செய்திகள் :

மகளிர் உதவித்தொகை: ரூ. 1.68 லட்சம் கோடி கொடுக்கும் 12 மாநிலங்கள் - எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி

post image

மாநில அரசுகள் இப்போது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள அல்லது மீண்டும் ஆட்சிக்கு வர புதிய ஆயுதத்தை கையில் எடுத்திருக்கின்றன. அதாவது, பெண்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி, அவர்களின் ஆதரவைப் பெறும் முயற்சியில் மாநில அரசுகள் ஈடுபட ஆரம்பித்துள்ளன. அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில், பெண்களுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட பணத்தால்தான் பா.ஜ.க. வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது.

  • கர்நாடகாவில் “க்ருஹ் லக்ஷ்மி” என்ற பெயரிலும்,

  • மத்திய பிரதேசத்தில் “லட்லி பெஹ்னா” என்ற பெயரிலும்,

  • மகாராஷ்டிராவில் “லட்லி பெஹ்ன்” என்ற பெயரிலும்,

  • பீகாரில் “மகிளா ரோஜ்கார் யோஜனா” என்ற பெயரிலும்,

பெண்களின் வங்கிக் கணக்கிற்கு எந்த வித நிபந்தனையும் இன்றி மாநில அரசுகள் பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்து கொண்டிருக்கின்றன.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்
  • தமிழ்நாட்டில் “கலைஞர் மகளிர் உதவித்தொகை” என்ற பெயரிலும்,

  • மேற்கு வங்கத்தில் “லட்ச்மீர் பந்தார்” என்ற பெயரிலும்,

  • அசாமில் “உருனோடாய்” என்ற பெயரிலும்

இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இத்திட்டங்கள் அமல்படுத்தப்படுவதால் பெண்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும், மாநில அரசுகள் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றன. நாடு முழுவதும் 12 மாநிலங்கள் பெண்களுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் நிதி டிரான்ஸ்ஃபர் செய்யும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.

நடப்பு ஆண்டில் 12 மாநிலங்களும் சேர்ந்து ரூ. 1.68 லட்சம் கோடியை பெண்களுக்கு இலவசமாக வழங்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பெண்களின் ஆதரவை பெறமுடியும் என அரசியல் கட்சிகள் கருதுகின்றன. அடுத்த ஆண்டு அசாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது.

எனவே, பெண்களுக்கு வழங்கப்படும் நிதி மேலும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேற்கு வங்க அரசு இத்திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை 15 சதவீதமும், அசாம் 31 சதவீதமும் அதிகரித்துள்ளது.

ஜார்கண்ட் அரசு கடந்த ஆண்டு ஏற்கனவே பெண்களுக்கு வழங்கி வந்த மாதாந்திர ரூ. 1000ஐ ரூ. 2500 ஆக அதிகரித்து வழங்கி வருகிறது.

பணம்
பணம்

இது குறித்து சட்டமன்ற கொள்கை ஆராய்ச்சி ஆய்வு அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், பெண்களுக்கு பணத்தை வங்கிக் கணக்குகளில் வழங்கி வரும் 12 மாநிலங்களில், 6 மாநிலங்கள் 2025–26 ஆம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறையுடன் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுதவிர, கர்நாடகா இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பு உபரி நிதியுடன் பட்ஜெட் வைத்திருந்தது. ஆனால் இப்போது 0.6 சதவீதம் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதேபோன்று, மத்திய பிரதேசத்திலும் இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பு 1.1 சதவீதம் உபரி நிதி பட்ஜெட் இருந்தது. ஆனால் இப்போது 0.4 சதவீதம் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் இத்திட்டத்திற்கு 10.7 சதவீதமும், மேற்கு வங்கத்தில் 10 சதவீதமும், கர்நாடகாவில் 9.8 சதவீதமும் செலவிடப்பட்டு வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியும் இது தொடர்பாக மாநில அரசுகளை எச்சரித்துள்ளது. பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கான மானியங்கள் மற்றும் ரொக்கப் பரிமாற்றங்களுக்கான செலவினங்கள் அதிகரிப்பது நிதி பற்றாக்குறையை மேலும் தீவிரப்படுத்தும் என்று குறிப்பிட்டிருந்தது.

ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

மகாராஷ்டிரா அரசு மட்டும் நிலைமையை சமாளிக்க முடியாமல், விவசாயிகளுக்கு நிதி வழங்க வேண்டிய சூழ்நிலையில், பெண்களுக்கு வழங்கும் நிதியில் ரூ. 1000 ஐக் குறைத்து ரூ. 500 மட்டும் வழங்கி வருகிறது.

இத்திட்டத்தால் மகாராஷ்டிரா அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியது. மற்ற திட்டங்களுக்கு நிதி ஒதுக்க முடியாமல் திணறியது. கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அவசர அவசரமாக இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. விண்ணப்பித்த அனைத்து பெண்களின் வங்கிக் கணக்குகளிலும் பணம் வரவு வைக்கப்பட்டது.

``ஸ்டாலின் தலைமறைவாக இருந்தது உண்மைதான்; ஆனால்'' - களத்தில் இருந்த மூத்த பத்திரிகையாளர் விளக்கம்

தவெகவின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நேற்று மாமல்லபுரத்தில் நடந்திருந்தது. இதில் பேசிய அக்கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர், 'கலைஞர் கைது செய்யப்பட்ட போது அவரது மகன் ஸ்டாலின் தலைமறைவாக இருந... மேலும் பார்க்க

Ghazala Hashmi: இந்திய வம்சாவளி; அமெரிக்காவில் முஸ்லிம் லெப்டினன்ட் கவர்னர்! - கஸாலா ஹாஷ்மி யார்?

அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தின் கவர்னர் (Governor), லெப்டினன்ட் கவர்னர் (Lieutenant Governor), அட்டர்னி ஜெனரல் (Attorney General) ஆகிய முக்கியப் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலின் முடி... மேலும் பார்க்க

US Election: தொடர் தோல்வியில் ட்ரம்ப்; முக்கிய பதவிகளில் வெற்றியைக் குவிக்கும் எதிர்க்கட்சி!

அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தின் கவர்னர் (Governor), லெப்டினன்ட் கவர்னர் (Lieutenant Governor), அட்டர்னி ஜெனரல் (Attorney General) ஆகிய முக்கியப் பதவிகளுக்கான தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் அமெரிக... மேலும் பார்க்க