறுபாடு உண்மையானது. திங்களன்று தனது ஃபேஸ்புக் லைவ் உரையில், மம்தா பானர்ஜி இந்த குழப்பங்களை ஒப்புக்கொண்டார். சில திரிணாமுல் தலைவர்கள் தங்கள் சொந்த நலன்களைப் பாதுகாப்பதில் அதிக அக்கறை காட்டுவதாகவும், கட்சியை உடைக்க சதி நடப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மம்தா கூட்டிய கூட்டத்தில் இருந்து சுமார் 60 எம்.எல்.ஏ-க்கள் விலகி இருந்தது ஒருபுறம் என்றால், மறுபுறம் கட்சியில் இருந்து மொத்தமாக ராஜினாமாக்கள் தொடர்கின்றன. ஏழு மாநகராட்சிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் திரிணாமுல் காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக மே 26-ம் தேதி பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்தது. ககோலி கோஷ் தஸ்திதர், முன்னாள் ராஜ்யசபா எம்.பி. சாந்தனு சென், மற்றும் மூத்த செய்தித் தொடர்பாளர் அருப் சக்ரபர்த்தி உள்ளிட்ட பல முக்கிய முகங்கள் கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்துள்ளன. அதே நேரத்தில், முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி, திரைப்படத் தயாரிப்பாளர் ராஜ் சக்ரபர்த்தி போன்றோர் கட்சியை விட்டே வெளியேறிவிட்டனர்.

சனிக்கிழமையன்று அபிஷேக் பானர்ஜி மீதான தாக்குதலுக்குப் பிறகு கூட, பல திரிணாமுல் தலைவர்கள் அதைக் கண்டிக்க முன்வரவில்லை.

மம்தா பானர்ஜி - அபிஷேக் பானர்ஜி
மம்தா பானர்ஜி - அபிஷேக் பானர்ஜி

"நீங்கள் திரிணாமுல் காங்கிரஸை எவ்வளவு உடைக்க முயற்சிக்கிறீர்களோ, அவ்வளவு அது வலுப்பெறும்," என்று மம்தா கூறினார். "திரிணாமுல் தலைவர்களை நம்பியிருக்கும் கட்சி அல்ல, தொண்டர்களை நம்பியிருக்கும் கட்சி. தலைவர்கள் பயப்படுவார்கள், தொண்டர்கள் பயப்படமாட்டார்கள். தொண்டர்கள் என்னுடன் இருக்கும் வரை நான் கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவேன்," என்றும் அவர் உறுதியளித்தார்.

மம்தாவின் கைகளில் இருந்து கட்சி நழுவுகிறதா?

உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவார் விஷயத்தில் நடந்தது போல, அதிருப்தி திரிணாமுல் தலைவர்கள், கட்சியை நிறுவிய மம்தாவிடமிருந்தே அதைப் பறிக்கும் சாத்தியம் உள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது. தற்போது மாற்றுத் தலைமை யாரும் இல்லை என்றாலும், அரசியலில் எதையும் நிராகரிக்க முடியாது.

மம்தாவின் நீண்டகால சகாவும், மூத்த தலைவருமான குணால் கோஷ், கட்சி எம்.எல்.ஏ-க்களிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். "நான் நமது எம்.எல்.ஏ-க்களிடம் கைகூப்பிக் கேட்டுக்கொள்கிறேன். நாம் நமது சொந்த பலத்தால் தேர்தலில் வெற்றி பெறவில்லை. திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மம்தா பானர்ஜியின் படத்தைப் பயன்படுத்தியே நாம் வெற்றி பெற்றோம். நமக்கு அந்த பலம் இருந்திருந்தால், நாம் தனியாகவே வெற்றி பெற்றிருப்போம்," என்று அவர் பேசிய காணொளி வெளியாகியுள்ளது.

திரிணாமுல் கட்சியின் பலவீனமே அதன் பலமும்தான். மம்தா பானர்ஜிதான் திரிணாமுல் காங்கிரஸ். அவர்தான் அதன் உயிர்நாடி. போராடும் குணம் அவரிடம் இருக்கும் வரை, கட்சிக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும், மம்தாவும் அவரது கட்சியும் ஒருபுறம் பாஜகவின் அசுர வளர்ச்சியையும், மறுபுறம் உள் கட்சிப் பூசலையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்கின்றன. 2029 மக்களவைத் தேர்தல் மற்றும் 2031 சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்பு இது ஒரு வாழ்வா, சாவா போராட்டம். இந்த புயலை திரிணாமுல் காங்கிரஸ் தாங்கிக்கொள்ளக்கூடும், ஆனால் அதற்காக அது கொடுக்கப் போகும் அரசியல் விலை என்ன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.!

"ஒரு தொகுதியில தனிச்சின்னத்தில போட்டியிடலாம்'னு சொன்னாங்க, அப்புறம்.!" - வைகோ ஆதங்கம்

முதல்வர் விஜய்யை மதிமுக எம்.பி துரை வைகோ நேற்று திருச்சி விமான நிலையத்தில் வரவேற்றிருந்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "நாங்கள் இனி தனி இயக்கம். நாங்கள் துரதிஷ்டவசமாக தி.ம... மேலும் பார்க்க

Vijay: "உதவியாளர் வீட்டு விழாவைச் சிறப்பிக்க பெண்களின் பாதுகாப்பை Compromise செய்தீர்களா?" - இபிஎஸ்

சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையைத் தட்டிக் கேட்ட 23 வயது விஷ்ணு என்ற இளைஞரை சுத்தி, அம்மிக்கல், பீர் பாட்டில் போன்றவற்றால் அடித்துக் கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்க... மேலும் பார்க்க

"திமுக மீது பழி போடுவதை நிறுத்திவிட்டு, முதல்வர் பொறுப்புடன் செயல்படுவது எப்போது?" - கனிமொழி கேள்வி

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகே பெண் ஒருவர் தவெக நிர்வாகிகள் இருவரால் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் செல்லப்பட்டு, மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். பாதி... மேலும் பார்க்க

`உள்ளே நடந்தது ஒன்று; சொன்னது வேறு' நெதன்யாகு மீது கோபத்தில் ட்ரம்ப் - போன்காலில் வெடித்த பிரச்னை?

நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இருவரும் தொலைபேசியில் பேசியுள்ளனர். ட்ரம்ப் ஈரான் போரை முடிப்பதில் மும்முரமாக இருக்கிறார். ஆனால், நெதன்யாகுவோ அதற்கு முட்டுக்கட்டை போடு... மேலும் பார்க்க