'சாரிடான் மாத்திரைதான் மிச்சம்' - பராசக்தி படத்தைக் கலாய்த்த கார்த்தி சிதம்பரம்
ராணிப்பேட்டை: மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம் - மனைவி கையை வெட்டிய முதியவர் கைது
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகேயுள்ள நாடோடியின குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (65). இவரின் மனைவி லட்சுமி (60). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். பிள்ளைகள் மூவரும் திருமணமாகி அவரவர் குடும்பத்துடன் தனியாக வசிக்கின்றனர். இதனால், வயோதிக காலத்திலும் ஆறுமுகம், லட்சுமி கூலிவேலைச் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மது குடிக்க பணம் கேட்டு முதியவர் ஆறுமுகம் மனைவியிடம் சண்டைப் போட்டிருக்கிறார். நேற்று இரவு மது அருந்திவிட்டுவந்த முதியவர் ஆறுமுகம், பணம் தராத மனைவி மீது ஆத்திரமடைந்து, கத்தியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில், லட்சுமியின் வலது கையில் வெட்டு விழுந்ததில், கை துண்டானது. அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து லட்சுமியை மீட்டு கலவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறையிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் அனுப்பிவைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் பற்றி, கலவை போலீஸார் வழக்கு பதிவு செய்து, முதியவர் ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


















