'சாரிடான் மாத்திரைதான் மிச்சம்' - பராசக்தி படத்தைக் கலாய்த்த கார்த்தி சிதம்பரம்
`பிளாஸ்டிக்குக்கு நோ; பப்பாளி தண்டில் ஸ்ட்ரா'- இளநீர் வியாபாரியின் Eco Friendly முன்னெடுப்பு
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் இளங்கலை பட்டதாரியான செந்தில். கடந்த பன்னிரெண்டு வருடங்களாக இளநீர் வியாபாரம் செய்து வருகிறார்.
இதில் கடந்த ஏழு வருடங்களாக இயற்கைக்கு முரணான பிளாஸ்டிக் ஸ்ட்ராவினைத் தவிர்த்து, இயற்கையான முறையில் பப்பாளி தண்டுகளை பயன்படுத்தி புதிய இயற்கையான ஸ்ட்ராவினை உருவாக்கி வாடிக்கையாளர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

இது குறித்து இயற்கை ஆர்வலர் செந்தில் கூறுகையில், "நான் காலேஜ் படிக்கும்போதே அப்பாகூட சேர்ந்து இளநீர் விக்க ஆரம்பிச்சேன். காலேஜ் முடிச்சதுக்கு அப்பறம் நெறைய தனியார் கம்பெனியில வேலை பார்த்தேன், ஒன்னும் செட் ஆகலன்னு ஊருகே திரும்ப வந்துட்டேன். அதுக்கு அப்பறம் தான் அப்பா பண்ண இளநீர் வியாபாரத்தையே நாமும் பண்ணலான்னு பண்ண ஆரம்பிச்சேன். இப்ப நான் வியாபாரம் பண்ண ஆரம்பிச்சி 12 வருசம் ஆச்சி. இதுல கடந்த ஏழு வருசமா பப்பாளி தண்டுலதான் ஸ்ட்ரா செஞ்சி வாடிக்கையாளருக்குக் கொடுக்குறேன்.
இயற்கையான முறையில இளநீர்ல கொடுக்குறோம். இயற்கையான முறையிலயே ஸ்ட்ராவும் கொடுக்கணும்னு யோசிச்சா என்ன? பிளாஸ்டிக் ஸ்ட்ரால்ல கண்ணுக்குத் தெரியாத கெமிக்கல்கள் இருக்கும்.
இந்த பிளாஸ்டிக் ஸ்ட்ரா தயாரிக்கிறத்துக்கு முக்கியமா பாலிப்ரொப்லீன் பயன்படுத்துறாங்க.

இதுனால மக்கள் இந்த ஸ்ட்ராவ்ல குடிக்கும்போது அவங்க குடிக்கிற பானத்துல பாலீத்தின் கலந்து, அவங்களுக்கு பாதிப்ப ஏற்படுத்துறது மட்டுமல்லாம... சுற்றுச்சூழலையும் ரொம்பவே பாதிக்குது. அதனால இயற்கையா பண்ணனும்னு முதல்ல பேப்பர் ஸ்ட்ராவ பயன்படுத்தி பார்த்தேன். அதுல ரெண்டு இழு இழுத்தாலே பேப்பரும் கரைஞ்சு போயிடுது.
இது கதைக்கு ஆகாதுன்னு தெரிஞ்சிடுச்சி... அடுத்து என்ன பண்ணலான்னு யோச்சப்ப தான் கொட்டமுத்து இலைய ட்ரை பண்ணி பார்த்தேன். அதுல குழல் இருந்துச்சி. ஆனா, நீட்னஸ் இல்ல.
அப்பறம் அல்லி தண்ட ட்ரை பண்ணலாம்னு பண்ணேன்... அதுல ஓட்டையே இல்ல. அப்படி ட்ரை பண்ணும் போது பசங்க பப்பாளி இலைய வச்சி விளையாடிட்டு இருந்தத பார்த்தேன். பப்பாளி இலை தண்டுல குழலும் இருந்துச்சி.
அதோட ஒரு முன இலையோடையும், மறு முன பப்பாளி தண்டோடையும் ஜாயின்ட் ஆகி இருந்துச்சி. தண்டுலேந்து குழல் எடுத்து பார்த்தா ரெண்டு சைடும் லாக் ஆகி இருக்குறதுனால வண்டு, பூச்சி, தூசிலா இல்லாமா ரொம்ப ஃபிரஷ்ஸா இருந்துச்சி. முதல்ல ஸ்ட்ரா செஞ்சி வீட்ல பயன்படுத்தி பார்த்தோம்.
நல்லா இருந்துச்சி திரும்ப கடையிலையும் பயன்படுத்த ஆரம்பிச்சோம். அந்த குழல் ரெண்டு நாள் தான் ஃபிரஸ்ஸா இருக்குமே. ரெண்டு நாளுக்கு அப்பறம் புதுசா குழல் செய்யனும்.
ஆரம்பத்தில் எல்லாரும் காச மிச்சம் பண்ண இப்படி செய்யுறதா அப்படி இப்படின்னுல்லாம் பேசுனாங்க. மக்களுமே ஆரம்பத்துல விரும்பல. நான் சொல்லி புரியவச்சேன். இப்ப மக்களும் பாராட்டுறாங்க.

முன்னாடி எல்லாம் நாளு பேரு இளநீர் குடிக்க வந்தா ரெண்டு பேரு என்ன ஸ்ட்ரான்னு கேட்குறது வழக்கம். ஆனா, இப்போலாம் வர நாளு பேருமே இப்படி பண்றது ரொம்ப நல்ல விஷயம்னு பாராட்டுறாங்க. அப்ப காச மிச்சம் பண்ணுறதா சொன்னவங்க எல்லாரும் பரவல்லப்பா இத்தன வருசமா தொடர்ந்து செய்யுறியேன்னு ஆச்சர்யபடுறாங்க. நா பண்ணுனத பார்த்துட்டே மாயரத்துலே நெறைய பேர் பண்ணாங்க. ஆனால், யாரும் தொடர்ந்து பண்ணல.
இயற்கை சார்ந்து நம்மளால முடிஞ்சதை கண்டிப்பா செய்யணும். அப்படி பண்ணலன்னா கூட இயற்கைக்கு முரணா எதுவும் பண்ணாம இருந்தாகூட போதும். முப்பது சதவீத மக்கள் மட்டும்தான் இயற்கையான கரும்பு ஜூஸ், இளநீர்லாம் குடிக்கிறாங்ளே!

ஒடம்பு முடியலன்னு டாக்டர்ட்ட போனா அங்க டாக்டர் சொல்லுவாரு, இளநீர் குடிங்கன்னு. அப்பதான் இளநீயோட அருமையே தெரியும். இப்டி மக்கள் எல்லாரும் டாக்டர் சொல்றப்ப மட்டும் இல்லாமா இயற்கைக்கு உகந்த குளிர்பானங்கள எப்போதும் குடிங்க" என்று கூறினார்.



















