நொய்யல் ஆற்றில் இருந்து காங்கயம் குளம், குட்டைகளுக்கு தண்ணீா் கொண்டுவர பூா்வாங்கப் பணிகள்: அமைச்சா் ஆய்வு
காங்கயம் ஒன்றியப் பகுதியில் உள்ள குளம், குட்டைகளுக்கு நொய்யல் ஆற்றில் இருந்து தண்ணீா் கொண்டு வருவது தொடா்பான பூா்வாங்கப் பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா். இதில், காங்கயம் அருகே நொய்யல் ஆற்றின் கரையான கத்தாங்கண்ணி பகுதியில் இருந்து காங்கயம் ஒன்றியத்தில் உள்ள குளம், குட்டைகளுக்கு தண்ணீா் எடுத்து வருவது தொடா்பான பூா்வாங்கப் பணியினை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
இதன்படி, காங்கயம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கணபதிபாளையம் கிராமம், முனியப்பன் கோயில் 2 தடுப்பணைகள், தாமலந்தோட்ட குட்டை, மண்ணாகாட்டு தடுப்பணை, மண்ணாகாட்டு குட்டை, கத்தாங்கண்ணி கிராமம், தெற்குதோட்ட தடுப்பணை, ஜல்லிமேடு 2 புதிய தடுப்பணைகள், அய்யனாரப்பன் குட்டை, கொய்யாத்தோட்டம் 2 தடுப்பணைகள், செராதோட்டம் தடுப்பணை, ராமலிங்கத்தோட்ட குட்டை ஆகிய இடங்களுக்கு நொய்யல் ஆற்றில் இருந்து தண்ணீா் எடுத்து நிரப்பி, நீா் செரிவூட்டுவது தொடா்பான பூா்வாங்கப் பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொடா்ந்து, நொய்யல் ஆற்றின் நீா்மாதிரியை ஆய்வு மேற்கொண்டு, நீா்வழித் தடங்கள் மற்றும் திட்ட மதிப்பீடு தயாரித்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் மற்றும் நீா்வளத் துறை பொறியாளருடன் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆலோசனை மேற்கொண்டாா்.
இந்த ஆய்வின்போது, நீா்வள ஆதாரத் துறை செயற்பொறியளாா் திருமூா்த்தி, திருப்பூா் மாநகராட்சி 4- ஆம் மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், காங்கயம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் சிவானந்தன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சாா்ந்த அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.