'சாரிடான் மாத்திரைதான் மிச்சம்' - பராசக்தி படத்தைக் கலாய்த்த கார்த்தி சிதம்பரம்
போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர் விஷம் அருந்தி தற்கொலை - சென்னையில் அதிர்ச்சி
தமிழகம் முழுவதும் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்கள், நிரந்தர பணி, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் நடந்த போராட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த உடற்கல்வி பகுதி நேர ஆசிரியர் கண்ணன் என்பவரும் பங்கேற்றார். ஆசிரியர் கண்ணன், ரோஸ் நகர் பகுதியை சேர்ந்தவர். இவர் பெரம்பலூர் அரசு நடுநிலைப் பள்ளியில் பணியாற்றி வந்தார். இவருக்கு சிவராதை என்ற மனைவியும், +2 படிக்கும் மகனும் உள்ளார். இவர் 2013-ல் பகுதிநேர ஆசிரியராக பணிக்கு சேர்ந்துள்ளார்,
தொடர்ந்து ஆறு நாட்களாக போராட்ட களத்தில் இருந்து வந்த அவரை போலீஸார் கைது செய்து வானகரம் பகுதியில் உள்ள மண்டபத்தில் அடைத்தனர். அங்கு வார்னிஷ் குடித்து தற்கொலைக்கு முயன்றார் கண்ணன். அதனால் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்ததால் சக ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அவரை மீட்டு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவிலிருந்த கண்ணன், இன்று (14.1.2026) உயிரிழந்தார். இந்தத் தகவல் காட்டு தீ போல பரவியதையடுத்து ஆசிரியர்கள் மத்தியில் பதற்றமான சூழல் நிலவியது.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர், “அரசின் அலட்சியமே இந்த உயிரிழப்புக்குக் காரணம்” என குற்றம்சாட்டினர். கண்ணனின் மரணம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசிரியர் கண்ணன் உயிரிழந்ததையடுத்து டிபிஐ வளாகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர்கள் மௌன அஞ்சலி செலுத்தினர். தற்கொலை செய்து கொண்ட ஆசிரியர் கண்ணனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ளது. அதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்குப்பிறகு ஆசிரியர் கண்ணனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.


















