பீகார்: 10வது முறையாக முதல்வராக பதவியேற்ற நிதீஷ் குமார் - இரு துணை முதல்வர்கள் ...
மெட்ரோ விவகாரம்: `பெருந்தன்மையான ஒப்புதலை மதிக்காமல்.!' - மனோகர் லால் கட்டார் விளக்கம்
மதுரை மற்றும் கோவை மாநகரங்களுக்கு முன்மொழியப்பட்ட மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் தர மறுத்திருக்கிறது. இரண்டு நகரங்களிலும் மக்கள்தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக இருப்பதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, கோயம்புத்தூர் நகரத்தின் மக்கள்தொகை 15.84 லட்சமாகவும், மதுரை நகரத்தின் மக்கள்தொகை 15 லட்சமாகவும் இருப்பதாக, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் நவம்பர் 14, 2025 தேதி வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``'கோயில் நகர்' மதுரைக்கும், 'தென்னிந்திய மான்செஸ்டர்' கோவைக்கும் "NO METRO" என நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு! அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம்.
அதற்கு மாறாக, பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல.
கூட்டாட்சிக் கருத்தியலை இப்படி சிதைப்பதைச் சுயமரியாதைமிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. சென்னை மெட்ரோ பணிகளைத் தாமதப்படுத்தி முடக்க நடந்த முயற்சிகளை முறியடித்து முன்னேறினோம்! அதேபோல மதுரை & கோவையிலும் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ இரயிலைக் கொண்டு வருவோம்!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
முதல்வர் எக்ஸ் பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் மனோகர் லால் கட்டார் தன் எக்ஸ் பக்கத்தில், ``மெட்ரோ ரயில் அமைப்பு போன்ற விலையுயர்ந்த உள்கட்டமைப்புத் திட்டங்கள், பொதுமக்களுக்கு அதிகபட்ச நன்மையை கொடுக்க வேண்டும் என்ற மெட்ரோ கொள்கை 2017-ஐ பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டவை.

மெட்ரோ அமைப்பு அந்தக் கொள்கையை பயன்படுத்துவதை தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் அரசியல் செய்து, சர்ச்சையை உருவாக்குவது துரதிர்ஷ்டவசமானது. 2024 அக்டோபர் 3 அன்று மத்திய அரசால் சென்னை மெட்ரோ 2-ம் கட்டத் திட்டமாக 119 கி.மீ. நீளத்திற்கு ரூ. 63,246 கோடி வழங்கியது. மத்திய அரசின் இந்தப் பெருந்தன்மையான ஒப்புதலை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் அரசியல் செய்கிறார்.
கோயம்புத்தூர் மற்றும் மதுரை திட்டங்களில் பின்வரும் முரண்பாடுகள் உள்ளன:
கோயம்புத்தூரில் உள்ள பாதையின் நீளம், சென்னை மெட்ரோ அமைப்பின் பாதையின் நீளத்தை விடக் குறைவாக இருந்தும், சென்னையை விட அதிகமான போக்குவரத்துத் திட்ட மதிப்பீடுகள் (traffic projections) வழங்கப்பட்டுள்ளன. இது முதல் பார்வையிலேயே தவறாகத் தெரிகிறது.
திட்டமிடப்பட்ட சராசரி பயண தூரங்கள் மற்றும் சாலைப் போக்குவரத்துக்கும் மெட்ரோவுக்கும் இடையேயான வேக வேறுபாடுகள் (speed differentials) ஆகியவை, போக்குவரத்து முறை மெட்ரோவுக்கு மாறுவதைத் தாங்குவதாக இல்லை.

3. கோயம்புத்தூர் விரிவான திட்ட அறிக்கையின்படி (DPR), 7 மெட்ரோ ரயில் நிலைய இடங்களில் போதுமான நிலவசதி (right of way) இல்லை.
மதுரைக்கான விரிவான போக்குவரத்துத் திட்ட ஆவணம் (Comprehensive Mobility Plan) தற்போதைய பயணிகள் எண்ணிக்கையின்படி பேருந்து விரைவுப் போக்குவரத்து அமைப்பு (BRTS) மட்டுமே பொருத்தமானது என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது.
கோயம்புத்தூர் மாநகராட்சியின் மக்கள் தொகை 2011-ல் 15.85 லட்சம். அதே சமயம் 2011 கணக்கெடுப்பின்படி உள்ளூர் திட்டமிடல் பகுதி மக்கள் தொகை 7.7 லட்சம். போக்குவரத்து மாற்றத்திற்கான பயணிகள் எண்ணிக்கை மட்டுமே திட்டமிடப்பட்டுள்ளது. மெட்ரோ அமைப்புக்கு எவ்வளவு பெரிய போக்குவரத்து மாற்றம் இருக்கும் என்பதற்கான நியாயமான விளக்கம் தேவை.
மேலும், பல்வேறு நகரங்களுக்கு 10,000 குளிர்சாதன வசதி கொண்ட இ-பேருந்துகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட மத்திய அரசின் PM e-bus Sewa திட்டத்தின் பலனைத் தமிழ்நாடு அரசு பயன்படுத்த மறுத்துவிட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ், பேருந்துகளுக்கு மத்திய நிதி உதவி, டிப்போ உள்கட்டமைப்பு மற்றும் 'பிஹைண்ட் தி மீட்டர்' வசதிகளுக்கான நிதியுதவி வழங்கப்படுகிறது. மத்திய அரசு மீண்டும் மீண்டும் வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு இதுவரை இந்தத் திட்டத்தில் பங்கேற்கவில்லை." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.














