சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து? - இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு... வீட்...
வீடு தேடிச் சென்று பஜ்ரங் தள் பிரமுகரைக் குத்திக் கொன்ற மர்ம நபர்; புதுக்கோட்டையில் பரபரப்பு!
புதுக்கோட்டை, திருவப்பூர் குட்செட் சாலையைச் சேர்ந்தவர் மெய்யப்பன். இவர் மகன் மோகன்ராஜ் (வயது: 38). இவர், பஜ்ரங் தள் அமைபின் முன்னாள் மாவட்டத் தலைவராகவும், ராமேஸ்வரம் கோட்டப் பொறுப்பாளராகவும் இருந்தார். இவரோடு தாய் சுசிலா மற்றும் மனைவி சூர்ய பிரியா மற்றும் மூன்று குழந்தைகள் இருந்து வந்தனர். இந்நிலையில் இன்று மோகன்ராஜைப் பார்க்க அவரது வீட்டிற்கு மர்ம நபர் ஒருவர் வந்துள்ளார். அப்போது, வீட்டில் இருந்து வெளியே வந்த மோகன்ராஜ், வந்தரிடம் பேசிக்கொண்டே உள்ளே அழைத்துச் சென்று வீட்டின் சோபாவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளார். திடீரென அந்த மர்ம நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வயிற்றில் குத்தியுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத மோகன்ராஜ் சோபாவில் இருந்து எழுந்து வெளியே வந்துள்ளார். வாசல்படியில் மோகன்ராஜைப் பிடித்து கழுத்தை அறுத்து கீழே தள்ளிவிட்டு, வேகமாகச் சென்றுள்ளார். இதனைப் பார்த்த தாய் சுசிலா, மனைவி சூர்ய பிரியா அலறியடித்துகொண்டு கத்தியுள்ளனர்.

ஆனால், அக்கம் பக்கத்தில் இருந்து உறவினர்கள், தெரிந்தவர்கள் வருவதற்குள் கொலைசெய்த மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த திருக்கோகர்ணம் காவல் நிலைய போலீஸார், சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு, உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, புதுக்கோட்டை டவுன் டி.எஸ்.பி பிருந்தா மற்றும் டவுன் இன்ஸ்பெக்டர் சுகுமார் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். பின்னர், இறந்த மோகன்ராஜ் உடலை உடற்கூறாய்வு மேற்கொள்வதற்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவுசெய்த திருக்கோகர்ணம் போலீஸார், கொலையாளியைத் தேடி வருகின்றனர். இந்தக் கொலைச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



















