ஓய்வுக்காலத்தில் மாதம் ₹25,000 பென்ஷன்; அசல் குறையாமல் பெறுவது எப்படி?!
ராகுல் பற்றவைத்த சீன நெருப்பு; நள்ளிரவில் நடந்த உரையாடல்? - நரவானே புத்தகமும், அரசியல் பூகம்பமும்!
நாடாளுமன்ற மக்களவையில் இரண்டாவது நாளாக `அமளி அனல்' தகித்துக் கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்றைய தினம் கையிலெடுத்த `சீன ஊடுருவல்' விவகாரம்தான்.
‘Four Stars of Destiny’
முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவானே எழுதி இன்னும் வெளியிடப்படாத நினைவுக்குறிப்பான ‘Four Stars of Destiny’ புத்தகத்தைமேற்கோள்காட்டி, ராகுல் பேச முற்பட, அதற்கு பாஜக எம்.பி-க்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
`வெளியாகாத புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது குறித்து பேசுவது என்பது நாடாளுமன்ற விதிகளுக்கு எதிரானது.' - இதுவே பாஜக தரப்பில் முன்வைக்கப்படும் வாதம். இந்த விவகாரத்தின் எதிரொலியாக அவை நடவடிக்கைகள் நேற்றைய தினம் பாதிக்கப்பட்டன.
நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறிய ராகுல், `அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு வரிக்குத்தான் அவர்கள் பயப்படுகிறார்கள். அதை நிச்சயம் நான் சொல்வேன். யாரும் தடுக்க முடியாது' எனக் கூறியிருந்தார்.
இணைய தேடலில் வைரல்...
இதன் தொடர்ச்சியாக இன்று கூட்டத்தொடரில், காங்கிரஸ் எம்.பி-க்கள் ராகுல் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து, பேப்பரைக் கிழித்து சபாநாயகரை நோக்கி வீசியதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி-க்கள் மாணிக்கம் தாக்கூர், சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இணைய தேடலில் வைரலானது `Four Stars of Destiny’ என்ற சர்ச் கீவொர்டு.
அப்படி என்ன இருக்கிறது அந்தப் புத்தகத்தில்?
இன்னும் வெளியிடப்படாத அந்தப் புத்தகம் குறித்து பொது வெளியில் கிடைக்கப்பெறும் தகவல்களை வைத்து, இனி பார்க்கலாம்!
இந்திய ராணுவத்தின் தளபதியாக 2019-2022 வரை பதவி வகித்தவர்தான் ஜெனரல் நரவானே. கொரோனா பேரிடர் காலத்தில் ராணுவப் படைகளை திறம்பட நிர்வகித்தவர். ராணுவ ஜெனரல் என்பதைத் தாண்டி, புத்தக ஆசிரியராகவும் அறியப்படுகிறார். அவர் எழுதிய ‘Four Stars of Destiny’ என்ற புத்தகம்தான் தற்போது வரை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் மதிப்பாய்வில் இருக்கிறது. ஆனால் இந்தப் புத்தகத்துக்கு முன்பு நரவானே எழுதிய `The Cantonment Conspiracy' என்ற மர்டர் மிஸ்ட்ரி புத்தகம் வெளியாகி விற்பனையில் இருக்கிறது. அமேசான் உள்ளிட்ட தளங்களில் இந்தப் புத்தகம் கிடைக்கிறது.

இந்த இரண்டு புத்தகங்களுமே Penguin Random House India பதிப்பகத்தின் வெளியீடுகள்தான். இதில் ‘Four Stars of Destiny’ புத்தகம் இன்னும் வெளியாகவில்லை. 2024-ம் ஆண்டே வெளியீட்டுக்கு தயாராக இருந்தது. ஆனால் மத்திய அரசு தரப்பிலிருந்து வெளியீட்டாளருக்கு, `பதிப்பாய்வு முடியும் வரை, இதன் உள்ளடக்கத்தையோ, பகுதிகளையோ, புத்தகத்தின் சாஃப்ட் காப்பீஸ்-களையோ வெளியிட வேண்டாம்' என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
கடந்த வருடம் இலக்கிய திருவிழா ஒன்றில் இந்தப் புத்தகம் குறித்து அதன் ஆசிரியரான நரவானேவிடம் கேட்கப்பட்டது. `இந்தப் புத்தகத்தை எழுதிய அனுபவம் மிகச் சிறப்பானது. நான் எழுதி, அவர்களிடம் (பதிப்பகம்) கொடுத்துவிட்டேன். இனி அது அவர்கள் வேலை' எனக் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் 2023-ம் ஆண்டு டிசம்பரில் PTI செய்தி நிறுவனம், இந்தப் புத்தகத்தின் சில பகுதிகள் என குறிப்பிட்டு சிலவற்றை வெளியிட்டது. அதில்தான், ஜெனரல் நரவானே - மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இடையே 2020-ம் ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி இரவு நடைபெற்ற உரையாடல்கள் இடம்பெற்றிருந்ததாகச் சொல்கிறார்கள். இந்தப் புத்தகம் குறித்து CARAVAN இதழில் வெளியாகியிருந்த கட்டுரையை மேற்கோள்காட்டி தான் ராகுல் காந்தி மக்களவையில் பேச முயன்றார்.

