"தீய சக்தி திமுக-வை தாய் கழகம் என்று நினைத்து கொண்டு.!"- ஓ.பி.எஸ் குறித்து சசிகல...
மகனுக்கு எம்.பி பதவி; மனைவிக்கு தலைவர் பதவி - அஜித் பவார் மனைவி தேசியவாத காங்கிரஸ் தலைவராகிறார்!
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் தலைவராகவும், துணை முதல்வராகவும் இருந்த அஜித் பவார் கடந்த மாத இறுதியில் புனே அருகில் உள்ள பாராமதியில் நடந்த விமான விபத்தில் காலமானார். அவரின் மரணத்தை தொடர்ந்து அவர் வகித்து வந்த துணை முதல்வர் பதவியை அவரது மனைவி சுனேத்ரா பவார் ஏற்றுக்கொண்டுள்ளார். மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் விதமாக சுனேத்ரா பவாரை கட்சியின் தேசிய தலைவராக தேர்வு செய்துள்ளனர். கட்சியின் தேசிய நிர்வாக குழுக்கூட்டம் மும்பையில் நடந்தது.
இக்கூட்டத்தில் சுனேத்ரா பவாரை கட்சியின் தேசிய தலைவராக ஒருமனதாக தேர்வு செய்தனர். அதோடு அஜித் பவாரின் மகன் பார்த் பவார் தற்போது சுனேத்ரா பவார் வகித்து வரும் ராஜ்ய சபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவார் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுனேத்ரா பவார் பேசுகையில், ''இது ஒரு வலிமிக்க தருணம். எனக்கு வழங்கப்பட்டுள்ளது வெறும் பதவி மட்டுமல்ல. கட்சித் தொண்டர்களின் நம்பிக்கையையும் போராட்டத்தையும் இந்தப் பதவி பிரதிநிதித்துவப்படுத்துகிறது. உங்களது நம்பிக்கைதான் எனது பலம்.
எனது கணவர் விட்டுச்சென்ற இடத்தை நிரப்ப முடியாது. ஆனால் அவரின் நிறைவேறாத கனவுகளை நிறைவேற்ற முடியும். அவர் தனது வாழ்நாள் முழுவதும் மகாராஷ்டிராவின் முன்னேற்றத்திற்காக உழைத்தார். ஆனாலும் அவரது சில கனவுகள் நிறைவேறாமல் இருக்கிறது. நாம் அனைவரும் சேர்ந்து அதனை நிறைவேற்றுவோம்'' என உருக்கமாகத் தெரிவித்தார். அவர் தனது பேச்சில் சரத் பவாரை பற்றி குறிப்பிடவில்லை. ஆனால் தனது தாயார் பற்றி சுனேத்ரா பவார் குறிப்பிட்டார்.
இதில் பேசிய கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் பட்டேல், இரு கட்சிகளின் இணைப்பு தொடர்பாக வெளியாகும் கருத்துக்கள் குறித்து பேசினார். அவர் தனது உரையில், ``எங்களது கட்சிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதவர்கள், நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு அறிவுரை கூறுகிறார்கள்" என சரத் பவார் கட்சியை முறைமுகமாக சாடினார்.
கட்சியின் மற்றொரு தலைவரான சுனில் தட்கரே,'' 2004-ம் ஆண்டு மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸை விட அதிக இடங்களை தேசியவாத காங்கிரஸ் பெற்றது. அப்படி இருந்தும் அஜித் பவாருக்கு முதலமைச்சராகும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் 13 கோடி மகாராஷ்டிர மக்கள் ஒரு சிறந்த முதலமைச்சரை அனுபவிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டது''என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.

சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியையும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியையும் ஒன்றாக இணைப்பது குறித்து அஜித் பவார் உயிரோடு இருந்தபோது சரத் பவார் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டிருந்தார். இது குறித்து அஜித் பவார் இறந்த பிறகு சரத்பவார் கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்து இருந்தனர். ஆனால் அஜித் பவார் இறந்துவிட்ட நிலையில் இரு அணிகளின் இணைப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. அஜித் பவார் கட்சியில் உள்ள சில மூத்த தலைவர்கள் இரு கட்சிகளின் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இரு கட்சிகளின் இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தை பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையே அஜித் பவாரின் மரணம் தொடர்பாக சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் மீது சரத் பவாரின் பேரன் ரோஹித்பவார் மும்பை போலீஸில் புகார் கொடுக்க சென்றார். ஆனால் போலீஸார் விமான நிறுவனம் மீது புகாரை பதிவு செய்ய மறுத்துவிட்டனர். இதற்கு மிகப்பெரிய தலைவர் ஒருவரின் குறுக்கீடு இருப்பதாக ரோஹித் பவார் குற்றம் சாட்டி இருக்கிறார். ரோஹித் பவார் புனேயில் உள்ள சி.ஐ.டி போலீஸில் இது தொடர்பாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.


















