செய்திகள் :

`15 டன் கடுக்காய், 20 டன் கருப்பட்டி,180 டன் சுண்ணாம்பு'- புதுப்பொலிவுடன் புதுக்கோட்டை நீதிமன்றம்

post image

புதுக்கோட்டைக்கு எப்போதும் ஒரு தனித்துவமான வரலாறு உண்டு. அந்த மண்ணின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் கல்வெட்டுகளைவிடவும், இன்று அதன் மார்பின் மேல் உயர்ந்து நிற்கும் 'பப்ளிக் ஆபீஸ்' கட்டடம் என்று அழைக்கப்படும் தற்போதைய மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் பொலிவு நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. 140 ஆண்டுகளுக்கு முன்னால் புதுக்கோட்டை மன்னரின் காலத்தில் கட்டப்பட்டு, காலத்தால் சிதிலமடைந்த கட்டடம் அதன் மரபு சிதையாமல் மீண்டும் கட்டி எழுப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை நீதிமன்றக் கட்டடம்
புதுக்கோட்டை நீதிமன்றக் கட்டடம்

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் நவீனச் சிற்பி எனப் போற்றப்படும் திவான் சேஷைய்யா சாஸ்திரியின் தொலைநோக்குப் பார்வையில் 1878-1883 காலகட்டத்தில் உருவானதுதான் இந்தக் கட்டிடம். 'வருவாய் மற்றும் நீதித்துறை என நிர்வாகத்தின் அனைத்து அங்கங்களும் ஒரே கூரையின் கீழ் இயங்க வேண்டும்' என்ற அவரது லட்சியத்தை, உலகப்புகழ் பெற்ற பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர் ராபர்ட் சிஷோம் இந்தோ-சாரசெனிக் பாணியில் கட்டினர். சுமார் 12 ஏக்கர் வளாகத்தில், 1,00,143 சதுர அடி பரப்பளவில் இந்த பிரமாண்டம் விரிந்து கிடக்கிறது. சதுர வடிவிலான இந்தக் கட்டடத்தின் மையத்தில் 63 மீட்டர் நீளமுள்ள 'வானம் பார்த்த முற்றம்' அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு பிரமாண்ட கோபுரங்கள், 25 சிகரங்கள் மற்றும் 'ரூக்' (Rook) வகை சுருள் படிக்கட்டுகள் இதன் தனிச்சிறப்பாக இருக்கின்றன.

சுமார் 140 ஆண்டுகள் கடந்த நிலையில், காலப்போக்கில் பராமரிப்பு இல்லாமலும் இயற்கையின் சீற்றத்தாலும் சுவர்களில் ஆலமரங்கள் வேர்விட்டு, மேற்கூரைகள் நலிந்து கட்டடம் சிதிலமடையத் தொடங்கியது. "நம் அடையாளத்தை இழக்கப் போகிறோமோ?" என்று எண்ணிய புதுக்கோட்டையின் பொது நல அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் குரல் எழுப்பினர். அவர்களின் குரலுக்கு செவிசாய்த்த தமிழ்நாடு அரசு ரூ.14.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, பொதுப்பணித்துறையின் மரபுக் கட்டடங்கள் கோட்டம், சென்னை வசம் இப்பணியை ஒப்படைத்தது. பிப்ரவரி 03, 2024 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, ஏப்ரல் 25, 2026 அன்று பணிகள் முழுமையாக நிறைவடைந்து திறப்பு விழா கண்டுள்ளது இந்த நீதிமன்றக் கட்டடம். இப்போது இந்த வளாகம் 14 நீதிமன்ற அறைகள் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய ஒரு முழுமையான நீதிபரிபாலன தலமாக புதுப்பொலிவுடன் ஜொலிக்கிறது.

இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் இதுகுறித்து நம்மிடம் பகிர்ந்து கொள்ளும்போது,

'இதுல முதல் சவாலே மெட்டீரியல் கலெக்சன் தான். ஏன்னா, இந்தக் கட்டடம் முழுசாவே சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டி போன்ற பொருட்களைக் கொண்டுதான் அப்போ கட்டப்பட்டிருக்கு. இப்போ காலப்போக்குல நாம சிமென்ட், ஸ்டீல்னு மாறிட்டோம். அதனால, பழைய முறைப்படி வேலை செய்யத் தெரிஞ்ச ஆட்களைப் பிடிக்கிறதுதான் எங்களுக்கு ரொம்ப சவாலா இருந்தது. ஏன்னா, சிமென்ட் பூசுறது ரொம்ப சுலபமான வேலை. ஆனா, இந்தப் பழைய கட்டுமானத்தோட சிமென்ட் ஒட்டாது. அதோட தன்மையே வேற. அதனால பழைய முறையிலேயே சுண்ணாம்பு கலவையைத் தயார் செஞ்சோம். இந்த கடுக்காய், கருப்பட்டி இதையெல்லாம் இப்போ மக்கள் சும்மா சாதாரணமா வச்சிருக்காங்க. ஆனா, நாம பல இடங்கள்ல இருந்து அதைத் தேடிப்பிடிச்சு சேகரிச்சோம். இதுதான் இந்தத் திட்டத்தோட முக்கியமான விஷயம். கிட்டத்தட்ட 15 டன் கடுக்காய் , 20 டன் கருப்பட்டி, 180 டன் சுண்ணாம்பு இதுல பயன்படுத்தியிருக்கோம். சிமென்ட் ஒரு துளி கூட இதில் கலக்கப்படலை.

புதுக்கோட்டை நீதிமன்றக் கட்டடம்
புதுக்கோட்டை நீதிமன்றக் கட்டடம்

இதுல இன்னொரு ஹைலைட்டான விஷயம் என்னன்னா, இங்க இருந்த மெட்ராஸ் டெரஸ் ரூஃப் (Madras Terrace Roof) தான். இப்போ நாம பண்ற மாதிரி ஆர்.சி.சி (RCC) கான்கிரீட் ரூஃப்லாம் அப்போ கிடையாது. இதுல கட்டை (Beams), அதாவது உட் போட்டுட்டு, கண்டிக்கல் அப்படின்னு ஒரு கல் இருக்கு, அதை சித்துக்கல்னு சொல்லுவாங்க. அது வந்து ஹேண்ட்மேட் டைல் செங்கல் மாதிரியே இருக்கும். அந்த கல்லை வச்சு ஒட்டுவோம். ஒரு நாலு லேயர் ஒட்டி, ஒரு அடிக்கு அந்த ரூஃப் இருக்கும். அது எல்லாமே இப்போ நாம இதுல பண்ணிருக்கோம். அது முழுசாவே டேமேஜாதான் இருந்தது. அந்த ரூஃப் எல்லாத்தையுமே எடுத்துட்டு, இப்போ புதுசா அதே மாதிரி பண்ணிருக்கோம். கடுக்காய்,கருப்பட்டியை அந்தக் காலத்துல மாடுகளை வச்சு செக்குல ஆட்டித்தான் இந்தக் கலவையைத் தயாரிப்பாங்க. ஆனா இப்போ கால தாமதத்தைத் தவிர்க்க, பெரிய கிரைண்டர்களைப் பயன்படுத்தி சுண்ணாம்பு, சுத்தமான ஆற்று மணல், கடுக்காய், கருப்பட்டி ஆகியவற்றை அரைச்சு எடுத்தோம். இந்தக் கலவையை நாம உடனே பயன்படுத்த முடியாது. 15 நாளைக்கு முன்னாடியே ஊற வச்சு, ஒரு வாரத்துக்கு ஒருமுறைன்னு நாலு தடவை அரைச்சுப் பக்குவப்படுத்தணும். அப்புறம் கடுக்காய் தண்ணி, கருப்பட்டி தண்ணியையும் அதோடு சேர்த்துப் புளிக்க வச்சுத்தான் பயன்படுத்தணும். இந்த வேலை தெரிஞ்ச ஆட்களைத் தேடி கோவில்பட்டி, காஞ்சிபுரம், கும்பகோணம் பக்கமிருந்து ஆட்களைக் கொண்டு வந்தோம்.

