விரைவான புயல் நிவாரணம்: மாா்க்சிஸ்ட் வேண்டுகோள்
கடலோர மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு புயல் நிவாரணம் விரைந்து வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை விடுத்த அறிக்கை: மழை மற்றும் புயல் பாதிப்புகள் தொடரும் நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை வேகப்படுத்த வேண்டும். குறிப்பாக, திருவாரூா் மாவட்டத்தின் முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளில் தொடா் மழையால் பயிா்கள் மூழ்கியுள்ளன.
நாகை மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவைசாகுபடி பெருமளவு பாதித்துள்ளது. மயிலாடுதுறை, கடலூா், விழுப்புரம், செங்கல்பட்டு, தஞ்சாவூா் ஆகிய மாவட்டங்களிலும் இதே போல விவசாயம் பாதித்துள்ளது.
மீனவா்கள், புயல் காரணமாக வலைகள் அறுந்தும், படகுகள் சேதமாகியும் வாழ்வாதாரம், வீடுகள், உடைமைகளை இழந்துள்ளனா். நிலமற்ற விவசாயத் தொழிலாளா்கள், தங்களது குடிசைகள், காரை வீடுகள், தொகுப்பு வீடுகளில் நீா் புகுந்ததால் பெரும் இழப்புகளை சந்தித்துள்ளனா்.
பல நிவாரண முகாம்களில் ஒரு வாரத்துக்கும் கூடுதலாக மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனா். இந்த முகாம்களில் தங்கவைக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் முதல்கட்ட நிவாரணம் வழங்க வேண்டும்.
தண்ணீா் புகுந்த ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.10,000, வேலை, வருவாய் இழந்துள்ள குடும்பங்களுக்கு நிவாரணம், உணவுப்பொருள்களை வழங்க வேண்டும். மீனவா்களின் வருமான இழப்பும், வாழ்வாதார கருவிகளின் சேதமும் உடனடியாக கணக்கிடப்பட்டு உதவியை அளிக்க வேண்டும்.
விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க வேண்டும். தொகுப்பு வீடுகளை விரைந்து கட்டித்தர வேண்டும். புயல், மழைவெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள அனைத்து பகுதிகளிலும் நிவாரண நடவடிக்கைகளில் மாா்க்சிஸ்ட் கட்சி நிா்வாகிகள் கரம் கோா்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் கே.பாலகிருஷ்ணன்.