தென்காசி: ஸ்டாப்பில் நிற்காமல் சென்ற அரசு பேருந்து; வாதம் செய்த பயணியை காலணியால்...
`மெல்ல நிறைவேறும் கபடிக் கனவு' - சாதிக்கத் துடிக்கும் திருவாரூர் இளைஞர்!
திருவாரூர் மாவட்டம், வடுவூர் கிராமத்தில் AMC கபடி கழகத்தின் சிறந்த ஆல்ரவுண்டராக லோகநாதன் மிக இளையோர் (Sub junior) பிரிவில் தமிழக அணிக்காக தேர்வாகி இருக்கிறார். லோகநாதனுக்கு வாழ்த்துகள் தெரிவித்துவிட்டு அவரிடம் பேசத் தொடங்கினோம்.
``நான் வடுவூர் மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு வரை படித்தேன். எனக்கு சிறு வயதிலேயே கபடி விளையாடனும்னு ரொம்ப ஆசை. சொல்லப்போனால் என் கனவே கபடி தான். எங்கள் பள்ளியில் எனக்கு பயிற்சியாளராக சுகன் சார் இருந்தார். கபடி மேல எனக்கு இருக்கிற ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக அவர் எனக்கு பல கோணங்களில் உதவினார்.
எங்களது குடும்பம் ரொம்ப ஏழ்மையானது. எங்க அப்பா ராமநாதன் ஒரு விவசாயி. எங்க அப்பா ஒருவருடைய வருமானம் குடும்பத்திற்கு பத்தாம இருக்கிறதுனால என் அம்மா நிர்மலாவும் கூலி வேலைக்கு போய் தான் என்ன படிக்க வச்சாங்க. என் அண்ணன் ஒரு SDAT வாலிபால் விளையாட்டு வீரர்.
என் அண்ணனை முன்னோடியாக வைத்தும் எனக்கு விளையாட்டு மேல ஆர்வம் வந்தது.

என் ஊர் வடுவூர்'ல AMC கபடி கழகம், மேல்பாதி இளைஞர்கள் கபடி விளையாட பயிற்சி கொடுத்தாங்க. அவங்களோட பயிற்சி மூலமா எனக்கு கபடி மேல பெரிய மதிப்பும், மரியாதையும் வந்தது.
என் குடும்ப நிலைமையை புரிந்து கொண்ட AMC டீம், என்னை மயிலாடுதுறையில் இருக்கிற SAI விளையாட்டு விடுதியில் சேர்த்து விட்டாங்க.
இப்போ அங்கதான் 11ஆம் வகுப்பு படிக்கிறேன். இங்க எனக்கு கோச்சாக R. அரவிந்த் ராஜா அவர்கள் பயிற்சி தர்றாங்க. இவரு மட்டும் இல்லனா நான் இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது. நான் செய்கின்ற சிறு தவறையும் அன்பாகச் சொல்லி புரியவச்சு, நான் முன்னேற உதவியா இருக்காங்க.
சேலத்தில் நடந்த மாநில அளவிலான கபடி தேர்ச்சி போட்டியில் பங்குபெற்ற, 300 பேரில் 32 பேர் தேர்வாகிருக்காங்க. அதுல நானும் ஒருத்தன், இதுவே எனக்கு கிடைத்த முதல் வெற்றின்னு நினைக்கிறேன்.
பிறகு தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகத்தில் என்னை செலக்ட் பண்ணாங்க. சேலம் வாலப்பாடியில் 10 நாள்களுக்கு மேல் நடைபெற்ற பயிற்சி முகாமில் தமிழக அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 14 பேர்ல நானும் ஒருத்தன்.
தமிழ்நாடு சார்பாக ஹரியானால நவம்பர் 27 முதல் 30 வரை நடக்க உள்ள கபடி போட்டியில் விளையாட உள்ளேன். கண்டிப்பாக அங்க நல்லா விளையாடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு.
நான் தமிழக அணிக்கு தேர்வானதற்கு எனக்கு முக்கிய உறுதுணையாக இருந்தது, திருவாரூர் மாவட்டக் கபடி கழக செயலாளர் ராஜேந்திரன் அவர்கள்.
ராஜேந்திரன் ஐயா மட்டும் இல்லை என்றால் நான் கண்டிப்பாக இவ்வளவு உயரத்தை தொட்டிருக்க முடியாது. நான் கஷ்டத்தில் இருக்கும்போது எனக்கு தோள் கொடுத்த தோழமை அவர். இந்த நேரத்தில் ராஜேந்திரன் ஐயாவுக்கு எனது நன்றியைக் கூறுகிறேன்.
கண்டிப்பாக தமிழக அணியில் வெற்றி பெற்று எங்களது ஊருக்கு மென்மேலும் பெருமை சேர்ப்பேன்" எனக் கூறி, மனம் நெகிழ்கிறார்...
இன்னும் பல உயரங்களைத் தொட, வாழ்த்துகள் லோகநாதன்!!!

















