செய்திகள் :

பெண்களின் கண்டுபிடிப்புகள் இருட்டடிப்பு செய்யப்படுவதா? - பெண்களின் உரிமைக்காக போராடிய முன்னோடி

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

சமூக மாற்றத்தின் சகாப்தமாக விளங்கிய 19ஆம் நூற்றாண்டில் அடிமை முறையை ஒழித்தல், பெண்களுக்கு அரசியல் உரிமைகளை வழங்குதல், சமூக சமத்துவம் போன்ற கொள்கைகளை வலியுறுத்தி துணிச்சலுடன் பல பெண்கள் போராடினர். அவர்களில் முதன்மையானவர் மடில்டா ஜோஸ்லின் கேஜ். எழுத்தாளர், சமூக சீர்திருத்தவாதி, பேச்சாளர், பெண்கள் உரிமை இயக்கத்தின் தலைவர் எனப் பன்முகத் திறன்கொண்ட மடில்டா, தன் வாழ்நாள் முழுவதும் மனித சமத்துவம் மற்றும் பெண்களின் விடுதலைக்காக அயராது போராடினார். 

பெண்களின் அரசியல் உரிமை, அடிமை முறையை ஒழித்தல், பூர்வகுடி அமெரிக்கர்களின் உரிமை ஆகியவற்றிற்காக போராடிய மடில்டா மத நிறுவனங்களுக்குள் நிலவிய ஆண்களின் ஆதிக்கத்திற்கு எதிராக துணிச்சலாகக் குரல் கொடுத்தார்.  பெண்களின் சாதனைகள் ஒடுக்கப்படுவதை விமர்சித்து அவர் எழுதிய எழுத்துக்கள் பிற்காலத்தில், இவர் பெயர் கொண்டு "மடில்டா விளைவு (மடில்டா எஃபெக்ட்)" என்ற கோட்பாடு உருவாக காரணமாக இருந்தது .

மடில்டா ஜோஸ்லின் கேஜ், மார்ச் 24, 1826 அன்று அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்திலுள்ள சிசரோ நகரில் பிறந்தார். மருத்துவரான இவரது தந்தை ஹெசக்கியா ஜோஸ்லின் அடிமை முறை ஒழிப்புச் செயல்பாட்டாளராகவும், தாய் ஹெலன் லெஸ்லி ஜோஸ்லின் வரலாற்று ஆராய்ச்சியாளராகவும் திகழ்ந்தனர். தப்பி வரும் அடிமைகளுக்கு புகலிடம் வழங்கும் "நிலத்தடி இரயில்பாதை" (அண்டர்கிரவுண்ட் ரயில்ரோட்) இயக்கத்தின் ஒரு முக்கிய மையமாக மடில்டாவின் இல்லம் விளங்கியது.

மிகச் சிறு வயதிலிருந்தே சமூக அநீதியை எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியத்தைப் பற்றிய உணர மடில்டாவின் குடும்பத்தில் நிலவிய சமூக நீதி பேணும்  அறிவுசார் சூழல் காரணமாக அமைந்தது.

பள்ளிகளில் கற்ற கல்விக்கு மேலதிகமாக மடில்டா தனது தந்தையிடம் உடற்கூறியல் மற்றும் உடலியங்கியல் போன்ற பாடங்களையும் பயின்றார். அக்காலகட்டத்தில் மருத்துவக் கல்லூரிகளில் பெண்களுக்குச் சேர்க்கை மறுக்கப்பட்டதால் மருத்துவக் கல்வி பயில வேண்டும் என்ற அவரது கனவு நிறைவேறாமலே போனது. மடில்டாவின் கலைந்த கனவு, பெண்களுக்கு மறுக்கப்படும் கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகள், பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகியவற்றை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

1845-ஆம் ஆண்டில், மடில்டா கேஜ் வணிகரான ஹென்றி ஹில் கேஜ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு நியூயார்க் மாநிலத்திலுள்ள ஃபேட்வில் நகரில் குடியேறினார். இத்தம்பதியினருக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தனர். குடும்பப் பொறுப்புகளைக் கவனித்த போதும் மடில்டா தனது சமூகச் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ளவில்லை. சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்டபோதிலும், பாதுகாப்புத் தேடி ஓடிவந்த அடிமைகளுக்கு அடைக்கலம் வழங்கினார். 

