"திமுக தொழில்த்துறை முதலீடுகளில் ஊழல் பொய்" - பாமக அன்புமணி அடுக்கும் குற்றச்சாட...
பீகார்: 10வது முறையாக முதல்வராக பதவியேற்ற நிதீஷ் குமார் - இரு துணை முதல்வர்கள் பதவியேற்பு
பீகாரில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்து இருக்கிறது. இதையடுத்து நேற்று பாட்னாவில் கூடிய பா.ஜ.க மற்றும் ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் தங்களது சட்டமன்ற தலைவராக நிதீஷ் குமாரை தேர்ந்தெடுத்தனர்.
இன்று பாட்னா காந்தி மைதானத்தில் பதவியேற்பு விழா பிரமாண்டமாக நடந்தது. பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க ஆளும் மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். விழாவில் நிதீஷ் குமாருக்கு மாநில ஆளுநர் ஆரிப் மொகமத் கான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பா.ஜ.கவின் சாம்ராட் செளதரி, விஜய் குமார் ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றுக்கொண்டனர். முதல்வரையும் சேர்த்து மொத்தம் 20 பேர் பதவியேற்றுக்கொண்டுள்ளனர். நிதீஷ் குமார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. அவர் சட்டமேலவை உறுப்பினராக இருக்கிறார்.

அவர் தற்போது 10வது முறையாக முதல்வராக பதவியேற்றுக்கொண்டுள்ளார். விழாவை காண ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். அவர்களை பார்த்து பிரதமர் நரேந்திர மோடி தனக்கு அணிவிக்கப்பட்ட சால்வையை எடுத்து அதனை கொடி அசைப்பது போன்று அசைத்தார்.
கூட்டத்தினரும் தங்களிடம் இருந்த கொடியை அதே போன்று காட்டினர். அமைச்சரவையில் லோக் ஜன்சக்தி கட்சி, ராஷ்ட்ரீய லோக் மஞ்ச், மதசார்பற்ற அவாமி மோர்ச்சா கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பதவி கிடைத்து இருக்கிறது.
தற்போது சிக்கிம் தலைவர் பவன் தான் 24 ஆண்டுகள் முதல்வராக இருந்தவர் என்ற பெயருடன் இருக்கிறார். நிதீஷ் குமார் 5 ஆண்டுகள் முதல்வராக இருநதுவிட்டால் நாட்டில் அதிக நாட்கள் முதல்வராக இருந்தவர் என்ற பெயர் நிதீஷ் குமாருக்கு கிடைக்கும்.

















