செய்திகள் :

நிதிஷ் குமார் மீண்டும் முதல்வர் ஆவாரா? பரபர பீகார் தேர்தல்

post image

லாலுவின் வீழ்ச்சியும் நிதிஷின் எழுச்சியும்!

பீகாரில் 1952 முதல் 1967 வரை காங்கிரஸ் கட்சியே ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் அந்தக் கட்சியில் ஆதிக்க சாதியினருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதாகச் சர்ச்சை வெடித்தது. இதைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார், ஜனதா தளம் கட்சியிலிருந்த லாலு பிரசாத் யாதவ். அங்கு பெரும்பான்மையாக இருக்கும் யாதவ் சமூகத்தினரை ஒன்றிணைத்து, 1990ல் பீகார் முதல்வரானார். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பலரை அரசியல் பதவிகளில் அமர்த்தியதன் மூலம் அசைக்கமுடியாத சக்தியாக மாறினார். இரண்டாவது முறையாக 1995ல் முதல்வரானார். அப்போது வெடித்த கால்நடை தீவன ஊழல் வழக்குகள் லாலுவின் அரசியல் வாழ்க்கையில் மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தின. 1997-ல் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கினார்.

லாலு பிரசாத் யாதவ்
லாலு பிரசாத் யாதவ்

நீதிமன்றத்தில் லாலுவுக்கு எதிரான தீர்ப்பு கிடைத்ததால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். அந்தநேரத்தில் பீகாரில் சட்டம்-ஒழுங்கு நிலை மோசமடைந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தக் காலப்பகுதி எதிர்க்கட்சிகளால் 'ஜங்கிள் ராஜ்' (காட்டு ஆட்சி) என்று விமர்சிக்கப்பட்டது. இதனால் மக்களின் ஆதரவை லாலு இழந்தார். அதுவரை லாலுவுடன் பயணித்துவந்த நிதிஷ் குமார் ஜனதா தளத்திலிருந்து விலகினார். 1994ல், ஜார்ஜ் பெர்னாண்டஸுடன் நிதிஷ் குமார் இணைந்து சமதா கட்சியைத் தொடங்கினார். 1996 முதல் பா.ஜ.க-வுக்கு ஆதரவு அளிக்கிறார். பிறகு 2000ல் பா.ஜ.க தலைமையிலான தே.ஜ கூட்டணியின் ஆதரவுடன் முதல் முறையாக பீகாரின் முதலமைச்சரானார். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியதால் ஏழு நாட்களுக்குப் பிறகு ராஜினாமா செய்தார்.

ஏழு முறை முதல்வர்!

பிறகு 2003ல் சமதா கட்சி அதிகாரப்பூர்வமாக ஜனதா தளம் (ஐக்கிய) உடன் இணைக்கப்பட்டது. 2005ல் பா.ஜ.க கூட்டணிக் கட்சியாக இருந்த நிலையில் நிதிஷ் குமார் பீகார் முதலமைச்சரானார். அதே கூட்டணியில் 2010ல் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறார். 2013ல் பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி அறிவிக்கப்படுவதாகச் செய்தி வெளியானதும், தே.ஜக்கூட்டணியிலிருந்து வெளியேறினார். 2015ல் லாலு பிரசாத், காங்கிரசுடன் இணைந்து மகாகத்பந்தன் கூட்டணியை உருவாக்கி, முதல்வரானார். பிறகு கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டதும், 2017ல் மீண்டும் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்து ஆறாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார்.

சிராக் பஸ்வான், தேஜஸ்வி, நிதிஷ் குமார், மஞ்சி
சிராக் பஸ்வான், தேஜஸ்வி, நிதிஷ் குமார், மஞ்சி

அதே கூட்டணியில் 2020 தேர்தலில் வெற்றிபெற்று ஏழாவது முறையாக முதல்வரானார். பாஜகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், நடந்து முடிந்த நாடாளுமன்றத்தில் 'இந்தியா' கூட்டணி உருவாக்குவதில் முக்கியப்பங்கு வகித்தார். இறுதியில் பா.ஜ.க-வுடன் கைகோத்தார். இந்தச் சூழலில்தான் வரும் 6, 11 தேதிகளில் இரு கட்டங்களாகப் பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. முடிவுகள் நவம்பர் 14-ம் தேதி அறிவிக்கப்படும் என, தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இந்தத் தேர்தலை பாஜகவுடன் இணைந்து சந்திக்கிறார், நிதிஷ். இதில் அவருக்கு இருக்கும் சவால்கள்தான் என்ன?

