விருதுநகர்: பொன்மஞ்சள் விரிப்பாய் பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி மலர்கள்! - Sce...
ஹாட்ஸ்பாட் 2: "அப்படி படம் எடுக்க எனக்கு உரிமை இருக்கு" - விமர்சனம் குறித்து விக்னேஷ் கார்த்திக்
விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், அஸ்வின், ஆதித்யா பாஸ்கர், வாணி ஸ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘ஹாட்ஸ்பாட் 2’.
கடந்த ஜனவரி 23 ஆம் தேதி வெளியான இந்தப் படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நேற்று (ஜன. 29) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட விக்னேஷ் கார்த்திக், "படத்தின் கதாநாயகன் அஸ்வினை பற்றி கூற வேண்டும் என்றால் கடந்த காலகட்டத்தில் அவர் ஒரு சினிமா நிகழ்ச்சியில் ’கதை கேட்கும் போது தூங்கி விடுவேன்’ என பேசி இருந்தார்.

அப்போது எனக்கு அவர் மேல் கோபம் இருந்தது. அதை வெளிப்படையாகவும் சமூக வலைதளங்களில் பேசியிருந்தேன்.
இருந்தப் போதிலும் இந்தக் கதையினை யோசிக்கும் போது அஸ்வின் இருந்தால் நன்றாக இருக்கும் என தோன்றியதால் அவரிடம் கதை சொல்ல வேண்டும் என சென்றேன்.
கதை கூற செல்லும் போதே உங்களைப் பற்றிய விமர்சனங்களை சமூக வலைதளங்களில் முன் வைத்திருக்கிறேன் என்று நானே அவரிடம் கூறிவிட்டேன்.
ஏனெனில் இது குறித்து வேறு யாராவது அவரிடம் கூறினால் எங்கள் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுவிடும் என்பதால் நானே அவரிடம் தெரிவித்து விட்டேன்.
படப்பிடிப்பு தளத்தில் அஸ்வினை பார்க்கும் போது என்னை பார்ப்பது போல இருந்தது. நேரம் தவறாமையை அவர் கடைப்பிடித்தார். நிச்சயம் அவர் மிகப் பெரிய உயரத்திற்கு செல்வார் அதில் மாற்றுக் கருத்து இல்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

இதனைத்தொடர்ந்து ‘ஹாட்ஸ்பாட் 2’ மீது இருக்கும் விமர்சனங்களுக்கு பதில் அளித்த அவர், " சமூக வலைதளங்களில் அரை வேக்காடு பெண்ணியம் பேசக் கூடியவர்கள் சில காட்சிகளைப் பார்த்துவிட்டு, படம் தவறான படம், பெண்களுக்கு எதிராக இருக்கிறது என விமர்சனம் செய்து வருகிறார்கள்.
அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது சிறிய காட்சியை பார்த்து விமர்சனம் செய்யாதீர்கள். முழு படத்தையும் பார்த்து அதில் உங்களுக்கு தவறு இருந்தால் தாராளமாக தெரிவியுங்கள். விமர்சனம் செய்வதற்கு உங்களுக்கு எந்த அளவிற்கு உரிமை இருக்கிறதோ, எனக்கு பிடித்தது போல் திரைப்படம் எடுப்பதற்கு எனக்கும் உரிமை இருக்கிறது” என்று பேசியிருக்கிறார்.
















