"திமுகவில் உள்ள ஒவ்வொருவரையும் குறிவைத்து தாக்குவதற்கு பாஜக தயாராகிவிட்டது" -அமை...
தொழிலதிபர் அனில் அம்பானியின் ரூ.3000 கோடி சொத்து பறிமுதல்; அமலாக்கப்பிரிவு அதிரடி மேலும் தொடருமா?
தொழிலதிபர் அனில் அம்பானி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்துக்காக வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாததால், அவரது பல நிறுவனங்கள் திவாலானது. இதைத் தவிர, யெஸ் வங்கி உட்பட பல வங்கிகளில் கடன் வாங்கியதும், அதனையும் திரும்ப செலுத்தவில்லை.
ரிலையன்ஸ் நிப்பான் மியூச்சுவல் பண்ட் நிறுவனம் தனது நிதியை அனில் அம்பானிக்கு சொந்தமான நிறுவனங்களில் முதலீடு செய்யும்படி நிர்பந்திக்கப்பட்டது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் வங்கிகளில் பெற்ற கடனில் ரூ.13 ஆயிரம் கோடியை ரிலையன்ஸ் குழுமத்தில் உள்ள வேறு நிறுவனங்களுக்கு திருப்பி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக சமீபத்தில் அனில் அம்பானியின் வீடும் நிறுவனங்களும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டன. அதோடு, அனில் அம்பானி நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் சிலர் நேரில் வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

இந்நிலையில், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அனில் அம்பானியின் சொத்துக்களை பறிமுதல் செய்ய தொடங்கி உள்ளனர். முதல் கட்டமாக ரூ.3 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கப் பிரிவு பறிமுதல் செய்துள்ளது.
இதில் மும்பை பாந்த்ரா பாலிஹில் பகுதியில் உள்ள அனில் அம்பானியின் வீடும் அடங்கும். இதைத் தவிர, வீடுகள், நிலங்கள், டெல்லி, நொய்டா, மும்பை, சென்னை, புனே, கோவா, ஐதராபாத் போன்ற இடங்களில் உள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேஷனுக்குச் சொந்தமான அலுவலகங்கள் மற்றும் டெல்லியில் உள்ள அம்பானியின் ரிலையன்ஸ் சென்டர் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

டெல்லியில் உள்ள ரிலையன்ஸ் சென்டர் 3 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது; இதன் மதிப்பு ரூ.2,100 கோடியாகும். சென்னையில் 29 பிளாட்டுகள், காசியாபாத் மற்றும் நொய்டாவில் உள்ள நிலங்கள் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் வங்கிகளில் பெற்ற கடன் தொகையில் ரூ.13 ஆயிரம் கோடியை தங்களது குழுமத்தில் உள்ள பிற நிறுவனங்களுக்கு திருப்பிவிட்டது. இதைத் தவிர, ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தில் யெஸ் வங்கி ரூ.2,965 கோடி முதலீடு செய்திருந்தது.
மேலும், அனில் அம்பானியின் RCFL நிறுவனத்திலும் யெஸ் வங்கி ரூ.2,045 கோடி முதலீடு செய்தது. ஆனால் இந்த இரண்டு தொகையும் 2019ஆம் ஆண்டு வராக்கடனாக மாறியது. வரும் வாரங்களில் மேலும் பல சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அமலாக்கப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அனில் அம்பானியை கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி டெல்லிக்கு வரவைத்து விசாரணை நடத்தினர். அதோடு, அனில் அம்பானியின் நிறுவனங்களுக்கு எதிராக சி.பி.ஐ இரண்டு வழக்குகளையும் பதிவு செய்துள்ளது.





















