"மம்மூட்டிக்கு விருது கொடுக்க அவர்களுக்கு தகுதியில்லை" - தேசிய விருதுகள் குறித்த...
பெயரே இல்லாத ரயில் நிலையம்; மஞ்சள் பலகை மட்டுமே அடையாளம் - சுவாரஸ்யத் தகவல்
இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான ரயில் நிலையங்கள் உள்ளன. ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயர் இருக்கும். ஆனால் எந்தப் பெயரும் எழுதப்படாமல், வெறும் மஞ்சள் பலகையுடன் செயல்படும் ஒரு விசித்திரமான ரயில் நிலையம் இந்தியாவில் உள்ளது என்பது தெரியுமா? இந்த நிலையம் எங்கு இருக்கிறது என்பது குறித்து இங்கு விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
மேற்கு வங்கத்தின் பர்பா பர்தமான் மாவட்டத்தில், பர்தமான் நகரத்திலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் இந்த ரயில் நிலையம் அமைந்துள்ளது.

இந்த நிலையம் 2008 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. ஆரம்பத்தில், ரயில்வே நிர்வாகம் இந்த நிலையத்திற்கு 'ரெய்னாகர்' என்று பெயரிடத் திட்டமிட்டது. ஆனால் அருகிலுள்ள இரண்டு கிராமங்களின் மக்கள் தங்கள் கிராமத்தின் பெயரை நிலையத்திற்கு வைக்க வேண்டும் என்று விரும்பியதால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டிருக்கிறது.
இந்த தகராறு நீதிமன்றம் வரை சென்று, இதற்கான விசாரணையை மேற்கொண்ட நீதிமன்றம், பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை நிலையத்தின் பெயர்ப் பலகையில் இருந்து பெயரை நீக்குமாறு உத்தரவிட்டது.
அன்று முதல் இந்த நிலையத்தின் பெயர்ப் பலகை காலியாகவே உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மக்கள் இதை 'பெயரில்லாத நிலையம்' என்று அழைக்கத் தொடங்கினர். தற்போது அந்த வெற்று மஞ்சள் பலகையே இந்த நிலையத்தின் அடையாளமாக மாறிவிட்டது.
அதிவிரைவு ரயில்கள் இங்கு நிற்பதில்லை. இங்கு இருக்கும் டிக்கெட் கவுன்ட்டரில் வழங்கப்படும் டிக்கெட்டுகளில் 'ரெய்னாகர்' என்ற பெயரே அச்சிடப்பட்டுள்ளது. ஆனால் நிலையத்தின் பலகை மட்டும் பெயர் இல்லாமல் காலியாகவே இருக்கிறது.
மற்றுமொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இந்த நிலையம் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட்டிருக்குமாம். அன்றைய தினம் நிலைய மாஸ்டர் டிக்கெட் கணக்குகளை ஒப்படைப்பதற்காக பர்தமான் செல்வதால், ரயில் சேவைகள் எதுவும் இயக்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது.




