1852-ஆம் ஆண்டு, சிராக்குஸில்  நடைபெற்ற தேசியப் பெண்கள் உரிமைகள் மாநாட்டில், பெண்களுக்கு வாக்குரிமை கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்று மட்டில்டா வாதிட்டார். இந்த மாநாட்டில் மட்டில்டா நிகழ்த்திய முதல் உரை அவரது அரசியல் மற்றும் சமூகப் பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது. பெண்களுக்கு வாக்குரிமை, சொத்துரிமை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமை போன்ற பல்வேறு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டிருந்த அக்காலகட்டத்தில் பெண்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என்று அவர் முன்வைத்த கோரிக்கை ஒரு புரட்சிகரமான சிந்தனையாகக் கருதப்பட்டது.

பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுத் தருவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டு 'தேசியப் பெண்கள் வாக்குரிமைச் சங்கம்' (National Woman Suffrage Association) என்ற அமைப்பு 1869-ஆம் ஆண்டு தொடங்கப்பட சூசன் பி. அந்தோனி, எலிசபெத் கேடி ஸ்டாண்டன் ஆகியோருடன் இணைந்து மட்டில்டா முக்கிய பங்காற்றினார்.  அச்சங்கத்தில் மட்டில்டா பல்வேறு நிர்வாகப் பொறுப்புகளையும் வகித்தார். பெண்களுக்கான வாக்குரிமை சங்கம் பல்வேறு அரசியல், சமூக, கலாச்சாரத் தடைகளை எதிர்கொண்ட நிலையிலும் மட்டில்டா கேஜ் தனது எழுத்துக்கள், உரைகள் வாயிலாகப் பெண்களின் உரிமைகளுக்காக அயராது தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.

பெண்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தன்னைத் தனித்து அடையாளம் காட்டிக்கொண்ட மடில்டா பல்வேறு இதழ்களுக்காகக் கட்டுரைகளை எழுதினார். பெண்கள் எண்ணற்ற கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருந்தபோதிலும், அதற்கான அங்கீகாரமும் பெருமையும் பெரும்பாலும் ஆண்களுக்கே வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டி 1870-ஆம் ஆண்டில் அவர் எழுதிய "கண்டுபிடிப்பாளராக பெண்" (வுமன் அஸ் இன்வென்டார்) எனும் கட்டுரை, இன்றும் குறிப்பிடத்தக்க ஒரு படைப்பாகத் திகழ்கிறது. 

மத நிறுவனங்கள் பெண்களை ஒடுக்கிய விதத்தை கடுமையாக விமர்சித்து 1893-ஆம் ஆண்டில் அவர் எழுதிய *பெண், திருச்சபை மற்றும் அரசு* (வுமன், சர்ச் அண்ட் ஸ்டேட்) எனும் நூல் வெளியான போது பெரும் சர்ச்சை ஏற்பட்டது. 

வரலாறு நெடுகிலும் மத நிறுவனங்கள் பெண்களை அடிமைப்படுத்துவதற்கான கருவிகளாகவே செயல்பட்டு வந்துள்ளன. என்பதே மடில்டாவின் மையக்கருவாக அமைந்திருந்தது இக்கருத்து பல்வேறு தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்பைச் சந்தித்தது. ஆயினும், பெண்களின் சுதந்திரமும் சமத்துவமும் மத நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படக்கூடாது எனும் அவரது நிலைப்பாடு, பெண்ணியச் சிந்தனை மரபில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தது.