இதுகுறித்து நம்மிடம் பேசிய அரசியல் நோக்கர்கள், "பீகார் தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தே.ஜ கூட்டணிக்கும், ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணிக்கும் இடையில் நேரடி போட்டி நிலவுகிறது. போதாக்குறைக்கு ஓவைசி, பிரசாந்த் கிஷோர் களத்தில் இருக்கிறார்கள். மகாகத்பந்தன் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுவிட்டார். ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் இன்னும் நேரடியாக அறிவிக்கப்படவில்லை. இதனால் முதல்வர் பதவிகுறித்த பல்வேறு ஊகங்கள் எழுந்தன.

அமித்ஷா
அமித்ஷா

மீண்டும் முதல்வராவாரா நிதிஷ்?

இதுகுறித்து சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “முதலமைச்சர் வேட்பாளரை நான் எப்படி தேர்வு செய்ய முடியும்? கூட்டணி கட்சித் தலைவர்கள் உள்ளனர். தேர்தல் முடிந்த பிறகு அவர்களுடன் சேர்ந்து ஆலோசித்து அதன் பிறகே அறிவிக்க முடியும். ஆனால், எங்கள் கூட்டணி நிதிஷ் குமார் தலைமையில் தான் தேர்தலைச் சந்திக்கிறது” எனத் தெரிவித்தார். இதையடுத்து முதலமைச்சராக நிதிஷ்குமார் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படமாட்டார் எனப் பலரும் பேசத் தொடங்கினர்.

இப்படியான சூழலில் மற்றொரு தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், "முதலமைச்சருக்கான வெற்றிடம் இங்கு இல்லை, அதில் எந்தக் குழப்பமும் இல்லை. நிதிஷ்குமார் தலைமையின் கீழ் தேர்தலை எதிர்கொள்கிறோம் என நான் ஏற்கெனவே சொல்லிவிட்டேன். லாலுவுக்கு அவரின் மகன் முதலமைச்சராக வேண்டும். சோனியாவுக்கு அவரின் மகன் பிரதமராக வேண்டும். ஆனால், பீகார், டெல்லியில் அதற்கான வெற்றிடம் இல்லை என்பதை நான் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியும், பீகாரில் முதலமைச்சர் நிதிஷ் குமாரும் இருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார். ஆனாலும் பீகாரில் 'ஏக்நாத் ஷிண்டே சூழ்நிலை' ஏற்படும் எனப் பலரும் கருதுகின்றனர்.

பிரதமர் மோடி - நிதிஷ் குமார் - பீகார்
பிரதமர் மோடி - நிதிஷ் குமார் - பீகார்

இது எனது கடைசி தேர்தல்!

இதற்கு நிதிஷ் அடிக்கடி கூட்டணியை மாற்றுவதால் அவருடைய நம்பகத்தன்மை மீது கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இது எதிர்க்கட்சிகளுக்கு அவரை விமர்சிக்க ஒரு பெரிய ஆயுதமாக உள்ளது. தற்போது தே.ஜ கூட்டணியில் இருந்தாலும், பா.ஜ.க-வுடன் அவருக்குள்ள உறவு முன்புபோல வலுவாக இல்லை. கூட்டணியில் அவரது முக்கியத்துவம் குறைந்து வருகிறது. பா.ஜ.க-வின் ஒரு பிரிவினர் மத்தியில் அவருக்கு முழுமையான ஆதரவு இல்லை என்ற கருத்து நிலவுகிறது. இது அவர் வெற்றி பெற்றாலும், அவரது எதிர்கால முதலமைச்சர் பதவிக்குச் சவால் அளிக்கலாம். அவருடைய வயது, நீண்டகால ஆட்சி ஒருவித அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இது நிதிஷ் குமாருக்கும் தெரியும். எனவேதான் "இது எனது கடைசி தேர்தல்" என்று உணர்ச்சிப்பூர்வமாகப் பேசி வருகிறார். மேலும் பீகார் இன்னமும் இந்தியாவின் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றாகவே உள்ளது.

வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவித்தொகை போன்ற திட்டங்களை அறிவித்தாலும், மாநிலத்தில் பெருமளவில் வேலைவாய்ப்பை உருவாக்குவது அவருக்கு இருக்கும் மிகப்பெரிய சவால். கல்வி, சுகாதாரத் துறைகளில் இன்னும் பெரிய அளவில் குறைபாடுகள் நீடிப்பதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதால் சிறுபான்மையினருக்கு ஆதரவானவர் என்ற பிம்பத்தை நிலைநாட்டுவதில் சவால்கள் உள்ளன. அவர் பா.ஜ.க-வுடன் கைகோத்திருப்பது, இந்த ஆதரவு தளத்தில் பிளவை ஏற்படுத்தியிருக்கிறது. ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் வலுவான மாற்றுத் தலைவராக உருவெடுத்துள்ளார். இளைஞர்கள் மத்தியில், வேலைவாய்ப்பு போன்ற பிரச்னைகளை மையமாக வைக்கும் அவரது பிரசாரம் நிதிஷ் குமாருக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. இருப்பினும் எதிர்க்கட்சி கூட்டணியில் நிலவும் ஈகோ மோதல் நிதிஷுக்கு பெரும் பலமாக இருக்கிறது" என்றனர்.