ஆகஸ்ட் 31-ம் தேதி இரவு, இந்திய ராணுவத்துக்கு அத்தனை அழுத்தம் மிகுந்ததாக இருந்ததாக, அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் படைகள், கிழக்கு லடாக்கில் உள்ள ரெச்சின் லாவில் LAC கட்டுப்பாட்டுக் கோட்டை நோக்கி நகர்ந்து வந்திருக்கின்றன.
நரவானே அந்த நினைக்குறிப்பு புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பதாகச் சொல்லப்படும் உரையாடல் இனி...
`அது ஆகஸ்ட் 31-ம் தேதி 2020... டேங்கர்களுடன் முன்னேறிய சீன மக்கள் விடுதலை ராணுவப் படைகள் குறித்து இரவு 8:15 மணியளவில் ஜெனரல் ஜோஷி, மிகவும் பதற்றத்துடன் என்னை அழைத்தார். `சீன மக்கள் விடுதலை ராணுவத்தினர் காலாட் படை, 4 டாங்கிகளுடன் மெதுவாக ரெச்சின் லா நோக்கி முன்னேறுகின்றனர்' என்றார்.
`என்னுடைய உத்தரவு என்ன?'
உடனே பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் முப்படை தலைமை தளபதி ஆகியோரை தொலைபேசி மூலமாக அணுகினேன். அவர்கள் ஒவ்வொருவரிடமும் எனக்கு கேட்க இருந்தது ஒரே கேள்விதான். `என்னுடைய உத்தரவு என்ன?' அவர்கள் முன்னேறிக் கொண்டே இருந்தனர். ஆனால், `ஹை கமாண்ட் உத்தரவு வரும் வரை சுடவேண்டாம்' என்பது எனக்கு வழங்கப்பட்ட தெளிவான உத்தரவாக இருந்தது.
இரவு 9:10 மணியளவில் எனக்கு மேலும் ஒரு தகவல் வந்தடைந்தது... அவர்கள் முன்னேறி, ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் இருக்கிறார்கள் என்று.

9:25 மணிக்கு மீண்டும் பாதுகாப்புத்துறை அமைச்சரை தொடப்பு கொண்டு, நிலைமை மிகவும் பதற்றமாக இருக்கிறது என்பதை விவரித்தேன். மேலும், தெளிவான உத்தரவை வேண்டினேன். இதற்கிடையில் இரு நாட்டு அதிகாரிகள் இடையே ஹாட்லைன் மூலம் தகவல் பரிமாற்றம் நடந்தது.
சீன தளபதி, `இரு தரப்பும் மேலதிக நடவடிக்கைகளை நிறுத்தி மறுநாள் காலை 9:30 மணியளவில் உள்ளூர் ராணுவ ஜெனரல்கள் சந்திப்பை நடத்தலாம்' என முன்மொழிந்தார். இந்த தகவலை பாதுகாப்புத்துறை அமைச்சருக்கும், தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கும் இரவு 10 மணியளவில் கடத்தினேன்.

ஆனால், இரவு 10:10 மணிக்கு மீண்டும் அழைத்த ஜெனரல் ஜோஷி, `சீன டாங்கிகள் முன்னேறி, சுமார் 500 மீட்டர் தூரத்தில்தான் இருக்கின்றன' என்றார். உடனே நிலைமையின் தீவிரத்தை பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் எடுத்துரைத்தேன். அவர் பிரதமருடன் பேசிவிட்டு திரும்ப அழைப்பதாகக் கூறினார். இரவு 10:30 மணியளவில் அவர் மீண்டும் அழைத்தார்.
`சரியென தோன்றுவதைச் செய்யுங்கள்!'
தான் பிரதமருடன் பேசியதாகவும், `இது முழுக்க ராணுவ முடிவு. உங்களுக்கு சரியென தோன்றுவதைச் செய்யுங்கள்' என்றார். இத்தகைய உத்தரவை பெற்ற பிறகு, முழு பொறுப்பும் என் மீது விழுந்தது. சில நிமிடங்கள் அமைதியாக உட்கார்ந்தேன். அந்த நேரத்தில் சுவர் கடிகாரத்தின் டிக்-டிக் சத்தத்தைத் தவிர வேறு எதுவும் கேட்கவில்லை." இவ்வாறு... நரவானே நினைவுகூர்வதாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
வெளியாகாத இந்தப் புத்தகம்தான் அரசியல் வெளியில் தற்போது பெரும் பூகம்பங்களுக்கு விதித்திருக்கிறது!
INPUTS - The Indian Express













