செஸ் உலகின் இளம் ராஜா! - புதிய அத்தியாயத்தை எழுதும் பிரக்ஞானந்தா!
ஸ்டாலின் படத்துடன் வந்த திமுக மேயர்; திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் என்ன நடந்தது?
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய ஆட்சி அமைந்த பிறகு, திண்டுக்கல் மாநகராட்சியின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா மற்றும் ஆணையர் செந்தில் முருகன் ஆகியோர் தலைமையில் கூட்டம் தொடங்கியது.
''பாதாள சாக்கடை மூடிகள் முறையாக முறையாக இல்லாததால் விபத்து ஏற்பட்டு 40 நாள் சிகிச்சையில் இருந்தேன்’' என மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க கவுன்சிலர் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து, ‘'மாநகராட்சியில் 3 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது, குழாய்களில் ஏற்படும் உடைப்புகளால் தண்ணீர் வீணாகிறது'' என்று கவுன்சிலர்கள் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2-வது வார்டு கவுன்சிலர் கணேசன் பேசுகையில், “ஆத்தூர் தடுப்பணையில் தனியார் தண்ணீர் நிறுவனம் பல்லாயிரம் லிட்டர் தண்ணீரை எடுக்கிறார்கள். இதை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தடுக்க வேண்டும். இதுவே மாநகராட்சியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட முக்கிய காரணம்'’ என்றார்.
கூட்டத்திற்கு வருகை தந்த மேயரும் துணை மேயரும், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்தை எடுத்து வந்து, தாங்கள் அமர்ந்திருந்த மேஜையின் மீது வைத்து கூட்டத்தைத் தொடங்கினர்.
முன்னதாக, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாநகராட்சி 14-வது வார்டு உறுப்பினர் தனபால் பேசும்போது, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி மற்றும் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோருக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக வார்டு கவுன்சிலர் ஜெயந்தி, “தமிழக முதலமைச்சருக்கு வாழ்த்து கூறுவதை ஏற்றுக்கொள்கிறேன்; ஆனால் மற்ற மாநில முதல்வர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது எந்த வகையில் நியாயம்? அந்த மாநிலங்களில் நம் முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவிப்பார்களா?'' என்று கேள்வி எழுப்பினார்.
இது குறித்து மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் விளக்கம் அளிக்கையில், "மாநகராட்சிக்கு ஆத்தூர் தடுப்பணை மற்றும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் என இரு வழிகளில் தண்ணீர் கிடைக்கிறது. தற்போது ஆத்தூர் தடுப்பணையில் 2 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. முல்லைப் பெரியாறு பேபி அணையில் இருந்து ஆத்தூர் தடுப்பணைக்குத் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.
மாநகராட்சி சுகாதாரத்துறை தலைவரும் 3-வது வார்டு திமுக கவுன்சிலருமான இந்திராணி பேசுகையில், "மாநகராட்சி ஒப்பந்ததாரரான பிபிஏ (BPA) கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம், 24 ஊழியர்களுக்கு ரூ.14,000 வழங்க வேண்டிய இடத்தில் ரூ.7,000 மட்டுமே வழங்குகிறது. மத்திய அரசின் அரசாணைப்படி, ஊழியர்களின் சம்பளத்தை வங்கிக் கணக்கு மூலமே வழங்க வேண்டும்" என வலியுறுத்தினார்.

இதற்கு பாஜக 14வது வார்டு கவுன்சிலர் தனபாலன் வரவேற்பு தெரிவித்தார். திமுக வார்டு கவுன்சிலர் இந்திராணியின் பேச்சுக்கு, திமுக வார்டு கவுன்சிலர் இடையே சலசலப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து 3வது வார்டு கவுன்சிலர் இந்திராணி பேசும்போது, “பாதாள சாக்கடைப் பணிகள் மற்றும் பராமரிப்பு குறைபாடுகளால் விபத்துகள் ஏற்படுகின்றன'' என்றார்.
உடனே பாதிக்கப்பட்ட நபர்கள் குறித்த விவரங்களைத் தெரிவிக்கவும் என்று தி.மு.க கவுன்சிலர்கள் கோஷங்கள் எழுப்பினர்
இதற்கு பதிலளித்த திமுக கவுன்சிலர் இந்திராணி, “நானே பாதிக்கப்பட்ட நபர் கடந்த 40 நாட்களாக பாதாள சாக்கடை மூடிகள் முறையாக இல்லாததால் விபத்து ஏற்பட்டு சிகிச்சையில் இருந்தேன்” எனத் தெரிவித்தார்.
மேலும் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் இது குறித்து விளக்கம் அளிக்கும் போது, “ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கு மூலம் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், பாதாள சாக்கடைகள் சரி செய்யப்படும்'' என உறுதியளித்தார்.
இறுதியாக, உலக சுற்றுச்சூழல் தினத்திற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கூட்டம் நிறைவடைந்தது.


















