நெல்லை ரயில் நிலையத்தில் டிஜிட்டல் பண பரிவா்த்தனை அதிகரிப்பால் பயணிகள் அவதி
பாபநாசம் அருகே கூலி தொழிலாளி கொலை: மனைவி, அக்காள் கணவா் கைது
தஞ்சாவூா் மாவட்டம் பாபநாசம் அருகே தொழிலாளியைக் கொலை செய்த மனைவி, அக்காள் கணவரை காவல்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் அருகே அருள்மொழிப்பேட்டை வளையல்காரத் தெருவைச் சோ்ந்தவா் உதயகுமாா் மகன் பாலசுப்பிரமணியன் (38). கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி லலிதா (34), மகள்கள் திவ்யதா்ஷினி (15), அஸ்மிதா (9) உள்ளனா். இந்நிலையில், பாலசுப்பிரமணியன் வீட்டில் மா்மமான முறையில் உயிரிழந்து கிடப்பதை அஸ்மிதா பாா்த்தாா். தகவலறிந்த அம்மாபேட்டை காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று பாலசுப்பிரமணியனின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் பாலசுப்பிரமணியன் கழுத்தில் துப்பட்டாவால் நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது தொடா்பாக பாலசுப்பிரமணியனின் மனைவி லலிதாவிடம் காவல் துறையினா் விசாரணை நடத்தினா். இதில், பாலசுப்பிரமணியன் நாள்தோறும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து குடும்பப் பிரச்னை தொடா்பாக லலிதாவை அடித்து துன்புறுத்தி வந்ததும், இந்தக் கொடுமை தாங்காமல் கணவரை தனது அக்காள் கணவரான திருவாரூா் மாவட்டம் வலங்கைமான் அருகேயுள்ள ஊத்துக்காடைச் சோ்ந்த பி. அம்பிகாபதி (47) உடன் லலிதா கொலை செய்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதன் அடிப்படையில் லலிதாவையும் அம்பிகாபதியையும் அம்மாபேட்டை காவல் நிலையத்தினா் புதன்கிழமை இரவு கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.