"விவாகரத்து பற்றி நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை" - வைரலாகும் ஐஸ்வர்யா ராயின் பழைய பேட்டி
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது கணவர் அபிஷேக் பச்சனுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக நீண்ட நாட்களாக செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன.
இது தொடர்பாக இரு தரப்பினரும் கருத்து தெரிவிக்காமல் இருந்தனர். கடந்த ஆண்டு நடந்த முகேஷ் அம்பானி மகன் திருமணத்திற்கு ஐஸ்வர்யா ராய் தனியாகத்தான் வந்தார். அதே சமயம் அமிதாப் பச்சன் குடும்பம் தனியாக வந்தது. ஐஸ்வர்யா எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் தனது மகளுடன் சென்று கலந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
அதோடு ஐஸ்வர்யா ராய் அமிதாப் பச்சன் குடும்பத்திலிருந்து பிரிந்து தனது மகளுடன் தனியாக வசிப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனும் நிகழ்ச்சிகளில் சேர்ந்தே கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் திருமணத்திற்குப் பிறகு அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியது இப்போது வைரலாகி இருக்கிறது.

இதில் பேசிய இருவரும் பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியை நடத்தியவர் விவாகரத்து குறித்து ஐஸ்வர்யா ராயிடம் பேசியபோது, அது குறித்து கருத்து தெரிவித்த ஐஸ்வர்யா ராய், விவாகரத்து போன்ற விஷயங்கள் குறித்து நாங்கள் நினைத்துக்கூட பார்த்ததில்லை என்று குறிப்பிட்டார்.
அபிஷேக் பச்சன் தாயார் ஜெயாபச்சன் குறித்த கேள்விகளையும் ஐஸ்வர்யா ராய் தவிர்த்துவிட்டார். அதேசமயம் அபிஷேக் பச்சன் தனது மனைவியிடம் முதன் முதலில் எப்படி தனது காதலைத் தெரிவித்தேன் என்பது குறித்த தகவல்களை இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்.
அமெரிக்க படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது ஹோட்டல் அறையில் பால்கனியில் நின்று பேசிக்கொண்டிருக்கும்போது ஐஸ்வர்யா ராயிடம், என்னைத் திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்டேன் என்று தெரிவித்துள்ளார்.






















