Michael Review: ஆட்டத்தை நிறுத்திடாத பெரும் கலைஞனின் கதை - ஆனால் முழுமையான பயோபி...
100 கோடி இந்தியர்களை பாதிக்கும் `ஈரப்பத வெப்ப அலை' - காலநிலை மாற்ற விளைவும், தேவையான முன்னேற்பாடும்!
உலகில் அதிக வெப்பம் பதிவான 100 நகரங்களின் பட்டியலில் 98 நகரங்கள் இந்தியாவைச் சேர்ந்தவையாக உள்ளன. மத்திய அரசின் காற்றுத் தரக் குறியீடு தரவுகளின்படி, இதுவரை இல்லாத அளவு வெப்பம் பதிவாகியுள்ளதால், உலகளாவிய வெப்ப அலையின் மையப்பகுதியாக இந்தியா மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்சியஸ்க்கு அதிகமாகவும் சில இடங்களில் 45 டிகிரி செல்சியஸ்க்கு அருகிலும் பதிவாகியுள்ளது. நாடு முழுவதுமே வெப்பம் அதிகரித்து வருவதையே இந்த புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுவதாக வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த நிலையில், இந்தியாவில் வழக்கமாக கோடைக்காலங்களில் நிலவும் வறண்ட வெப்ப அலைகளை விட, பருவமழை காலங்களில் நிலவும் 'ஈரப்பத வெப்ப அலைகள்' (Moist Heatwaves) மிகவும் ஆபத்தானவை என்று சமீபத்திய ஆய்வு எச்சரிக்கிறது.
இங்கிலாந்தின் ரெடிங் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய ஆய்வாளர்கள் இணைந்து ஈரப்பத வெப்ப அலை குறித்த ஆய்வை மேற்கொண்டனர். அந்த ஆய்வின் முடிவு Climate Dynamics என்ற ஆய்விதழில் நடப்பாண்டின் தொடக்கத்தில் வெளியான ‘Anatomy of moist heatwaves in India during the summer monsoon season’ எனும் ஆய்வுக் கட்டுரையாக வெளியாகியிருக்கிறது.
அந்த ஆய்வுக் கட்டுரையில் `நமது உடல் வெப்பமடையும் போது, வியர்வை சுரந்து அது காற்றில் ஆவியாவதன் மூலமே உடல் தன்னைத் தானே குளிர்வித்துக் கொள்கிறது. ஆனால், இந்தியாவில் நிலவும் 'ஈரப்பத வெப்ப அலைகளால்' (Moist Heatwaves) பருவமழை காலங்களில் காற்றில் ஏற்கனவே ஈரப்பதம் (Moist) அதிகமாக இருக்கும். அதனால் உடலில் சுரக்கும் வியர்வை ஆவியாக முடியாது. வியர்வை ஆவியாகாததால், உடலின் குளிர்ச்சி நின்றுவிடும். இதனால் உடல் வெப்பநிலை மிக வேகமாக உயர்ந்து, சில மணி நேரங்களிலேயே வெப்பச் சோர்வு அல்லது மரணம் ஏற்படக்கூடும். இந்த ஆபத்தான வெப்ப அலைகள் எப்போது வரும், எங்கு தாக்கும் என்பதை இந்தியாவின் பருவமழைதான் (Monsoon) தீர்மானிக்கிறது என்பதை 80 ஆண்டுகால தரவுகள் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

வட இந்தியாவில் பருவமழை தீவிரமாக இருக்கும்போது, இந்த ஈரப்பத வெப்ப அலை உருவாகும் வாய்ப்பு 125% அதிகரிக்கிறது. இந்த வானிலைப் போக்கை 2 முதல் 4 வாரங்களுக்கு முன்னதாகவே துல்லியமாகக் கணிக்க முடியும். இதன் மூலம் பொது நிகழ்வுகளைத் திட்டமிடவும், மருத்துவத் தயார் நிலையில் இருக்கவும் கால அவகாசம் கிடைக்கும். வழக்கமான வெப்பநிலையை விட, ஈரப்பதத்தையும் சேர்த்து கணக்கிடும் 'வெட்-பல்ப்' முறையே மனித உடலின் பாதிப்பை அளவிடச் சரியான வழியாகும். உதாரணமாக, வெப்பநிலை 34°C ஆக இருந்து, காற்றில் 70% ஈரப்பதம் இருந்தால், அது உங்கள் உடலுக்கு 42°C வெயிலில் இருப்பது போன்ற பாதிப்பைத் தரும்.