1890-ஆம் ஆண்டில், பெண்களுக்கான வாக்குரிமை இயக்கத்திற்குள் ஏற்பட்ட சித்தாந்த ரீதியான பிளவுகளுக்கு பின் மடில்டா பெண்கள் தேசிய தாராளவாத ஒன்றியம்' (வுமன்ஸ் நேஷனல் லிபரல் யூனியன்) எனப் பெயரிடப்பட்ட புதிய அமைப்பைத் தொடங்கினார். பெண்களுக்கான முழுமையான குடியுரிமை, மதச்சார்பற்ற அரசு, மனித சமத்துவம் ஆகிய மூன்று முதன்மையான நோக்கங்களுடன் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் வாயிலாக, மடில்டா தனது சமூகச் செயல்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றார்.

பெண்களின் உரிமைகளுக்காகப் போராடியதோடு மட்டுமல்லாமல் அமெரிக்க பூர்வ குடி மக்களுக்காகவும் குரல் கொடுத்தார். பூர்வகுடி மக்களுக்கு எதிரான அமெரிக்க அரசின் நியாயமற்ற செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்.

சமூகப் பணிகளை அங்கீகரிக்கும் விதமாக மடில்டாவை தங்கள் சமூகத்தின் கௌரவ உறுப்பினராக ஏற்றுக்கொண்ட 'மொஹாக்' என்ற அமெரிக்க பூர்வ குடியினர் அவருக்கு "கரோனியன்ஹாவி" எனும் பெயரைச் சூட்டினர்; இப்பெயருக்கு "வானத்தைத் தாங்கி நிற்பவள்" என்று பொருள். 

மாடில்டா ஜோஸ்லின் கேஜ் மார்ச் 18, 1898 அன்று காலமானார். 1995 ஆம் ஆண்டு 'தேசிய மகளிர் புகழரங்கத்தில்' (National Women's Hall of Fame) கௌரவத்துடன் இடம் பெற்று அவரின் கொள்கைகள் வழி இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

பெண்கள் நிகழ்த்தும் சாதனைகளுக்கான அங்கீகாரம் பெரும்பாலும் ஆண்களுக்கே வழங்கப்படுகிறது. மாறாக, இச்சாதனைகளுக்குப் பொறுப்பான பெண்களின் பெயர்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன என்று எழுதிய மடில்டா ஜோஸ்லின் கேஜின் பெயரில் வரலாற்றாசிரியர் மார்கரெட் டபிள்யூ. ராசிட்டர் 1990-ஆம் ஆண்டுகளில் "மடில்டா விளைவு" எனும் சொற்றொடரை உருவாக்கினார்.

தேர்தல்

தொடர்ந்திடும் பந்தம்! - சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

"நவீன தமிழை 30 ஆண்டுகள் பின்னோக்கி தள்ளும்" - ஞானபீட விருது குறித்து ஜெயமோகன்

இந்தியாவில் இலக்கியத்திற்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருது கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.எழுத்தாளர் அகிலன் (1975), எழுத்தாளர் ஜெயகாந்தன் (2002) ஆகியோருக்குப் பிறகு இந்... மேலும் பார்க்க

விகடனில் தொடராக வெளிவந்த நூலுக்கு சாகித்ய அகாடமி விருது!

2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது, தமிழின் மூத்த படைப்பாளியும், கலை இலக்கியச் செயற்பாட்டாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் மதிப்புறு தலைவருமான ச.தமிழ்ச்செல்வன் எழு... மேலும் பார்க்க

"இந்தக் குறை என்னால் கழிந்தது" - ஞானபீடம் விருது குறித்து கவிஞர் வைரமுத்து

இந்தியாவில் இலக்கியத்திற்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருது கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. எழுத்தாளர் அகிலன் (1975), எழுத்தாளர் ஜெயகாந்தன் (2002) ஆகியோருக்குப் பிறகு இந... மேலும் பார்க்க

அம்மாவைத் தேடி! - சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது அறிவிப்பு!

கவிஞர் வைரமுத்துவிற்கு ஞானபீடம் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. 1972இல் 'வைகறை மேகங்கள்' என்ற முதல் கவிதை நூலை எழுதிய வைரமுத்து கவிதைகள், நாவல்கள் உள்ளிட்ட 40 நூல்களை எழுதியிருக்கிறார். அதுமட்டுமின்ற... மேலும் பார்க்க