"நீ தினமும் எங்க போயிட்டு வர்றேன்னு" - Emotional-ஆக பேசிய Actor Sivakarthikeyan ...
நீதிமன்றத்தையே ஏமாற்றிய கும்பல்: கொலை, கொள்ளை, பாலியல் குற்றவாளிகளுக்கு ஜாமீன் - தரகர்கள் கைது!
உத்தரப்பிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டத்தில், தொழில்முறை `ஜாமீன் தரகர்களாக'ச் செயல்பட்ட ஒரு கும்பலை காவல்துறை கடந்த புதன்கிழமை கைதுசெய்திருக்கிறது.
கொலை, பாலியல் வன்கொடுமை, கொள்ளை போன்ற கொடூரமான குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு ஜாமீன் பெற்றுத் தருவதற்காக, போலி நில வருவாய் ஆவணங்கள், போலியான ஆதார் அட்டைகள் மற்றும் போலியான அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி குற்றவாளிகளுக்கு ஜாமீன் பெறப்பட்டிருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக நடந்த விசாரணை குறித்து தெரிவித்த காவல்துறை, ``இந்தக் கும்பல் குறைந்தபட்சம் 23 வழக்குகளில் மோசடியாகப் பிணை பெற்றுத் தந்துள்ளது தெரியவந்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட ராம் கிஷோர் 13 வழக்குகளில் போலியான நில வருவாய் ஆவணங்களை ஏற்பாடு செய்தது தெரியவந்திருக்கிறது.

அவரது கூட்டாளிகளான விஸ்வநாத் பாண்டே, பிரவீன் தீட்சித், தர்மேந்திரா மற்றொரு கூட்டாளியான அமித் மூன்று வழக்குகளிலும் ஜாமீன் தாரர்களாக வேலைபார்த்திருக்கிறார்கள். பிரவீன் தீட்சித் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கொலைக் குற்றவாளி. தற்போது உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஜாமீனில் வெளியே இருந்தார்.
பிரேம் சங்கர் நீதிமன்ற வளாகத்தில், தொழில்முறை குற்றவாளிகளுக்கு ஜாமீன் தாரர்களையும், போலி ஆவணங்களையும் ஏற்பாடு செய்வதில் முக்கியப் பங்கு வகித்திருக்கிறார்.
நீதிமன்றத்தையே ஏமாற்றி ஜாமீன் பெற்றவர்களில் ஒரு கொலைக் குற்றவாளி உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இந்தக் கும்பல் ஒரு வழக்குக்கு சுமார் ரூ.20,000 வரை கட்டணமாக வசூலித்தாகக் கூறப்படுகிறது. மேலும் விசாரணை நடந்து வருகிறது" என்றது.


















