Toyota eBella First Drive | Design, Features & Road Performance Explained | Moto...
மாமல்லன் நீர்த்தேக்கம்: `எதிர்ப்பு கிளம்ப இதுதான் காரணம்' - தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!
செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் அமைக்கப்பட்டுவரும் மாமல்லன் நீர் தேக்கம் சூழலியலாளர்கள் மத்தியில் அதிருப்தியையும், எதிர்ப்பையும் சம்பாதித்திருக்கிறது. சென்னை குடிநீர் தேவையை நிவர்த்திச் செய்யும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து, கடந்த மாதம் அடிக்கல் நாட்டியப் பிறகும், எதிர்க்கட்சிகளும், சூழலியலாளர்களும் எதிர்க்கக் காரணம் என்ன? என்பது குறித்து சுருக்கமாக பார்க்கலாம்.
1. செங்கல்பட்டு மாவட்டம், சென்னை அடுத்த நெம்மேலியில் நீர்வளத்துறை சார்பில் 342 கோடி ரூபாய் செலவில் புதிதாக மாமல்லன் நீர்த்தேக்கம் அமைகிறது. 4,375 ஏக்கர் பரப்பளவில் 1.6 டி.எம்.சி. வெள்ள நீரை சேமிக்கும் வகையில் அமைக்கப்படும் மாமல்லன் நீர்த்தேக்கம் சென்னையின் 6-வது நீர்த்தேக்கமாகும். இதன் மூலம் நாளொன்றுக்கு 170 மில்லியன் லிட்டர் குடிநீர் அதாவது, 13 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு இந்த நீர்த்தேக்கம் பயன்படும். 34 கி.மீ. நீள கரையுடன் மாமல்லன் நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டுவருகிறது.

2. சென்னையின் புறநகர்ப்பகுதியில் எஞ்சியிருக்கும் ஒரே உவர்நீர் ஈரநிலம் இந்த நெம்மேலி. மிக முக்கியத்துவம் வாய்ந்த உயிர்ப்பன்மயமிக்க அலையாத்திக் காடுகளைக்கொண்ட இப்பகுதி, கடலோடு முட்டுக்காடு வழியே பிணைக்கப்பட்டிருக்கிறது. கடலோடு நுண்ணூட்டச் சத்துக்களையும் உயிரினங்களையும் பரிமாறிக்கொள்ளும் ‘Bio corridor’ ஆகச் செயல்படுகிறது.
3. நெம்மேலி உப்புப் பாத்திகள் (Nemmeli Salt Pans) இப்பகுதியின் மிக முக்கியமான பறவை நோக்கும் இடமாகும். இந்தப் பகுதியில் உள்நாட்டி, வெளிநாட்டின் சுமார் 190 பறவை இனங்கள் வந்து செல்கின்றன. குறிப்பாக தற்போது நீர்த்தேக்கம் அமைக்கவிருக்கும் நிலப்பகுதியில், நூற்றுக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
4. இந்த நீர்த்தேக்கம் நன்னீர் ஏரியாக மட்டும் மாற்றப்பட்டால், நூற்றுக்கணக்கான உயிரினங்கள் அழிவது மட்டுமில்லாமல், சென்னை புறநகரில் இருக்கும் ஒரே உவர்நீர் ஈரநிலப் பகுதியையும் இழக்கவேண்டியிருக்கும் என சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

5. மாமல்லன் நீர்தேக்கத் திட்டத்தின் முதல் கட்டத்தில் நெம்மேலி, கிருஷ்ணகாரனை, தண்டலம், பட்டிபுலம், திருப்போரூர், மாமல்லபுரம், சலுவான்குப்பம், பையனூர் உள்ளிட்ட 16 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களும், சதுப்பு நிலங்களில் கைகளால் இறால் பிடித்து வாழ்வாதாரம் நடத்துகின்றனர். எனவே, மாமல்லன் நீர் தேக்கம் அமைக்கும் அரசின் முடிவுக்கு எதிராக மீனவப் பிரதிநிதிகள் தமிழ்நாடு மாநில கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையத்துக்குக் கடிதம் வாயிலாகக் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.
இந்த சூழலில்தான் மாமல்லன் நீர்த்தேக்கம் விவகாரம் அரசியல் அரங்கில் பேசுபொருளாகியிருக்கிறது.




















