'அளவுக்கதிகமாக தூக்க மாத்திரை...' - விஜய் காரை மறித்த பெண் தற்கொலை முயற்சி!
ரெட்ட தல விமர்சனம்: டபுள் ஆக்ஷன் அருண் விஜய்! கதை ஓகே; ஆனால் இத்தனை பலவீனமான திரைக்கதையா?!
சிறுவயதிலிருந்தே தாய் தந்தை அரவணைப்பின்றி வளர்கின்றனர் காளி (அருண் விஜய்) மற்றும் ஆந்த்ரே (சித்தி இத்நானி).
வேலை காரணமாக வெளியூருக்குச் சென்ற காளி ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு காதலி ஆந்த்ரேவைச் சந்திக்கச் சொந்த ஊரான பாண்டிச்சேரிக்கு வருகிறார். ஆனால், பணத்தின் மீது அதீத ஆசை கொண்டிருக்கும் ஆந்த்ரே 'உன்னிடம் பணம் இருந்தால் மட்டுமே நம் காதல் சேரும்' எனக் கூறி தடை போட்டுவிடுகிறார்.

அந்தச் சமயத்தில் தன்னைப் போலவே உருவம் கொண்ட உபேந்திராவைச் சந்திக்கிறார் காளி. பெரிய பணக்காரராக இருக்கும் அவரைக் கொன்றுவிட்டு, அவருடைய அடையாளத்தை வைத்து செல்வத்தை அனுபவிக்கலாம் என காளியும், ஆந்த்ரேவும் திட்டமிடுகிறார்கள்.
உபேந்திராவைக் கொலை செய்த பிறகு காளிக்கு எப்படியான பிரச்னைகள் வருகின்றன, உபேந்திராவின் உண்மையான முகம் என்ன என்பதுதான் இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கியிருக்கும் இந்த 'ரெட்ட தல' படத்தின் கதை.
ஆனால், அந்த அலட்டல் நடிப்பில் நாம் ஏற்கெனவே பார்த்துப் பழகிய அருண் விஜய்யே தென்படுகிறார். அதீத நடிப்பையும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
பணத்தின் மீது பேராசை கொண்டவராக வரும் நாயகி சித்தி இத்நானி இந்த 'கிரே ஷேட்' பாத்திரத்தில் பாஸ் மார்க் மட்டுமே வாங்குகிறார். வழக்கமான கதாபாத்திரத்தில் ஜான் விஜய், செயற்கையான உடல்மொழி, அதைவிடச் செயற்கையான வசன ஏற்ற இறக்கங்கள், இரட்டை அர்த்த வசனங்கள் என ஏமாற்றமே தருகிறார்.
பழிவாங்கும் எண்ணம் கொண்டு துரத்தும் வழக்கமான வில்லன்களாக இந்த யுத்தக்களத்தில் பங்குபெறும் ஹரீஷ் பேரடி, யோகேஷ், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோருக்கு அழுத்தமான காட்சிகள் இல்லை.
லாங் ஷாட்களாலும், ஆர்ப்பாட்டமில்லாமல் நம் ரசனையைக் கவரும் தனித்துவமான லைட்டிங்காலும் படத்திற்கு நல்லதொரு திரைமொழியை அமைக்க உதவியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் டிஜோ டாமி.
படத்தொகுப்பாளர் ஆண்டனியின் கத்திரிக்கோல் கட்களின் கூர்மையைக் கவனிக்கத் தவறியதனால் 2 மணி நேரத்திற்குள்ளிருந்தாலும் நீண்ட நேரம் பார்த்த அயர்ச்சியை உண்டாக்குகிறது படம்.
ஆக்ஷன் காட்சிகள் நல்லதொரு தரத்திலிருந்தாலும், அதனை வெளிச்சமிட்டுக் காட்ட வீரியமான காட்சிகள் இல்லாததால், தாக்கம் உண்டாக்காமல் மறைந்து போகின்றன.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ் 'கண்ணம்மா' பாடலில் வைப் வால்யூமை ஏற்றியிருந்தாலும் படத்துக்கு அது அநாவசியமே! க்ளைமாக்ஸ் காட்சியின் பின்னணி இசையில் மட்டும் சர்ப்ரைஸ் செய்பவர், மற்ற இடங்களிலும் பளிச்சிடும் புதுமை 'கீ' களை அழுத்தாதது மைனஸ்!
இரட்டை வேடம், கதாநாயகியின் ஆசை, எதற்கும் துணிந்து களத்தில் இறங்கி துப்பாக்கி முனையில் சிக்கிக்கொள்ளும் நாயகன் எனச் சுவாரஸ்யமான ஒன் லைனைப் பிடித்து நிமிர்ந்து உட்கார வைக்கிறார் இயக்குநர் கிரிஷ் திருக்குமரன். இந்தச் சுவாரஸ்ய புள்ளியை வைத்து அடுத்தடுத்து கட்டமைக்கப்பட வேண்டிய பரபர தருணங்கள் திரைக்கதை பக்கங்களில் காணாமல் போனதுதான் ஏமாற்றமே!
நாயகிக்கு ஏன் பணத்தின் மீது இத்தனை ஆசை, உபேந்திரா எத்தகையவர் என்பதற்கு முழுமையான விளக்கம் தரும் பிளாஷ்பேக் இல்லாதது கதைக்கு ஆழமில்லாத உணர்வினைத் தந்துவிடுகிறது.
ட்விஸ்ட் வரப்போவதற்கு முன்பாகவே அதனுடைய சிறு சிறு குறியீடுகளை நம் கண்களைத் துறுத்தும் வகையில் சேர்த்து, அவை உண்டாக்கும் ஜெர்க் தருணங்களுக்கும் பேரிகேட் போட்டிருக்கிறார்கள்.
க்ளைமாக்ஸில் நாயகனுக்கான மாஸ் ட்விஸ்ட் எல்லாம் ஓகேதான்... ஆனால், அதற்குப் பின்னிருக்கும் லாஜிக் கேள்விகளுக்கு நியாயமான பதில் எங்கே பாஸ்? எதிலுமே தெளிவில்லாத ஸ்டேஜிங்கால் வெற்று ஹிரோயிஸ பில்டப்பாக மட்டுமே எஞ்சி நிற்கிறது க்ளைமாக்ஸ்!
அதோடு இன்னும் பல எண்ணற்ற லாஜிக் கேள்விகளுக்கும் விளக்கம் தராமல் 'டாடா, பை பை' என விமானம் ஏறித் தப்பி ஓடுவது ஏனோ! காதல் காட்சி தொடங்கி, அர்த்தமே இல்லாத கத்திச் சண்டை, ஸ்னைபர் ஷூட்டிங் எனப் பெரும்பாலான காட்சிகளில் புதுமையான த்ரில்லருக்கான தடயமே இல்லாமல் போவது மற்றுமொரு பெரிய மைனஸ்!
ஏ.ஐ உதவியுடன் ஓரிரு ஷாட்களைக் கொண்டு வந்திருக்கும் ஐடியாவுக்கு லைக்ஸ்... ஆனால், அதன் அதீத பயன்பாட்டைத் தவிர்த்திருக்கலாமே!
நல்லதொரு கதைக்கு ஏற்ற திரைக்கதையும் ஸ்டேஜிங்கும் இல்லாததால், இந்த 'ரெட்ட தல'-யில் ஒரு தலை கூட நிமிரவில்லை.