குபேந்திரன்

தே.ஜ கூட்டணிக்கு வாய்ப்பு!

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், "பீகார் தேர்தலில் நிதிஷ் குமாரை பா.ஜ.க கையில் எடுத்தது நல்ல மூவ். அதைச் செய்ய ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் தவறவிட்டுவிட்டது. பீகாரில் நிதிஷுக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது. அங்கு மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால், பெண்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். வெளிமாநிலங்களில் வேலை செய்யும் ஆண்கள் சம்பாதிக்கும் பணத்தை சரியாக வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்கள். கூடவே ரூ.10,000 வழக்கும் திட்டம் மக்களிடத்தில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதனால் தே.ஜ கூட்டணிகுத்தான் வெற்றி வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

அதேநேரத்தில் அங்கிருக்கும் மக்கள் இவ்வளவு ஆண்டுகால நிதிஷ் ஆட்சி செய்துவிட்டார். தற்போது பா.ஜ.க மறைமுகமாக ஆட்சி செய்கிறது என்பதை உணர வேண்டும். அப்போதுதான் மகாகத்பந்தன் கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும். அதேநேரத்தில் ராஷ்டிரிய ஜனதாதளத்தின் வேட்பாளர்கள் பலர் குற்ற வழக்குகளில் தொடர்பு இருப்பதும், காங்கிரஸ் அதிக தொகுதிகளில் நிற்பதும், ராகுல்காந்தியின் தாமதமான பிரசாரமும் மகாகத்பந்தன் கூட்டணிக்கு மிகப்பெரிய பின்னடைவு. இதுவும் தே.ஜ கூட்டணிக்கு மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது. அறிவித்தாலும், அறிவிக்காவிட்டாலும் நிதிஷ் குமார்தான் மீண்டும் முதல்வர்" என்றார்.

"அதிமுகவில் உள்ள குடும்ப அரசியலால் மூத்த நிர்வாகிகளுக்கு இடையூறு" - இபிஎஸ் மீது செங்கோட்டையன் புகார்

அதிமுகவில் உள்கட்சி பூசல் உச்சத்தில் உள்ளது. ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி தினகரன், சசிகலா ஆகியோர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மன நிலையில் உள்ளார்கள். அந்த வரிசையில் தற்போ... மேலும் பார்க்க

30% மதிப்பு குறைந்தும் தாவூத் இப்ராகிம் குடும்ப சொத்தை ஏலம் எடுக்க ஆர்வம் காட்டாத மக்கள்! - இனி?

மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள தாவூத் இப்ராகிம், இப்போது பாகிஸ்தானில் தனது குடும்பத்தினர் மற்றும் கூட்டாளிகளுடன் பதுங்கியிருக்கிற... மேலும் பார்க்க

US: நியூயார்க் மேயர் தேர்தல்; டிரம்பை எதிர்த்து அபார வெற்றி பெற்ற இளைஞர் `ஜோஹ்ரான் மம்தானி' யார்?

நியூயார்க் மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றுள்ளார்.1969-ம் ஆண்டுக்குப் பிறகு, 2 மில்லியன் வாக்குகளுக்கு மேல் பெற்ற முதல் மேயராகும் பெருமையை ஜோஹ்ரான் மம்தானி ப... மேலும் பார்க்க

``அய்யாவைச் சுற்றி திமுக கைக்கூலிகள், தீய சக்திகள்; நான் சேர மாட்டேன்!'' - உறுதியாகச் சொன்ன அன்புமணி

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் நேற்று இரவு 100-வது நாள் நடைப்பயணத்தை மேற்கொண்ட பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், அதைத்தொடர்ந்து பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொ... மேலும் பார்க்க

``துரோகம், சமூகநீதி, சுயமரியாதை பற்றி பேச திமுக, அதிமுக-வுக்கு அருகதையில்லை'' - சீமான் காட்டம்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மணப்பாறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நோக்கில் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:கோவை சம்... மேலும் பார்க்க

கோவை: ``எந்த பெண்ணுக்கும் நடக்கக் கூடாத கொடூரம்'' - துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வேதனை

துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தனிநபர் தன் ஒழுக்கத்தை கடைபிடித்து வாழ்வது என்பது கடினம் என்ற சிந்தனைக்கு சொந்தக்காரன் நான். சி.பி. ராதாகிருஷ்ண... மேலும் பார்க்க