2025 Rewind: வங்கதேசம், நேபாளம் முதல் பிரான்ஸ் வரை - எதற்கு போராட்டங்கள் நடந்தன?...
மும்பை மாநகராட்சித் தேர்தல்: 100 வார்டுகளைக் கேட்டுப் போராடிய ஷிண்டே; 90 வார்டுகளைக் ஒதுக்கிய பாஜக
மும்பை மாநகராட்சி உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு ஒரே கட்டமாக வரும் ஜனவரி 15ம் தேதி தேர்தல் நடக்கிறது.
இத்தேர்தலில் மாநிலத்தில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது. அதேசமயம் பா.ஜ.கவும், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.
இதற்காக தொகுதிப் பங்கீடு இரு கட்சிகளிடையே கடந்த ஒரு வாரமாகத் தொடர்ந்து நடந்து வந்தது. இப்பேச்சுவார்த்தையில் சிவசேனா தங்களுக்கு 100க்கும் அதிகமான வார்டுகள் வேண்டும் என்று கேட்டு அடம்பிடித்தது. இது தொடர்பாக இரு கட்சித் தலைவர்களும் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இப்பேச்சுவார்த்தையில் சிவசேனாவிற்கு 70 வார்டுகள் வரை கொடுக்கத் தயாராக இருப்பதாக பா.ஜ.க தெரிவித்தது. ஆனால், 100க்கு மேல் இடங்கள் வேண்டும் என்பதில் ஏக்நாத் ஷிண்டே பிடிவாதமாக இருந்தார். இது தொடர்பாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் நேரடியாகச் சந்தித்தும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நீண்ட இழுபறிக்குப் பிறகு சிவசேனாவிற்கு 90 இடங்களை பா.ஜ.க ஒதுக்கியுள்ளது.
இது குறித்து மும்பை பா.ஜ.க தலைவர் அமீத் சாத்தம் கூறுகையில், ''எங்கள் பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டன. நாங்கள் இப்போது கூட்டாகப் பிரசாரம் செய்வோம். மஹாயுதியின் மேயர் மும்பை மாநகராட்சியில் அமர்வதை உறுதி செய்வோம். பாஜக 137 இடங்களிலும், சிவசேனா 90 இடங்களிலும் போட்டியிடும். சிறிய கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்படும்'' என்று தெரிவித்தார்.
சிவசேனா சார்பாகப் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற ராகுல் ஷெவாலே இதுகுறித்து கூறுகையில், ''தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சாதகமாக இருந்தது. தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.
இதையடுத்து பா.ஜ.க 70 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. தேசியவாத காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் ராக்கி ஜாதவ் நேற்று பா.ஜ.கவில் சேர்ந்தார். அவருக்கு தேர்தலில் போட்டியிட பா.ஜ.க சீட் கொடுத்திருக்கிறது. இதே போன்று காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் தேவேந்திர அம்பேகர் அக்கட்சியிலிருந்து விலகி சிவசேனா(உத்தவ்)வில் சேர்ந்துள்ளார்.
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 102 பேருக்கு தேர்தலில் போட்டியிட அதிகாரப்பூர்வக் கடிதத்தைக் கொடுத்து இருக்கிறது. காங்கிரஸ் இம்முறை பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடி கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளது.
இது தொடர்பாக இரு கட்சிகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. மொத்தம் 150 வார்டுகளில் காங்கிரஸ் போட்டியிட இருக்கிறது. இதில் முதல் கட்டமாக 87 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இதில் மூன்று எம்.எல்.ஏ.க்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இன்று வேட்பு தாக்கலுக்கு கடைசி நாள் என்பதால் வேறு கட்சியில் சீட் கிடைக்காமல் வந்தால் அவர்களுக்குக் கொடுக்க சில வார்டுகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்காமல் காங்கிரஸ் கட்சி காத்திருக்கிறது.
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது பா,ஜ.கவில் சேர்ந்த ரவி ராஜா 195 வார்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த வார்டு தாராவியில் இருக்கிறது. ரவிராஜா அருகில் உள்ள சயான் கோலிவாடாவைச் சேர்ந்தவர். அவரது வார்டு ரிசர்வ் வார்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு தாராவியில் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு பா.ஜ.கவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அவர் தாதரில் உள்ள பா.ஜ.க அலுவலகத்திற்கு வெளியில் போராட்டம் நடத்தினர். தாராவியில் தமிழர்கள் பலர் சீட் கேட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் வெளியில் இருந்து வந்த ரவி ராஜாவிற்கு சீட் கொடுக்கப்பட்டு இருப்பதாக உள்ளூர் பா.ஜ.கவினர் தெரிவித்தனர்.


