இந்த வெப்ப அலையால் வயல்வெளியில் வேலை செய்யும் விவசாயிகள், கட்டுமானத் தொழிலாளர்கள், AC வசதி இல்லாத வீடுகளில் வசிக்கும் முதியவர்கள் மற்றும் நகர்ப்புற ஏழைகள், பொதுக்கூட்டங்கள் அல்லது விளையாட்டுகளில் பங்கேற்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.' எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த ஆய்வு தொடர்பாக, இந்த ஆய்வை வழிநடத்திய முனைவர் அக்சய் டியோரஸ், ``இது பெரும்பாலான இந்தியர்களுக்குத் தயாராகத் தெரியாத அச்சுறுத்தல். இந்தியாவில் கொடிய கோடைகாலம் காரணமாக மக்கள் பெரும்பாலும் வறண்ட வெப்ப அலைகளின் தாக்கத்தை அதிகமாக அறிந்திருக்கின்றனர். ஆனால் ஈரப்பதத்துடன் கூடிய வெப்பத்தின் தாக்கம் குறித்து குறைவாகவே அறிந்துள்ளனர். எனவே, இனி நம்மால் 2 - 4 வாரங்களுக்கு முன்பே இதை அறிந்துகொள்ள முடியும்.
அதனால், ஈரப்பதத்துடன் கூடிய வெப்ப அலை பற்றிய முன்னறிவிப்பு, கிரிக்கெட் போட்டிகள் மற்றும் பிற பெரிய கூட்டங்கள் போன்ற பொது நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்கள் மறுதிட்டமிட, இடைவேளைகளை நீட்டிக்க, மற்றும் பங்கேற்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களைப் பாதுகாக்கும் வகையில் மருத்துவ ஏற்பாடுகளை வலுப்படுத்த உதவலாம்.
இந்த ஆய்வின் மிகவும் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பு என்னவெனில், ஈரப்பதத்துடன் கூடிய வெப்பத்தை ஏற்படுத்துவதில் மட்டுமன்றி, இந்தியாவில் அது எங்கே மிகவும் ஆபத்தாக இருக்கும் மற்றும் எப்போது தாக்கும் என்பதைத் தீர்மானிப்பதிலும் பருவமழையின் பங்கு உள்ளது என்பதுதான்.
தீவிரமான பருவமழை காலத்தில், மத்திய மற்றும் வட இந்தியாவில், குறிப்பாக அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட கங்கைச் சமவெளி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்யும்போது, அப்பகுதி ஈரப்பத வெப்ப அலைகளின் அதிகரித்த ஆபத்தை எதிர்கொள்கிறது. பருவமழையானது ஒரு காலநிலை அடிப்படையிலான வறண்ட பகுதியை திடீர் தீவிர ஈரப்பதத்தால் நிரப்புகிறது. அருகே மழை பெய்தாலும் கூட ஈரப்பதத்தை உடலியல் ரீதியாக ஆபத்தான அளவுக்குத் தள்ளுகிறது. பருவமழையின் பெரிய அளவிலான ஏற்ற இறக்கத்தின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், வட இந்தியாவில் வெப்ப அலை நிகழ்வு இயல்பான அளவை விட 125% அதிகரிக்கிறது.
பருவமழை இடைவேளைகளில், மழை தணியும்போது, இந்த அபாயம் தெற்கு மற்றும் கிழக்கு நோக்கி, குறிப்பாக தமிழ்நாடு உட்பட தீபகற்ப இந்தியா மற்றும் கிழக்குக் கடலோரம் நோக்கி நகர்கிறது.