அவங்ககிட்ட இருந்து நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டோம். முக்கியமா செட்டிநாடு (காரைக்குடி) பகுதியில நிறைய பேர் இருக்காங்க. 'காரை' அப்படின்னாலே சுண்ணாம்புன்னு ஒரு அர்த்தம் உண்டு. அந்தப் பகுதியில சுண்ணாம்பு வீடுகள் அதிகமா இருக்கிறதாலதான் அந்த ஊருக்கே 'காரைக்குடி'ன்னு பேரு வந்ததாவே ஒரு தகவல் இருக்கு. இப்படிப் பழைமை மாறாம செஞ்சாதான் இந்த பாரம்பரியக் கட்டடம் இன்னும் பல வருஷங்களுக்கு உறுதியா இருக்கும். அதை சிறப்பாகச் செய்து முடித்திருக்கோம்.

ஒரு பழைமையான வரலாற்றுப் பாரம்பரிய கட்டடத்தை மீட்புப் பணியில் இறங்கும்போது அந்தக் காலத்து மனிதர்களின் சமூகவியல், வரலாறு,உணர்வுகள்,ரசனைகள் இவற்றை எல்லாம் முதலில் தேடி படிச்சுப்பார்க்கனும்னு எங்களுக்கு டிபார்மென்ட்டில் பாடமே நடத்தியிருக்காங்க. அதன்படி இந்தக் கட்டடம் கட்டப்பட்ட காலத்தில் இருந்த புதுக்கோட்டையின் வரலாற்றுப் புத்தகங்களை தேடி படிச்சுப் பார்த்திட்டுத்தான் அந்தக் கால மனிதர்களின் உணர்வோடதான் இந்த வேலையை ஆரம்பிச்சோம்..." என்று ஆச்சரியப்படுத்துகிறார்கள் இந்த கன்ஸ்ட்ரக்ஸன் குழுவினர்.

கடுக்காய்

ஓய்வு பெற்ற வரலாற்றுத் துறை பேராசிரியருமான சா.விஸ்வநாதன் இது குறித்து பேசும் போது,

"இது வெறும் கட்டடம் அல்ல. நம் முன்னோர்கள் ரத்தமும் வியர்வையும் சிந்தி நமக்கு விட்டுச் சென்ற வரலாற்றுப் பெருமை. அதைக் காப்பது நம் கடமை.இதனை சிறப்பாக செய்துமுடித்த அத்துணை பேருக்கும் புதுக்கோட்டை எப்போதும் நன்றியைச் சுமந்திருக்கும்...' என்றார்.

"தொழில்நுட்பங்கள் எவ்வளவுதான் விண்ணைத் தொட்டாலும், நம் பாட்டன் பூட்டன் பயன்படுத்திய அதே 'பாரம்பரிய அறிவு' தான் இன்றும் இந்த பிரமாண்டத்தைத் தாங்கிப் பிடிக்கிறது. அதற்கு செயல்வடிவம் கொடுத்து இந்தப் பணியில் ஆர்வமுடன் களமிறங்கியுள்ள பொதுப்பணித்துறையின் சென்னை, மரபு கட்டடங்கள் கோட்டத்தின் பணி போற்றுதலுக்கும் பாராட்டுக்கும் உரியது. இந்தத் துறையின் மூலம் சிதிலமடைந்த நிலையில் உள்ள நம் மரபு சார்ந்த பழைய கட்டிடங்களை பாரம்பரியம் சிதையாமல் புதுப்பிக்க முடியும் என்ற நம்பிக்கை இப்போது ஏற்பட்டிருக்கிறது. " என்கிறார்கள் புதுக்கோட்டையின் தொல்லியல் துறை ஆர்வலர்கள்.

