காரைக்குடி : காருக்குள் கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்; நகைகள் திருட்டு; சிக்கிய ...
வெள்ளகுதிர: ``கலைஞர் ஆட்சியில் அந்த சட்டம் இருந்துச்சி" - மேடையில் பாக்கியராஜ் வைத்த கோரிக்கை!
கூத்துப்பட்டறை கலைஞரான ஹரிஷ் ஓரி தயாரித்து, நடித்துள்ள திரைப்படம் ‘வெள்ளகுதிர’. காக்கா முட்ட படத்தின் இயக்குநரும் நடிகருமான மணிகண்டனின் உதவி இயக்குநராக இருந்த சரண் ராஜ் செந்தில்குமார் இயக்கியுள்ளார்.
பரத் அகசிவகன் இசையமைத்துள்ளார். மலைவாழ் மக்கள் சந்திக்கக் கூடிய பிரச்சனைகளை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது.
இந்த திரைப்படத்தின் ’டிரைலர் வெளியீட்டு விழா’ சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பேரரசு, ஆர்.வி.உதயகுமார், ஆர்.கே செல்வமணி, நடிகர் பாக்கியராஜ் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய நடிகர் பாக்கியராஜ், ``இந்தப் படம் பாதையே இல்லாத மலைப்பகுதியில் படமாக்கப்பட்டிருக்கிறது. 40 குடும்பங்கள் மட்டுமே வாழும் அந்தப் பகுதியில், பாதையே இல்லை என்றாலும் அவ்வளவுப் பெரிய மலை உச்சியில் கோயில் இருக்கிறது.
கடவுள் மனிதனைக் காப்பாற்றவில்லை. மனிதன்தான் கடவுளைக் காப்பாற்றுகிறான். நான் தேசிய விருதுகள் வழங்கும் குழுவில் இருந்தேன்.
அப்போது, தினமும் விருதுக்கானப் படங்களைப் பார்ப்போம். ஆனால், அதில் தமிழ்ப்படமே இல்லை. எங்களுக்கும் பெரும் சங்கடமாக இருந்தது. அப்போதுதான் காக்கா முட்டை படம் வந்தது. அதைப் பார்த்ததும் நாங்களே விருது பெற்றது போல உணர்ந்தோம்.
அந்தப் படத்தின் உதவி இயக்குநராக இருந்தவர்தான் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். அப்படியானால் இந்தப் படம் எப்படி இருக்கும் என்பது உங்கள் கற்பனைக்கே விடுகிறேன்.
மேடையில் இருக்கும் உதயகுமார், பேரரசு, செல்வமணி எல்லோரும் சிறிய ப் படங்களுக்காகவும் தொடர்ந்து வந்து பேசுகிறார்கள்.

அப்போதுதான் சிறியப் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை எனப் பேசிக்கொண்டிருந்தோம். கலைஞர் காலத்தில் சிறியப் படங்களுக்கும் தியேட்டர் ஒதுக்க வேண்டும் என்ற சட்டம் இருந்தது.
ஆனால், இப்போது அது செயல்பாட்டில் இல்லை எனக் கருதுகிறேன். இப்போது இருக்கும் முதல்வர் அந்த சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இப்போது தேர்தல் வருகிறது என்பதால், இந்த நேரத்தில் கோரிக்கை வைத்தால் நடக்கும்" எனச் சிரித்துக்கொண்டே பேசி முடித்தார்.













