Suresh Gopi: "அரசியல் என்னுடைய சினிமா கரியரை பாதித்தது!" - சுரேஷ் கோபி
``பாஜக கூட்டணியால் SIR-ஐ ஆதரிக்கவில்லை" - ஜெயக்குமார் சொன்ன விளக்கம்!
தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை அவசர அவசரமாக மேற்கொள்வது குறித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள், தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றன. எனினும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து SIR நடவடிக்கையை ஆதரித்து வருகிறது.
SIR நடவடிக்கையில் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக சென்னை மாநகராட்சி ஆணையரை கண்டித்து இன்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அந்த கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் கூறியதாவது, "ஒவ்வொரு ஆண்டும் பொதுவாகவே வந்து சுருக்க முறை திருத்தம் செய்வாங்க. ஆனால் இந்த திருத்தத்தின் போது பொதுவாகவே இறந்தவர்கள் நீக்கப்படுறது கிடையாது, குடிபெயர்ந்தவர்கள் பெயர்கள் நீக்கப்படுவது கிடையாது, சிலர் இரண்டு தொகுதியில் ஓட்டு வைத்திருப்பார்கள் அதை நீக்குவது கிடையாது.
இதை அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இறந்தவர்கள் 15 ஆண்டுக்கும் மேலாக வாக்குப் பட்டியலில் இருப்பார்கள், தமிழ்நாட்டை விட்டே வெளியேறியவர்கள், விலாசமே இல்லாதவர்கள் எல்லாம் இருப்பார்கள். இதற்கு நிரந்த முடிவுகட்ட நாங்கள் அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தை அணுகினாலும் அதில் அவர்கள் கவனம் செலுத்துவது இல்லை. இப்போது SIR மூலம் இதற்கு ஒரு முடிவு வரும்.
இப்போது இருப்பவர்களுக்கு வாக்குகள் கிடையாது. ஆனால் இறந்தவர்களுக்கு வாக்குகள் இருக்கிறது. ஒரு தொகுதிக்கு ஆவரேஜா 20ல இருந்து 25,000 ஓட்டு இறந்தவர்கள், விலாசம் தெரியாதவர்கள், குடியேறியவர்கள் இப்படிப்பட்டவர்கள். அவை நீக்கப்பட்டு வெளிப்படையான வாக்காளர் திருத்தப் பட்டியல் தயாராக வேண்டும். எங்களை பொறுத்தவர நியாயமான ஒரு சுதந்திரமான நேர்மையான தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
திமுக இறந்தவர்களையும், குடிபெயர்ந்தவர்களையும், கள்ள ஓட்டையும் நம்பியிருக்கிறது. இன்று தேர்தல் ஆணையம் எடுத்துள்ள முடிவு திமுகவுக்கு வேப்பங்காய் போல கசக்கிறது.

நான் ஸ்டாலினை கேட்கிறேன், SIR நடவடிக்கை வேண்டாம் எனச் சொல்லும் திமுக அரசு களத்தில் கட்சிக்காரர்களை இறக்கிவிட்டு, இறந்தவர்களை பட்டியலில் வைத்திருக்கவும், கள்ள ஓட்டுகளை வைத்திருக்கவும் சொல்வது ஏன்? நீங்க புறக்கணிச்சிட்டு போங்க. ஒப்புக்காக SIRஐ எதிர்த்துவிட்டு இதில் அதிகம் ஈடுபாடுகாட்டுவது திமுகதான்.
நாங்கள் 15 ஆண்டுகளாக இறந்தவர்களை நீக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டு வருகிறோம். ஆனால் அவர்கள் செய்யவில்லை. செவிடன் காதில் ஊதிய சங்காக இருந்தால் என்ன செய்வது. இப்போது பாஜக ஆதரிப்பதனால் மட்டும் நாங்க SIR பணிகளை ஆதரிக்கவில்லை. வெளிப்படையான வாக்காளர் பட்டியல் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் ஆதரிக்கிறோம். அதுமட்டுமல்ல இது இதோடு முடிந்துவிடாது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் அப்போது அபீல் செய்யலாம்.
இதில் மாநகராட்சி ஆணையர் கடைமையை செய்ய வேண்டும். திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டால் அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும். திமுகவினர் மிரட்டினாலும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி அஞ்சக் கூடாது. மேற்பதவி கிடைக்கும், அதிக (பணம் ஈட்டும் செய்கையை காண்பிக்கிறார்) கிடைக்கும் என்பதற்காக நாக்கை தொங்க போட்டு வேலை செய்யக் கூடாது. நாங்க யாரையும் மிரட்டல அவர்களது கடைமையைச் செய்ய சொல்கிறோம்." எனப் பேசினார்.













