GVM 25: "எனக்கு கிடைச்ச அன்புக்கும், மரியாதைக்கும் 'காக்க காக்க' படமும் ஒரு காரண...
தென்பெண்ணையாறு நீர்ப்பங்கீடு; 'ஒரு மாதத்தில் தீர்ப்பாயம்' - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
தமிழகம்-கர்நாடக மாநிலங்களுக்கு இடையே தென்பெண்ணையாறு நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் ஏற்படும் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படுத்துவதற்கான தீர்ப்பாயத்தை ஒரு மாதத்தில் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகும் பெண்ணையாற்று நீரை தமிழ்நாட்டிலுள்ள தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களுடன் அதன் அருகிலுள்ள மாவட்டங்களிலும் விவசாயத்திற்கு நம்பி உள்ளனர்.
இந்த நிலையில் மார்க்கண்டேய நதியின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது.
இந்த விவகாரம் சம்பந்தமாக மத்திய அரசை எதிர்த்தும், கர்நாடக அரசை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு 2018 ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கில், "1892 மற்றும் 1933 ஆண்டுகளில் செய்யப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் தென்பெண்ணையாற்றின் குறுக்கே அணை அல்லது தடுப்பணை கட்ட கர்நாடக அரசுக்கு உரிமை இல்லை.
அணை அல்லது தடுப்பணை கட்டினால் தமிழகத்துக்கு வரும் நீரின் அளவு குறைந்து விவசாயிகளுக்குப் பெரும் பாதிப்பை உருவாக்கும். இதில் தீர்வு ஏற்படுத்த மத்திய அரசு திடமான நடவடிக்கையை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தது.

முன்பு நடந்த இந்த வழக்கில் விசாரணைகளில் 'குடிநீர் தேவைக்காகவே அணை கட்ட முடிவு செய்யப்பட்டது. இது ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்களை மீறும் நடவடிக்கை அல்ல' என்று கர்நாடகா அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
'மத்திய அரசின் பிரதிநிதிகளின் முன்னிலையில் இரு மாநிலங்களின் அமைச்சர்கள் மூலம் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முயற்சி எடுத்து வருகிறோம்' என்று மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கூறப்பட்டது .
'நேரடி பேச்சுவார்த்தையில் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை, அதனால் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும்' என்று தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த வழக்கு விசாரணையின்போது, 'தென்பெண்ணையாறு நதி நீர் பங்கீடு தீர்ப்பாயம் அமைக்கும் பரிந்துரை தயாரிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெற்ற பின்பு தீர்ப்பாயம் அமைக்கப்படும்' என்று மத்திய அரசு தரப்பில் மீண்டும் விளக்கம் அளிக்கப்பட்டதால் இந்த வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
இந்த நிலையில் பிப்ரவரி 2 ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிபதிகள் விக்ரம் நாத், என்.வி.அன்ஜாரியா அமர்வு, "தமிழ்நாடு- கர்நாடக மாநிலங்களுக்கு இடையேயான தென்பெண்ணையாற்று நீர்ப் பங்கீடு பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் தீர்ப்பாயத்தை மத்திய அரசு ஒரு மாதத்தில் அமைக்க வேண்டும்" என்று தீர்ப்பளித்தது.
தென்பெண்ணை நீர் பங்கீடு குறித்தும், வழக்கு குறித்தும், இதற்காக தமிழக அரசு எடுத்து வரும் முயற்சிகள் குறித்தும் விரிவான அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தீர்ப்பாயத்தை உடனே ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

















