`நாங்க காதலிக்கிறோம்’ - 17 வயது சிறுமியை கடத்திச்சென்று, வன்கொடுமை செய்ததாக இளம்பெண் கைது
மும்பை கொலாபா பகுதியை சேர்ந்த 17 வயது மைனர் பெண் கடந்த மாதம் திடீரென காணாமல் போய்விட்டார். அவர் கடந்த மாதம் 7ம் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. மைனர் பெண் தனது பாட்டியுடன் வசித்து வந்தார். ஆனால் அவரது பெற்றோர் மும்பை கிழக்கு புறநகர் பகுதியில் வசித்து வருகின்றனர். அப்பெண் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் தனது பெற்றோருக்கு ஒரு மெசேஜ் அனுப்பினார். அதில் நான் எனது விருப்பத்துடன் வெளியில் செல்வதாகவும், என்னைப்பற்றி கவலைப்படவேண்டாம் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
உடனே அவரது பெற்றோர் தங்களது மகளை தேட ஆரம்பித்தனர். ஆனால் அப்பெண் எங்கும் கிடைக்கவில்லை. இதையடுத்து தங்களது மகளை காணவில்லை என்று கூறி போலீஸில் புகார் செய்தனர். காணாமல் போன பெண் மைனர் என்பதால் போலீஸார் கடத்தல் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். அப்பெண் தனது மொபைல் போனை ஆப் செய்து வைத்திருந்தார்.
அப்பெண்ணை காணவில்லை என்று அப்பெண்ணின் அத்தை தனது சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருந்தார். அவர் பதிவிட்டவுடன் மைனர் பெண் தான் பாதுகாப்புடன் இருப்பதாக கூறி பதில் கொடுத்திருந்தார். உடனே சுதாரித்துக்கொண்ட போலீஸார் அப்பெண்ணின் சோசியல் மீடியா பதிவு மூலம் அவர் எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடித்தனர். அப்பெண் மும்பை புறநகரில் உள்ள வீராரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கி இருப்பது தெரிய வந்தது. உடனே போலீஸார் அங்கு விரைந்து சென்றனர். ஆனால் மைனர் பெண்ணும் மற்றொரு 24 வயது பெண்ணும் சேர்ந்து ஹோட்டலுக்கு வந்து சென்று இருப்பது தெரிய வந்தது. ஆனால் ஹோட்டல் நிர்வாகம் அவர்களுக்கு அறை கொடுக்க மறுத்துள்ளது.
அவர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தனர். அவர்கள் இரண்டு பேரையும் ஹோட்டலில் இறக்கி விட்ட ஆட்டோ டிரைவரிடம் போலீஸார் விசாரித்தனர். இதில் அவர்கள் பஸ் டெப்போவில் இறங்கியதும், புதிய சிம்கார்டு வாங்கியதும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் தெரிய வந்தது.
புதிய போன் நம்பர் போலீஸாருக்கு கிடைத்தது. அதன் அடிப்படையில் இரு பெண்களின் நடமாட்டத்தை போலீஸார் கண்காணித்தனர். அவர்கள் வீராரில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்கி இருப்பது தெரிய வந்தது. உடனே போலீஸார் ரிசார்ட் சென்றனர். அங்கு மைனர் பெண்ணும், 24 வயது பெண்ணும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை போலீஸார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இருவரும் ரிசார்டில் இருந்தவர்களிடம் தங்களை சகோதரிகள் என்றும், தேர்வு எழுத வந்திருப்பதாகவும் தெரிவித்திருந்தனர். மைனர் பெண்ணை மருத்துவ பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அப்பெண்ணுடன் இருந்த 24 வயது பெண் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு புதிதாக சேர்க்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். மைனர் பெண் தனது வீட்டிற்கு செல்ல மறுத்துவிட்டார். இதையடுத்து அவரை சிறார் முகாமிற்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். அவர்களிடம் விசாரித்த போது தாங்கள் இருவரும் காதலிப்பதாக தெரிவித்தனர். இருவரும் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக ஒருவரை ஒருவர் காதலித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.