நிகழ மறுத்த அற்புதம்! : மிகவும் வருத்தத்தை ஏற்படுத்திய `காந்தா’ திரைப்படம்
நடிகை பிரதியுஷா மரண வழக்கு: 24 ஆண்டுகள் கழித்து வெளியான தீர்ப்பு; காதலனுக்கு செக்!
தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை பிரதியுஷா. தமிழில் மனுநீதி, தவசி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக விஜயகாந்த் அவர்களுடன் தவசி படத்தில் அவர் நடனமாடும் `பஞ்சாங்கம் பாக்காதே மாமா' பாடல் தற்போது வரை மிகவும் பிரபலம்
நடிப்பு துறையில் உச்சத்தை நெருங்கிக் கொண்டு வந்திருந்த நேரத்தில் கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி ஹைதராபாத்தில் நடிகை பிரதியுஷா விஷம் அருந்தி உயிரிழந்தார். அவருடன் விஷம் அருந்திய அவரது காதலர் சித்தார்த்த ரெட்டி உயிர் பிழைத்தார். இருவரும் திருமணம் செய்ய குடும்பத்தினர் சம்மதிக்காததால் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்பட்டது.

இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் சித்தார்த்த ரெட்டிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
பின்னர் 2011 ஆம் ஆண்டு ஆந்திர உயர்நீதிமன்றம் இந்தத் தண்டனையை 2 ஆண்டுகளாகக் குறைத்தது.
எனினும் நடிகை பிரதிஷ்யா தாயார் தனது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதேபோல நடிகையின் காதலனும் தனக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராஜேஷ் பிண்டல் மற்றும் மன்மோகன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கில் தண்டனை பெற்ற சித்தார்த்த ரெட்டியின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்ததுடன், அவர் இன்னும் 4 வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
அதே வேளை பிரதியுஷாவின் தாய் சரோஜினி தேவி தாக்கல் செய்த மனுவில், தனது மகள் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், மருத்துவ ஆதாரங்களின்படி இது விஷம் அருந்தியதால் ஏற்பட்ட மரணம் என்பது உறுதியாகியுள்ளதாகக் கூறி அந்தப் புகார்களை நீதிமன்றம் நிராகரித்தது. ஆனால் தற்கொலைக்குத் தூண்டிய குற்றத்திற்காக சித்தார்த்த ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்தது.

உச்ச நீதிமன்றம் வழங்கிய இந்த உத்தரவால் நடிகை பிரதியுஷாவின் மரணத்தில் இருந்த 24 ஆண்டுகால மர்மம் விலகி உள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஒரு தற்கொலை வழக்கை முடிக்க கால் நூற்றாண்டு ஆகியிருக்கிறது என்பது மற்றொரு பக்கம் கசப்பான உண்மையாகவும் உள்ளது.


.png)