இங்கே, ஆண்டு முழுவதும் ஏற்கெனவே ஈரப்பதம் நிறைந்த சூழல் இருக்கும் நிலையில், மேக மூட்டம் மற்றும் மழை இல்லாமல் இருப்பது மேற்பரப்பு வெப்பத்தை குவியவிடுகிறது. இதனாலும் வெப்ப அலைகள் அதிகரிக்கின்றன.
ஈரப்பத வெப்ப அலைகளால் பாதிக்கப்படுபவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் முன்னரே மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். நகர அதிகாரிகள் குளிரூட்டல் மையங்களைத் திறக்கவும், பள்ளி நேரங்களை மாற்றியமைக்கவும் உதவலாம். மின்சார கட்டமைப்பின் அழுத்தத்தை நிர்வகிக்க மின் கட்டமைப்பு ஆபரேட்டர்களுக்கு உதவலாம்.
வீடுகள், அலுவலகங்களுக்குள் இருந்து பணியாற்ற வாய்ப்பில்லாதவர்கள்தான் ஈரப்பத வெப்ப அலையால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள். உத்தரப்பிரதேசம் மற்றும் பிகாரின் வயல் வெளிகளில் பணியாற்றும் விவசாயத் தொழிலாளர்கள், டெல்லி மற்றும் மும்பையின் கட்டுமானத் தொழிலாளர்கள், ஏர்-கண்டிஷனிங் இல்லாத வீடுகளில் வயதானவர்கள், மற்றும் சூரியன் மறைந்த பிறகும் நீண்ட நேரம் வெப்பத்தைத் தக்கவைக்கும் கான்கிரீட் நகரங்களின் நகர்ப்புற ஏழைகள் உள்ளிட்ட கோடிக்கணக்கானோர் இதனால் பாதிக்கப்படுகின்றனர். ஏற்கெனவே, தமிழ்நாடு நீண்ட கடற்கரையைக் கொண்டிருப்பதால் ஆண்டுதோறும் இங்கு ஈரப்பதம் அதிகரித்தே காணப்படுகிறது." என்றார்.
இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டுவிழா 06.10.2024 அன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் காலை 11 மணி முதல் 1 மணிவரை இந்திய விமானப்படையின் பல்வேறு விமானங்கள் கலந்துகொண்டு சாகச நிகழ்வுகளை நடத்தின.
இந்த Airshow வை பார்வையிட மொத்தம் 13 லட்சம் பேர் கூடினர். கடற்கரைக்குச் சென்றவர்களில் வெப்பம் மற்றும் கூட்ட நெரிசலின் காரணமாக 5 பேர் உயிரிழந்தனர், 200க்கும் மேற்பட்டோர் மயங்கினர். இந்நிகழ்வானது கோடைகாலம் அல்லாத அக்டோபர் மாதம் நடைபெற்றதுதான் அனைவருக்கும் வியப்பை உண்டாக்கியது.
அன்றைய நாள் சென்னை நுங்கம்பாக்கத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.3 °C ஆகும். வெய்யிலின் தாக்கம் அதிகம் இருந்ததற்கு முக்கிய காரணம் Wet Bulb Temperature. அதாவது வெயிலுடன் அதீத ஈரப்பதமும் சேரும்பொழுது அது உடலில் வெய்யிலின் தாக்கத்தை அதிகரிக்கிறது. 34°C வெய்யில் அடிக்கும் போது ஈரப்பதம் 70% க்கு மேல் இருந்தால் அது 42°C வெய்யிலுக்கு இணையான தாக்கத்தை உடலில் ஏற்படுத்தும். Wet Bulb Temperature 32°C இருக்கும்போது ஆரோக்கியமான மனிதர்கள்கூட அந்த வெயிலை 6 மணி நேரம் மேல் தாங்க முடியாது. ஏற்கெனவே உடல் பலவீனமானவார்கள் சில மணி நேரத்திலேயே உயிரிழக்கக் கூடும். எனவே தமிழ்நாட்டில் ஈரப்பத வெப்பநிலையை எதிர்கொள்ள அரசு தயாராவது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.












