மும்பை: மேளதாளம், கரகோஷம், ரோஜா மழை; பயிற்சியாளருக்கு உள்ளூர்வாசிகள் உற்சாக வரவே...
வேலூரில், மினி டைடல் பார்க்; திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் - 600 பேருக்கு வேலை வாய்ப்பு!
வேலூர் அப்துல்லாபுரம் பகுதியில், தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் ரூ.32 கோடி மதிப்பீட்டில் மினி தகவல் தொழில்நுட்ப பூங்கா (டைடல் பார்க்) அமைப்பதற்காக 4.98 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, அதில் கடந்த 18-2-2023 அன்று முதல்வர் ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்டது.
தமிழ்நாடு அரசின் டிட்கோ (TIDCO) மற்றும் எல்காட் (ELCOT) நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டு முயற்சியே, இந்த ஐடி பூங்கா. தற்போது, கட்டுமானப் பணிகள் முடிந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளிக் காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.

இதையடுத்து, வேலூர் டைடல் பார்க்கை முழுமையாக குத்தகைக்கு எடுத்துள்ள ஏ.ஜி.எஸ் ஹெல்த் கேர் நிறுவனத்துக்கு தள ஒதுக்கீட்டு ஆணையையும் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். அப்போது, மூத்த அமைச்சர் துரைமுருகன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதைத்தொடர்ந்து, வேலூர் டைடல் பார்க்கில் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி குத்து விளக்கு ஏற்றி பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ-க்கள் ஏ.பி.நந்தகுமார், கார்த்திகேயன், மேயர் சுஜாதா ஆனந்தகுமார், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் மு.பாபு உட்பட பலர் கலந்துகொண்டனர். வேலூர் டைடல் பார்க் மூலம் சுமார் 600 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் நேரடியாகவும், மேலும் 50 பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புப் பெறுகிறார்கள்.

















