சென்னை: காதலன் வீட்டில் மாணவி தற்கொலை - மருந்து பிரதிநிதி கைது!
மோடியின் தமிழக வருகை; மேடையேறப் போகும் கட்சிகள் எவை? - என்.டி.ஏ கூட்டணிக்கு அழுத்தமா?
ஜனவரி 23 ஆம் தேதியன்று பிரதமர் மோடி சென்னை வருகிறார். அப்போது நடக்கும் பிரசாரக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அத்தனை பேரையும் மேடை ஏற்ற வேண்டும் என்பது பாஜக-வின் திட்டமாக இருக்கிறது.
அதிமுக - பாஜக கூட்டணி வலுப்பெறுமா?
ஆனால் அன்புமணியின் பாமக-வும், G.K வாசனின் தமிழ் மாநில காங்கிரஸும் மட்டும்தான் தற்போது வரை அதிமுக - பாஜக கூட்டணியில் இருப்பது உறுதியாகி இருக்கிறது.

டிடிவி தினகரனும், பிரேமலதாவும் கூட்டணி பிரசார மேடையில் ஏறுவார்களா? அதிமுக - பாஜக கூட்டணி வலுப்பெறுமா? அவர்களின் திட்டம் நிறைவேறுமா? என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியனைத் தொடர்பு கொண்டு பேசினோம்.
கோபித்துக் கொண்ட அமித் ஷா
"கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அதிமுக - பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணிதான்(என்.டி.ஏ) ஆட்சி அமைக்கும் என்று அமித் ஷா சொல்ல, நாங்கள் தனித்துதான் ஆட்சி அமைப்போம் என்று எடப்பாடி தலைமையிலான அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியது.
அவர்களுக்குள்ளேயே பல சிக்கல்கள் எழுந்தன. அமித் ஷா திருச்சி வந்தபோதுகூட கூட்டணியில் இன்னும் யாரையும் சேர்க்காமல் இருக்கிறீர்கள்? என்று எடப்பாடியிடம் கோபித்துக் கொண்டார்.

கூட்டணியில் அன்புமணி
அமித் ஷா கொடுத்த அழுத்தத்தினால்தான் அன்புமணியை அழைத்து பாமக-வுடனான கூட்டணியை அறிவித்தார்கள். அதிலும் இன்னும் தொகுதிகள் குறித்தும், ராஜ்ய சபா சீட் குறித்தும் அன்புமணிக்கு உறுதியாகச் சொல்லவில்லை.
ஆனால் 23-ம் தேதி அன்புமணி மேடையில் இருப்பாரா? என்றால் அவர் இருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அதேசமயம் தேமுதிக இருக்குமா என்றால் அது கொஞ்சம் சந்தேகம் தான்.
ராஜ்ய சபா சீட்டில் இருக்கும் சிக்கல்
ஏனென்றால் தேமுதிக அதிமுக-வுடன் மட்டும் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. திமுக-வுடனும் கூட்டணி குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அதிமுக, அன்புமணிக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக வாக்கு கொடுத்திருந்தால் அதில் நமக்கு சிக்கல் இருக்குமா? என்று தேமுதிக யோசிக்கிறது.
ஏனென்றால் அன்புமணிக்கும் ராஜ்ய சபா சீட் கொடுத்து, தேமுதிக-விற்கும் ராஜ்ய சபா சீட் கொடுத்தால் அதிமுக-வில் இருப்பவர்கள் குரல் எழுப்புவார்கள்.

யோசனையில் தேமுதிக
தம்பிதுரை எல்லாம் 10-வது முறையாக எம்.பி ஆக ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறார். இடையில் ஜி.கே வாசனும் எனக்கு ஒரு ராஜ்ய சபா சீட் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அதனால் ராஜ்ய சபா சீட் தங்களுக்கு உறுதியாக கிடைக்கும் என்று வாக்குறுதி தந்தால் தான் தேமுதிக, அதிமுக - பாஜக கூட்டணிக்குள் வருவார்கள் என்பது என்னுடைய கருத்து.
டிடிவி-க்கு அழுத்தம் கொடுக்கும் பாஜக
பாஜக அழுத்தம் கொடுக்கிறது. மத்திய அரசின் அழுத்தம் என்பது சாதாரணமானது கிடையாது.
தவெக-வுடன் டிடிவி தினகரன் பேச்சு வார்த்தை நடத்துகிறார் என்பதைத் தெரிந்துகொண்டு அவரை டெல்லிக்கு வரவழைத்து அழுத்தம் கொடுத்தார்கள்.
வெளியில் பேசும்போது எனக்கு எந்த அழுத்தமும் இல்லை என்று தான் சொல்கிறார். பிறகு ஏன் அவர் அமித் ஷாவை சந்தித்தார்.

கேள்வி எழுப்பும் அமமுக கட்சியினர்
தற்போது தேர்தலில் எதிரிகள், துரோகிகள் என எதையும் பார்க்கக் கூடாது என்று பேசிக்கொண்டிருக்கிறார்.
ஆனால் எடப்பாடியை எதிர்த்து பேசிவிட்டு இப்போது அவர் இருக்கும் கூட்டணிக்கு சென்றால் நன்றாக இருக்காது என்று டிடிவி கட்சியினர் நினைக்கின்றனர்.
அப்படி எடப்பாடி இருக்கும் கூட்டணியில் இணைந்தால் நம் ஜனங்கள் எப்படி ஓட்டு போடுவார்கள் என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர்.
மேலும் நம்முடைய ஓட்டை எல்லாம் வாங்கி எடப்பாடி தானே பலமடைவார். அவரை ஏன் அரசியலில் நாம் பலப்படுத்த வேண்டும் என்று கேட்கிறார்கள்? அதனால் டிடிவி தினகரனும் சற்று குழப்பத்தில் தான் இருக்கிறார்.
வெளியே வந்துவிடலாமா?- டிடிவி
கடைசி நேரத்தில் 20 இடங்களைக் கேட்டு அவர்கள் கொடுக்க மறுத்து விட்டால் நாம் வெளியே வந்துவிடலாமா? என்ற யோசனையில் டிடிவி தினகரன் இருப்பதாகவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. தற்போது டிடிவியுடன் தொகுதி குறித்த பேச்சு வார்த்தைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
வரும் 23-ம் தேதிக்குள் பேச்சுவார்த்தை முடிந்தால் அதிமுக - பாஜக கூட்டணி பிரசார மேடைக்கு டிடிவி தினகரன் வருவார். அதேபோல ஜான் பாண்டியன் 5 இடங்கள் கேட்கிறார். ஆனால் இவர்கள் 2 இடங்கள் தான் கொடுப்போம் என்று சொல்கிறார்கள்.

பிரசார மேடை
ஜி.கே வாசன், ஏ.சி சண்முகம், அன்புமணி போன்றோர் மேடையில் இருப்பார்கள்.
பிரேமலதாவையும், தினகரனையும் மேடையில் அமர வைத்தார்கள் என்றால் நிச்சயமாக அதிமுக- பாஜக கூட்டணி வெற்றி கூட்டணியாகப் பார்க்கப்படும். ஆனால் அதில் நான் முன்பே சொன்ன மாதிரியான சிக்கல்களும் இருக்கின்றன" என்று தெளிவாக எடுத்துரைத்தார்.
