'தமிழகத்திலிருந்துதான் தேர்தல் முறை உலகமெங்கும் சென்றது'- தொல்லியல் துறை சி.சுதாகர்

இங்கு மக்களை நெறிப்படுத்துவதற்காகவே தலைவர்கள் உருவாக்கப்பட்டார்கள். அவ்வாறு உருவாக்கப்பட்ட தலைவர்கள் தங்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காக ஆதரவாளர்களைத் திரட்டி, ஆயுதம் ஏந்தவும் துணிந்தார்கள். இவ்வாறே மன்... மேலும் பார்க்க

''தண்ணீரிலே மூழ்கிடிச்சி'' - கிராம மக்களின் இடப்பெயர்வு; சாட்சிகளிடம் நேர்காணல் | அணை ஓசை 15

ஏழு வருடங்களில் அணைச்சுவரைஅரசுக்கு அனுப்பிய அறிக்கைசிறப்பு அதிகாரி அரசுக்கு அனுப்பிய ஓர் அறிக்கை இவ்வாறு தெரிவிக்கிறது. “மேட்டூர் கிராமத்திற்கு வடபுறம் பழைய மண்ணாலான கோட்டை ஒன்று ‘காவேரிபுரம்’ மற்றும்... மேலும் பார்க்க

`வருகிற மொத்த பணத்தையும் செலவு பண்ணிட மாட்டாங்க' - அந்தக் கால 'சத்திரங்களின்' நிதிக் கணக்கு!

சத்திரம் - இந்த வார்த்தையை நாம் அதிகமாகக் கேள்விப்பட்டிருப்போம். வகுப்பறையில் ஆசிரியர், "இது ஒன்றும் சத்திரம் கிடையாது?" என்பார், மக்கள் பேச்சு வழக்கில் சத்திரம் என்ற வார்த்தையை அதிகமாகப் பயன்படுத்துவ... மேலும் பார்க்க

புலம்பெயர்வு: கண்ணீர் வரவழைக்கும் பல கதைகள்; பாதிக்கப்பட்ட கிராமங்கள் | அணை ஓசை 14

தொடருக்காக நேர்காணல்புலம்பெயர்வுகண்ணீர் வரவழைக்கும் பல கதைகள் இருந்தன. மேட்டூர் அணை கட்டப்படுவதால் தங்கள் நிலங்களை இழந்த விவசாயிகள், கிராமங்களில் வாழ்ந்து வந்த பொதுமக்கள், முதியவர்கள், தங்கள் குழந்தை ... மேலும் பார்க்க

நிலம் கையகப்படுத்துதல்: 18,435.84 ஏக்கர்கள் நிலம்; 4,146 வீடுகள் | அணை ஓசை 13

மக்களின் நில இழப்பு, இடப்பெயர்ச்சிமேட்டூர் அணை கட்டுமானம் குறித்த வரலாற்று நிகழ்வுகளில், இத்தொடரின் முக்கிய நோக்கங்களில் ஒன்றான விவசாய மக்களின் நில இழப்பு, இடப்பெயர்ச்சி மற்றும் அவர்களின் துயரங்கள் கு... மேலும் பார்க்க

சிமெண்ட் போக்குவரத்துக்காக ரயில் பாதை, டிராம்வே - எளிதில் நிஜமான கனவு! | அணை ஓசை 12

சிமெண்ட் போக்குவரத்துரயில் பாதை கட்டமைப்புஅணை கட்டுமானத்திற்கு தேவையான சிமெண்ட், இயந்திரங்கள், உணவுப் பொருட்கள், கல், மணல் போன்ற பெருமளவிலான பொருட்களை எளிதாகக் கொண்டுவர போக்குவரத்து வசதிகள் மிக அவசியம... மேலும் பார்க்க