"ஹீரோக்கள் நெகட்டிவ் கதாபாத்திரத்தில நடிக்க பயப்படுறாங்க"- இயக்குநர் ஜீத்து ஜோசப...
புதுச்சேரி: ``நான் நல்லவனான்னு சர்வே எடுத்தது நான் இல்லை!'' - புகாரளித்த `லாட்டரி’ ஜோஸ் சார்லஸ்
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் புதுச்சேரியில், முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் அங்கம் வகித்து வருகிறது பா.ஜ.க.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுச்சேரியில் களமிறங்கிய தமிழகத்தைச் சேர்ந்த லாட்டரி மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ், அம்மாநிலத்தின் முதல்வர் பதவியை குறி வைத்து காய் நகர்த்தி வருகிறார்.
அதற்காக தனது தந்தையின் தொழில்முறை பார்ட்னரான பா.ஜ.க அமைச்சர் ஜான்குமாரையும், அவரது மகன் ரிச்சர்ட் ஜான்குமாரையும் தனக்கு ஆதரவாக வைத்துக் கொண்டு, மக்களுக்கு ஒருசில நலத்திட்டங்களையும், காமராஜர் நகர் தொகுதியில் அன்னதானத்தையும் செயல்படுத்தி வருகிறார்.

அத்துடன் அவ்வப்போது முதல்வர் ரங்கசாமி தலைமையிலான ஆட்சியையும் விமர்சித்து வருகிறார். அதனால் முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸுக்கும், பா.ஜ.க-வுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் உரசல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
இந்த சூழலில்தான் சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி மக்களின் செல்போன்களுக்கு தொடர்ச்சியாக அழைப்புகள் வந்தன. பதிவு செய்யப்பட்ட அந்தக் குரல் ஆடியோவில், `புதுச்சேரியில் சமூக செயல்பாடுகளில் ஈடுபட்ட ஜோஸ் சார்லஸ் மார்ட்டினை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? அறிந்திருந்தால் அவர் பற்றி உங்கள் கருத்து என்ன ? அவர் நல்லவர் என்றால் எண் ஒன்றை அழுத்தவும்.
நல்லவர் அல்ல என்றால் எண் இரண்டை அழுத்தவும்’ என்ற ரீதியில் சர்வே எடுக்கப்பட்டது. அதையடுத்து தன்னுடைய அரசியலுக்காக ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தனி நபர்களின் தகவல்களை திருடியிருக்கிறார் என்று குற்றம் சுமத்தியது தி.மு.க.
அதேபோல காமராஜர் நகர் தொகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், `எங்கள் செல்போன்களுக்கு 7313784361 என்ற எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை எடுத்தபோது நாங்கள் பேச முடியாதபடி மறுமுனையில் பதிவு செய்யப்பட்ட ஆடியோ தகவல் ஒலிபரப்பப்பட்டது.
அதில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் நல்லவரா கெட்டவரா என்று சர்வே எடுக்கப்பட்டது. அந்த எண் யாருடையது என்பது மட்டுமல்ல அந்த ஜோஸ் சார்லஸ் யார் என்பதும் எங்களுக்கு தெரியாது.

அதைப் பற்றி எங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்தபோது, அவர்களுடைய செல்போன் எண்களுக்கும் இப்படியான அழைப்புகள் வந்ததாக தெரிவித்தனர்.
எங்களுடைய செல்போன் எண்களை எஸ்.ஐ.ஆர், வங்கிப் பரிவர்த்தனை முதல் ஆதார் வரை கொடுத்திருக்கிறோம். அதனால் எங்களுடைய தனிப்பட்ட தகவல்களைத் திருடிய அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்’ என்று புகாரளித்தார்கள்.
இதற்கிடையில் இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் மெட்டீரியலாக மாறி வைரலானது.
அடுத்தடுத்து அப்படியான புகார்கள் சைபர் கிரைம் போலீஸிடம் குவிந்ததால் பதற்றமான `லாட்டரி’ ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், அந்த சர்வேவுக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
புதுச்சேரியில் எங்கள் வளர்ச்சி பிடிக்காமல் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், எங்கள் மீது கெட்டப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடனும் ஆளும் கட்சி அல்லது எதிர்கட்சியினர்தான் இதை செய்திருக்கிறார்கள்.
அதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று புகாரளித்திருக்கிறார்.
மேலும் தன்னை களங்கப்படுத்த முயற்சிப்பவர்கள் மீது நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

சில நாள்களுக்கு முன்பு எம்.எல்.ஏ ஜான்குமாரின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் விதிகளை மீறி, ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் பேனர்களை வைத்து அன்னதானம் வழங்குவதாக பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் சபாநாயகரை சந்தித்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர், அவற்றை அகற்ற வேண்டும் என்று புகாரளித்தனர்.
அதையடுத்து எம்.எல்.ஏ ஜான்குமாரின் அலுவலகத்தில் இருந்த ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் பேனர்கள் அகற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.















