'ஆபரேஷன் இரட்டை இலை' - மதுராந்தகத்தில் ர.ர-க்களின் பிரமாண்ட இணைப்பு விழா; தவெக ப...
ஸ்ரீவைகுண்டம் விவகாரம்: "என்னை வாழ விடாமல் அவதூறு.!" - பாதிக்கப்பட்ட பெண், டி.ஐ.ஜி-யிடம் கண்ணீர்!
.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 37 வயது பெண்ணை த.வெ.க நிர்வாகியான பாலமுருகன் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் சர்சையாகியுள்ளது. அந்தப் பெண்ணுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி தனியார் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று, ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர். இருப்பினும், குற்றவாளிகளுக்கு உடந்தையாகச் செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சரவணன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட பெண் நெல்லை சரக டி.ஐ.ஜி-யிடம் இன்று (ஜூன் 13-ம் தேதி) புகார் அளித்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்க பேசிய பாதிக்கப்பட்ட பெண், "நான் விஜய் சாரின் தீவிர ரசிகை. அவர் திரைப்படங்களை ஒன்று விடாமல் பார்த்து விடுவேன். அவர் அரசியல் கட்சி கொடங்கியதும் நானும் அவரது கட்சியில் சேர்ந்தேன். பின்னர் தேர்தலின் போதும் நான் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட்ட சரவணனுக்காக தீவிரமாக வாக்கு சேகரித்தேன். அப்போது எனக்கு த.வெ.க நிர்வாகியாக இருந்த பாலமுருகனுடன் கட்சி ரீதியானபழக்கம் ஏற்பட்டது. அவர் மூலமாக ஜெயபாலும் அறிமுகமானார்.
எனக்கு திருமணமாகி விட்டது. நான் குடும்பத் தேவைக்காக நல்ல வேலை தேடி வந்தேன். இது தொடர்பாக அறிமுகமான பலரிடமும் வேலை தேடித் தருமாறு சொல்லியிருக்கிறேன். அதன்படி பாலமுருகனிடம் பேசியபோது, எம்.எல்.ஏ சரவணன் செய்துவரும் லாட்டரி தொழிலில் வேலை இருப்பதாகவும், நல்ல கமிஷன் கிடைக்கும் என்றும் அழைத்துச் சென்றார். ராமநாதபுரத்தில் ஏஜென்ட்டாக இருக்கும் ஜெயபாலை பார்க்க வேண்டும் என பாலமுருகன் என்னை காரில் அழைத்துச் சென்றார்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் தனியார் ஹோட்டலில், எனக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து இருவரும் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டனர். மயக்கம் தெளிந்து அதிர்ச்சியடைந்து இருவரிடமும் கேட்டதற்கு, ' எம்.எல்.ஏ சரவணனன் மூலமாக முதல்வர் விஜய், அமைச்சர் ஆனந்திடம் சொல்லி அர்ரசு வேலை வாங்கித்தருவதாகச் சொன்னதோடு, இந்த சம்பவம் குறித்து வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டினார்கள்.
அதனால் பயந்துபோன நான் இது பற்றி எம்.எல்.ஏ சரவணனிடம் தான் முதலில் முறையிட்டேன். ஆனால் அவர் என்னை புகார் அளிக்க வேண்டாம் என்று தடுத்து அரசு வேலை வாங்கித் தருவதாக கூறியதோடு மிரட்டலும் விடுத்தார்.
அதனால் அச்சம் அடைந்த நான் சென்னை தலைமைச் செயலகத்திலும் ஸ்ரீவைகுண்டம் மகளிர் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தேன். மகளிர் போலீஸ் நிலையத்தில் நான் அளித்த புகாரில் எம்.எல்.ஏ பெயரையும் சேர்த்தே தெரிவித்திருந்தேன். ஆனால் இன்ஸ்பெக்டர், எம்.எல்.ஏ பெயரை மட்டும் புகாரில் இருந்து நீக்கிவிட்டார்.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நான் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அண்ணாவின் தீவிர ரசிகையாக பல ஆண்டுகள் இருந்து வருகிறேன். இந்த சம்பவத்திற்கு பிறகு என்னையும் குற்றவாளி பாலமுருகனையும் கட்சியில் இருந்து நீக்கி விட்டனர். குற்றவாளிகளுக்கு உறுதுணையாக இருந்த எம்.எல்.ஏ சரவணன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார், விஜய் அண்ணா.
நான் புகார் அளித்த பிறகு எனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன. புகாரை வாபஸ் பெறும்படி தெரியாத பலரிடமிருந்து அழைப்புகள் வருகின்றன. இது தவிர இணையத்திலும் என்னை அவதூறாக சித்தரிக்கிறார்கள். எம்.எல்.ஏ சரவணன் மற்றும் கைதாகியுள்ள பாலமுருகனின் ஆதரவாளர்கள் எனது புகைப்படத்தை வெளியிட்டு என்னை அவதூறாக சித்தரிக்கிறார்கள்.
அதனால் எனது மகன் பள்ளிக்கு செல்லவே கூச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் என்னால் வெளியில் ஏங்கும் சென்று வேலை கேட்க கூட முடியவில்லை. எனவே எனது வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கி
கிடக்கும் நிலை உள்ளது.
இது தவிர, குற்றவாளியான பாலமுருகனின் மனைவி என் மீது தவறான பண மோசடி புகார்களை கூறி வருகிறார். எனக்கும் சம்பந்தமே இல்லாத ஆடியோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு பொதுவெளியில் என்னை அசிங்கப்படுத்த முயல்கிறார்கள். எனது தம்பியின் புகைப்படத்துடன் மற்றொரு பெண்ணின் புகைப்படத்தை இணைத்து அவதூறு பரப்புகிறார்கள்.
என்னையும் எனக்கு உதவுபவர்களையும் இதுபோன்று அசிங்கப்படுத்துவதால் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன். எனக்கு ஏற்பட்ட இந்த பாதிப்புக்குக் காரணமான பாலமுருகன், ஜெயபால் ஆகியோருக்கு கடுமையான தண்டனையை காவல்துறை பெற்றுத் தர வேண்டும். குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்த எம்எல்ஏ சரவணன் மீதும் போலீஸார் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை வலியுறுத்தியே டி.ஐ.ஜி-யிடம் புகார் மனு அளித்துள்ளேன்" என்று கண்ணீருடன் தெரிவித்தார்.


















